வள்ளுவர் வழி உலக மக்கள் அனைவரும் ஏற்றிப் போற்றும் பொது நெறி. மனித குலம் வாழும் வரை, எக்காலத்தும், எந்நாட்டினராலும், என்றும் போற்றப்படும் அறநூல், மறைநூல் திருக்குறள். ஒவ்வொரு மனிதனும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கு வகுக்கப்பட்டது வள்ளுவர் வழி.
மனிதன் குறிக்கோளுடன், நல்ல இலட்சியத்துடன் வாழ வேண்டும் என்று நடைமுறைத் திட்டங்களை வகுத்து வாழ வழிகாட்டுவது வள்ளுவம். பல்வேறு துறைகளில் வாழ்பவர்களுக்கும் அந்தந்தத் துறைக்கு ஏற்றாற்போல் அறவழி காட்டிடும் ஆன்றோர் திருவள்ளுவர். மன இருள் நீக்கி இன்பம் பயப்பது; மருள் நீக்கி மாசறு காட்சி நல்குவது வள்ளுவர் வழி. வள்ளுவத்திற்கு இணையாக ஒரு நூல் இவ்வுலகில் இல்லை என்று மேலைநாட்டு அறிஞர்கள் எல்லாம் வியக்கின்றனர்; வள்ளுவர் வழி வாழ வலியுறுத்து கின்றனர்.
மக்கள் அனைவரும் நாள்தோறும் நாடி வள்ளுவர் வழியைப் பின்பற்றினால், உலகில் நிலவும் பல்வகைக் கொடுமைகளும், தீமைகளும் நீங்கி நன்மையும் இன்பமும் பெருகும்; அல்லவை தேய அறம் பெருகும். தற்போது நாம் வாழும் காலத்தில் அமைதி குறைந்து பகைமையும் தீவிரவாதமும் பெருகி வன்முறைச் சம்பவங்கள் நம்மை அச்சுறுத்தும் வகையில் பெருகியிருக்கின்றன. வள்ளுவத்தைப் பயின்றால், பகை நீங்கி மனித நேயம் மலரும். ‘ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான், செத்தாருள் வைக்கப் படும்’ (214) என்பது உணர்ந்து, உலகம் தழுவிய ஒட்பம் மிகுந்திருக்கும் நன்மையும் தீமையும் நாடி நலம் புரியும் தன்மையால் ஆளப்படும் நிலை உருவாகும்.
திருக்குறள் மனித குலத்திற்கு நல்வழி காட்டும்; தடுமாறி நிற்கும் கப்பலுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம் போல், தடுமாறி நிற்கும் மனித குலத்திற்கு வழிகாட்டும் ஒளிவிளக்காய் முழுமையான அறநூலாய் நல்வழி காட்டும்.
வள்ளுவர் வழி நடந்தால் மனித மனத்தில் மிருக உணர்வுகள் குறைந்து, அரக்க குணம் அழியும்; தெய்வத் தன்மை மிகுந்து நல்ல மாந்தர் பண்புகளைப் பெற்று, அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை மிக்கவர்களாக, நல்லுணர்வு மிகுந்தவர்களாக, அறிவுடைமை யுடன் எல்லா நலமும் இன்பமும் பெற்று தமக்கென மட்டும் வாழாது, மனித நேயத்துடன் பிறர்க்கென வாழும் பெருமை பெற்று புகழுடன் வாழ்வர்.
வள்ளுவர் வழி நடந்தால் தனிமனிதர்கள் மனத்தில் மாசு நீங்கி, பொறாமை, கடுங்கோபம், பேராசை, கடுஞ்சொல் நீங்கி ஆக்கம் தரும் அற வாழ்வு வாழலாம்.
அரிய தத்துவங்களையும், ஆழமான சிந்தனைகளையும் உலகத்தினர் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் அனுபவக் கடலாக விளங்கும் வள்ளுவர் வழிநின்றால், வையத்துள் துன்பம் நீங்கி அமைதியுடன் வாழலாம்.
