நல்லறம் போற்றும் இல்லறத்தின் தலைவன் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய கடமைகளாகத் திருவள்ளுவர் சிலவற்றை வகுத்துத் தருகிறார். இல்லறத் தலைவன் அன்புடையவனாகவும், நல்வழியில் நடக்க கூடியவனாகவும் இருத்தல் வேண்டும். அவனது முதல் கடமை பொருள் ஈட்டுதல், அதனை நேர்மையான வழியில் ஈட்டவேண்டும். தான் ஈட்டிய பொருளை ஏனையோர்க்குப் பகுத்துக் கொடுத்து உதவுதல் வேண்டும்.
“ஒற்றைக் குடும்பந் தனிலே – பொருள்
ஓங்க வளர்ப்பவன் தந்தை”
என்பார் பாரதியார். ‘பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும் பொருளை’ அருளோடும் அன்போடும் ஈட்ட வேண்டும்.
“செய்க பொருளை; செறுநர் செருக்குஅறுக்கும்
எஃகுஅதனின் கூரியது இல்” (759)
என்று பொருளின் அவசியத்தை வலியுறுத்துவார் வள்ளுவர். தமது கடின முயற்சியால் தேடுகின்ற பொருள் தீயவழியில் வருவதாக இருக்கக் கூடாது வாழ்க்கைக்குப் பொருள் மிக முக்கியம். அதனை நல்ல வழியில் தேடுதல் வேண்டும்.
“அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து
தீதுஇன்றி வந்த பொருள்” (754)
ஒரு குடும்பத் தலைவனுக்கு அழகு நேர்மையான வழியில் பொருளீட்டுவதும் ஈட்டிய பொருளின் ஒரு பகுதியை வறியவர்க்கு ஈவதும். அற்றார் அழிபசி தீர்க்கும் வகையில் கைம்மாறு வேண்டாக் கடப்பாடுடன் உலக நடைமுறையறிந்து எல்லோர்க்கும் பயன்படும் வண்ணம் பகுத்துக் கொடுத்தலும் இல்லறத் தலைவனின் கடமைகள்.
இல்லற வாழ்வை இனிமையாக்க வந்துள்ள வாழ்க்கைத் துணையான மனைவியிடம் அன்பின் பாத்திரமாக இருந்து அவள் தேவையறிந்து பேணிப் பாதுகாப்பவனாகத் தலைவன் இருக்க வேண்டும்.
“சான்றோன் ஆக்குவது தந்தைக்குக் கடனே” எனும் பொன்முடியார் வாக்கிற்கு இணங்க அறிவுள்ள மக்களைப் பெறுவதும் அவ்வாறு பெற்ற மக்களை நல்ல கல்வி கேள்விகளில் சிறக்கச் செய்து கற்றோர்தம் அவையில் முதன்மைப் பெறச் செய்வதும் தந்தையின் கடமைகள் ஆகும்.
“தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்” (67)
“தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க்கு எல்லாம் இனிது” (68)
என்பது போல தம்மை விட அறிவிலும், ஆற்றலிலும் உலகம் மதித்துப் போற்றும் வண்ணம் வளர்த்தலும் பெற்றோரின் கடமை ஆகும்.
2928total visits,1visits today