இல்லது என் இல்லவள் மாண்பானால்?’
பெண்மை உலகில் வாழும் உயிரினங்களுக்கு நன்மை வழங்குவது. பேரறிவும் பேராற்றலும் கொண்டது. அழகிய உருவகம், அன்பின் ஊற்று, பண்பின் இருப்பிடம். அனைத்து உயிர்களுக்கும் அன்னையாய் விளங்குவது போன்ற பெருமைகளையுடைய பெண், இல்வாழ்வுக்குத் தலைவியும் நல்ல துணையும் ஆகிறாள். வாழ்க்கைச் சக்கரத்தின் அச்சாணியும் அவளே!
“பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் & புவி
பேணி வளர்த்திடும் ஈசன்”
என்றும்,
“மற்றைக் கருமங்கள் செய்தே & மனை
வாழ்ந்திடச் செய்பவள் அன்னை”
என்றும் பாரதி பெண்மையைப் புகழ்ந்துரைப்பார். அத்தகைய பெண்மை இல்லத்துணையாக இருந்து நல்லறம் கூடிய இல்லறத்தை உருவாக்கிட அவளுக்கு உரிய கடமைகளைத் திருவள்ளுவர் வகுத்துத் தருகிறார்.
“மனைத்தக்க மாண்புஉடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை” (51)
மனையறத்திற்குத் தகுந்த மாட்சிமைகள் உடையவளாய், தனது கணவரின் வருவாய்க்குத் தக்க வாழ்க்கை நடத்தக் கூடியவளாய் இருப்பது மனை மாண்பு. நல்ல மனைவியாக இருப்பவள் எப்படி இருக்க வேண்டும்? குடும்பத்தின் கவலைகளை இலகுவாக்கக் கூடியவளாக, சலனமற்ற திண்மையும், அசைவற்ற உறுதியும் கொண்டவளாக இருக்க வேண்டும். இறைவன் மீது செலுத்துகின்ற பக்தியையும் அன்பையும் காட்டிலும் அதிக அன்பையும் பக்தியும் கணவன் மீது கொண்டவளாக இருக்க வேண்டும்.
இல்லறக் கடமை என்பது விரிந்து பரந்த ஒன்று. அதை முழுவதும் கணவனோடு இணைந்து செவ்வனே செய்து புகழ் பெற வாழ்வது இல்லாளின் கடமைகளில் சிறந்தது. அதுபோல் அவள் தன்னையும் காத்து; தன் கணவனையும் காத்து; குடும்ப பாரம்பரியப் புகழுக்கு ஊறுவராமல் குடும்பத்தைக் காக்கும் திறன் கொண்டவளாக இருப்பது பெருமைக்குப் பெருமை சேர்ப்பது போலாகும்.
“தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்” (56)
என்பார் வள்ளுவர். மேலும் தன்னை மனைவியாகப் பெற்ற கணவனை தனக்கு உரியவனாக அன்புகாட்டியும் அரவணைத்தும் பேணிக் காப்பவளாக இருப்பதும் தன் கணவனை உலகத்தார் போற்றிப் புகழ வேண்டும் என்ற எண்ணம் நிறைந்தவளாக இருப்பதும் தான் சீரிய இல்லறக் கடமையுடைய இல்லாளுக்குப் பெருமையுடையதும் மேலும் சிறப்பும் பெருமையும் கொடுப்பதும் ஆகும். ஒரு மனைவியின் மாட்சிமை மிகுந்த குணங்களே இல்லறத்திற்கு மங்கலமாகும். மங்கல வாழ்வின் நன்கலம் – அணிகலம் நல்ல மக்களைப் பெறுவது ஆகும்.
கணவனின் பெருமிதம், சிறப்பு இவற்றுக்கெல்லாம் பெரிதும் காரணம் அவனது மனைவியே. மனத்திண்மையும், ஒருமை மனமும், பொறுப்புணர்வும் மிக்கவள் மனைவியாக அமைந்துவிட்டால் கணவன் ஏறுபோல் பீடு நடைபோட்டு நடப்பான் என்பது நிச்சயம்.
1997total visits,2visits today