சமுதாயத்தில் உடற்பிணி, உள்ளப்பிணி, வறுமை, பசிப்பிணி, செறுபகை, பல்குழுக்கள், பாழ் செய்யும் உட்பகை, கொல் குறும்பு இல்லாததாக, தேடாமலே பெறும் செல்வ நாடாக, செல்வம், விளைவு, மகிழ்ச்சி, உள்நாட்டுப் பாதுகாப்பு, வெளிநாட்டுப் பாதுகாப்பு மிக்கதாய் நாடு விளங்க வேண்டும் என வள்ளுவர் ஆட்சி செய்வோர்க்கு வழிகாட்டுவார்; ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என ஏற்றத்தாழ்வில்லாத, உயர்வு, தாழ்வு இல்லாத சமுதாயத்தை உருவாக்க வழிகாட்டுவார்.
உலகில் வாழும் மக்கள் பல்வேறு துறைகளில், பல்வேறு நிலைகளில் வாழ்பவர்கள். அவர்களுக்கு ஏற்றவாறு அறநெறிகளை, அறவழிகளைப் போதித்தவர் வள்ளுவர். வள்ளுவர் வழி வாழ்பவர்கள், தெய்வநிலையில், உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளி, எண்ணியதெல்லாம் எண்ணியாங்கு பெற்று வாழ்வர். பெருமைக்கும், ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல் என உணர்ந்து, புகழ்ந்தவை போற்றி, செயல் செய்து, வள்ளுவர் வழி நிற்பவர்கள் உயர்வடைவார்கள்.
வள்ளுவம் ஒரு வாழ்வு நூல், பயன்பாட்டு நூல், செயல் நூல், வள்ளுவர் வழியில் வாழ்பவர் வாழுங் காலத்திலே தெய்வநிலை பெறுவர். தன்னுயிர் தானறப் பெற்று வாழும் இவர்களை, மன்னுயிர்கள் எல்லாம் தொழும்; வணங்கும்; இவர்கள் என்றும் இறவாப் புகழ் பெற்று வாழ்வர்.
தேராமல், ஆராயாமல் எப்பணியையும், பொறுப்பையும் யாருக்கும் அவசரப்பட்டோ, அன்பாலோ, மயக்கத்தாலோ கொடுத்துவிடக் கூடாது. தேரான் தெளிவு தீராத இடும்பையை, துன்பத்தைத் தரும் என்று எச்சரிப்பார் வள்ளுவர்.
தொழில், வாணிகம், அரசுத்துறை, நாடாளுமன்றம், சட்டமன்றம், எத்துறையாயினும் அத்துறைக்கு ஏற்ற தகுதியும், நேர்மையும், ஒழுக்கமும், பொறுப்புணர்வும் உழைப்பும் உள்ளவரா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
தகுதியில்லாத ஒருவரை அன்பின் காரணமாக அல்லது உறவின் காரணமாக, விருப்பத்தின் காரணமாக, பரிந்துரையின் காரணமாகப் பணியில் அமர்த்தினால் துன்பமும் கேடும் நிகழும். தகுதியும் ஆற்றலும் பொறுப்பும் இல்லாதவன். செயல் ஆற்றும் வல்லமை இல்லாததால், எடுத்த காரியத்தில் தோல்வியும், நட்டமும், தீமையும் ஏற்பட்டுவிடும். அவனைத் தேர்ந்தெடுத்தவர்களும் பேதைமை உடையவர், விவரம் இல்லாதவர் என்ற அவப் பெயரையும் பெற நேரிடும்.
“காதன்மை கந்ததா அறிவுஅறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாம் தரும்” (507)
என்பார் வள்ளுவர்.
உறவினர், நண்பர், வேண்டியவர், செல்வாக்கு உள்ளவர், பரிந்துரை பெற்று வந்த நபர், இவர்கள் தகுதியற்றவராய், அறிய வேண்டியவற்றை அறியாதவர் களாய் அமைந்துவிட்டால் பெருந்தீமை விளையும், நட்டம் ஏற்படும். பாசத்தின் காரணமாக, அன்பின் காரணமாக இவர்களை நியமித்தால், பணியில் அமர்த்தியவர்களை மற்றோர் அறிவில்லாத மடையர் எனத் தூற்றுவர்.
இதுபோல, முன்பின் தொடர்பில்லாத அயலாரை, வெளிநாட்டினரை வெறும் கவர்ச்சியான பட்டங்களையும், தோற்றத்தையும் கொண்டு அவசரமாக, ஆராயாமல் நம்பிப் பொறுப்பை, பணியை ஒப்படைத்தால், அவ்வாறு ஒப்படைத்தவனுக்கு மட்டுமன்றி அவன் வழிவழி வரும் பரம்பரையினர்க்கும் துன்பம் வரும்.
“தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்” (508)
தன்னலம் மிக்கவர்கள், கொடியவர்கள், அறத்திற்கு, நல்ல நெறிகளுக்கு எதிராக வாழும் கயவர்கள், தொழிலுக்கு, வணிகத்திற்கு, நாட்டின் பொறுப்புள்ள பதவிகளுக்கு நியமிக்கப்பட்டால், தேர்ந்தெடுக்கப்பட்டால், தொழிற்சாலைகள், வணிக நிலையங்கள், அரசுத்துறை அனைத்தும் நிர்வாகச் சீர்கேட்டால் பாழ்பட்டு அழிந்துவிடும். இருட்டில் மறைந்திருப்பவர்களைக் கண்டுபிடிக்க ஒளிவிளக்கு வேண்டும். ஆகவே, இருள் சூழ்ந்த தன்மை மிக்கவர்களை, தகுதியில்லாத போலிகளை அடையாளங்காண வேண்டும். முறையாகத் தேர்வு ஆகிய ஒளிவிளக்கு ஏந்தி, தகுதியற்றவரை நீக்கி, தகுதியுடைய தக்கவரை அடையாளம் கண்டு தேர்ந்தெடுக்க வேண்டும். தகுதியுள்ளவர் என எப்படி ஆராய்ந்து தேர்ந்து எடுப்பது? குறிப்பிட்ட காலத்திற்குத் தற்காலிகமாக, கல்வித் தகுதியும் முன் அனுபவமும் உழைப்பும் உள்ளவனை பதவியில் அமர்த்த வேண்டும். அந்த குறிப்பிட்ட காலத்தில் அவன் எவ்வாறு வேலை செய்கிறான், எவ்விதமான வழிமுறைகளைப் பின்பற்றுகிறான், வரும் இடையூறுகளை, தடைகளை எவ்வாறு எதிர் கொள்கிறான், வெற்றி பெறுகின்றான், லாபம் ஈட்டுகிறான் என்பது அறிந்து அவன் செயலாற்றும் தகுதிக்கு உரிய பதவியில் அமர்த்தலாம். அதுபோல் தலைவர்களைத் தேர்வு செய்ய மக்கள் வாக்களிக்கும்போது தலைமைப் பொறுப்பு ஏற்பவன், அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் உடையவனா? விழிப்புணர்வு, விரைந்து செயலாற்றும் தன்மை, தியாகம், பொறுப்புணர்வு உள்ளவனா? என்று ஆராய்ந்து தேர்ந் தெடுக்க வேண்டும். இவ்வாறு ஆராய்ந்து தேர்ந்தெடுத்தால் தொழில், வாணிகம், அரசுத்துறை எதுவாயினும் அத்துறை செழிக்கும், சிறப்புப் பெறும்.
ஆகவே யாரையும் ஆராய்ந்து தேர்வு செய்க. தேர்வு செய்த பின் சந்தேகம் கொள்ளற்க. தேர்வு செய்து தேர்ந்தெடுக்கப் பட்டவருக்கு முழுப் பொறுப்பும் வழங்குக. இறுதியில் இலாபமும் வெற்றியும் கிடைக்கும் என்றெல்லாம் அன்றாட வாழ்க்கைக்கு – அரசுக்கு – நிருவாகத் துறைக்கு வழிகாட்டும் வாழ்வியல் நூலாக வள்ளுவம் விளங்குகின்றது.
7707total visits,3visits today