தெருவெல்லாம் தமிழிசை
செழிக்கச் செய்வோம்!’
ஆண்டுதோறும் தமிழிசை இயக்க மாநாடுகள் சென்னை, மதுரை முதலிய தமிழ்நாட்டு நகரங்களில் நடைபெறுகின்றன. தமிழிசை வல்லுநர்களும், அறிஞர்களும், வள்ளல்களும், கலைக்காவலர்களும் இவ்விழாக்களில் பங்கேற்க முறைப்படி கூடுகின்றனர். விழா நிகழ்வுறும் நாட்களில் எல்லாம் தமிழிசை முழக்கங்களும், தமிழ்ப்பண் ஆராய்ச்சி விளக்கங்களும் கேட்கின்றன. பத்துப் பதினைந்து நாட்கள் கோலாகல விழாவுடன் திரை தொங்க விடப்படுகிறது. அடுத்த ஆண்டு மறுபடியும் தமிழிசை அரங்கு கூடும் என அறிவிக்கப் படுகிறது. இம்மரபு போற்றுதற்கு உரியது, தமிழிசை இயக்கத்தை வளர்க்கவும், பரப்பவும் இசை மாநாடுகள் தேவை. எனினும் இடைவிடாத தொடர்ந்த நல்முயற்சிகளும் இசை வளர்ச்சிக்குத் தேவை.
தமிழிசை இயக்கம் தமிழ்நாட்டில் ஒரு மறுமலர்ச்சி இயக்கமாக வடிவெடுத்து ஏறத்தாழ அறுபது ஆண்டுகள் ஆகின்றன; என்றாலும் தமிழிசை இயக்கம் என்பது இந்த மண்ணுக்குப் புதியதில்லை. சங்கப் பாடல்களில் (பரிபாடல், கலித்தொகை) உள்ள இசை நலம், நீதிநூலாகிய திருக்குறளில் இழையோடி நிற்கும் இசை வளம், சிலப்பதிகாரம் முதலிய காப்பியங்களில் புலப்படும் கலைச்செல்வம் இவையெல்லாம் ஒருபுறமிருக்க, பக்தி இயக்கத்தால் பரிணமித்துப் பரவிய இசை வெள்ளத்தை எவரே மறக்க முடியும்? ‘ஏழிசையாய் இசைப்பயனாய்’ வாழ்ந்த சுந்தரரையும், ‘நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய’ ஞானசம்பந்தரையும் ‘தமிழோடு இசைபாடல் மறந்தறியாத’ திருநாவுக்கரசரையும், ஆழ்வார்களையும் தமிழகம் மறக்க இயலுமா? தமிழும், தமிழகமும் மறக்க முடியாது.
பக்தி இயக்கம் பாத்தி கட்டி வளர்த்த இத்தமிழிசை மரபினை அதற்குப் பின்னர் நுழைந்த வேற்றவர் படையெடுப்பும், மாற்றவர் ஆதிக்கமும் பல நூற்றாண்டுகள் மறைத்துப் புதைத்து வைக்க முற்பட்டன அவ்வளவுதான். அவற்றை முற்றிலும் ஒழித்துவிட அம்மாற்றுக் கலாச்சாரங் களால் இயலவில்லை. காலந்தோறும் பரிவு ஞாயிற்றொளி பட்டபோதெல்லாம் இருள் நீங்கி நம் தமிழிசை நாதங்கள், புதுக்குரலாய். புத்திசையாய் எதிரொலித்தே வந்தன. சென்ற நூற்றாண்டில் கூட முத்துத் தாண்டவர், கோபாலகிருஷ்ண பாரதி, அருணாசலக்கவி முதலியோரின் தமிழிசை வண்ணங்கள் போற்றப்பட்டே வந்தன.
ஆனால் அவை இசை அரங்குகளில் எல்லாம் ஆக்கம் பெற்றுப் பொலியவில்லை. காரணம் பல நூற்றாண்டு களாகத் தமிழகத்தில் படர்ந்த, பற்றிய தெலுங்கு, இந்துஸ்தானி, மராட்டியக்கலை வடிவங்கள் ஆட்சியாலும், பிறவகை மாட்சியாலும் பெற்றிருந்த ஆதிக்கங்கள் தமிழிசையை வளர விடாமல் தடுத்து வந்தன. தஞ்சை ஆபிரகாம் பண்டிதர், வேத நாயகம் பிள்ளை முதலியோரின் முயற்சிகள் பாராட்டப்பட்ட அளவுக்கு, பின்பற்றி வளர்க்கப்படும் நிலை உருவாக்கப்படவில்லை. ஆங்கில ஆட்சிக் காலத்திலும் தமிழிசை உணர்வு சவலைப்பிள்ளை போலவே நலிந்திருக்கிறது.
1927-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற அகில இந்தியக் காங்கிரஸ் மாநாட்டில் கர்நாடக இசையரங்கிற்குச் சிறப்புத் தரப்பட்டபோது தமிழிசையின் தரமும் திறமும் புலப்பட வழிபிறந்தது. தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் சுயமரியாதை இயக்க மாநாட்டை ஈரோட்டில் (1930) கூட்டியபோது சில சாதிக்காரர்களால் தமிழிசை படும் அல்லல்களைச் சுட்டிக்காட்டித் தமிழிசையை வளர்ப்பதில் உணர்வூட்ட முடிந்தது. ஆனால் தமிழிசையை ஓர் இயக்கமாக்கி வளர்க்க, தக்கதொரு தலைமகனை எதிர்நோக்கித் தமிழகம் காத்திருந்தது.
அத்தலைமகனாகச் செட்டிநாட்டரசர், ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் வந்தார். தமிழிசைக் காவலராகப் பொறுப்பேற்றார். சிதம்பரத்தில் தாம் நிறுவிய அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிசைக் கல்லூரியையும் நிறுவினார். நல்ல தமிழிசைப் பாடல்களைப் புனைவோருக்குப் பரிசுகளை அறிவித்தார். தேவாரத் திருமுறைகளைப் பண்முறைப்படி பாடிட ஆராய்ச்சி அரங்குகளுக்கு ஆக்கம் தந்தார். சென்னை, தேவகோட்டை முதலிய இடங்களில் தமிழிசை மாநாடுகளைக் கூட்டித் தாமே தலைமையேற்று நடத்தி ஒளிவிளக்காகத் திகழ்ந்தார். அண்ணாமலையரசர் அவர்கள் புரவலராகப் பொறுப்பேற்றதும் தமிழிசை இயக்கம் களைகட்டி வளரத் தொடங்கியது. நாட்டில் பரவிய தேசிய இயக்கமும், மொழி இனஉணர்வும் இதற்கு வலிவூட்டின. பல்வேறு பெரியார்கள், கட்சி, சமய வேறுபாடுகளை விடுத்து தமிழிசைக்குத் தக்க தூண்களாக ஊன்றி நிற்க முன் வந்தனர். சர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார், ராஜாஜி, கல்கி, டி.கே.சி., நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை, பாரதிதாசன், தமிழவேள் பி.டி.ராஜன், தமிழ்த்தாத்தா உ.வே.சா. அறிஞர்அண்ணா ஆகியோர் தமிழிசை இயக்கத்தை உரமூட்டி வளர்த்த பெரியோரில் சிலராவர். அண்ணாமலையரசரின் அருந்தவப் புதல்வர் ராஜா சர் முத்தையாச் செட்டியார் அவர்களும், அவர்தம் புதல்வர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தர். திரு.இராமசாமிச்செட்டியார் அவர்களும் இச்சீரிய பணியைத் தலைமேற் கொண்டு தமிழிசை இயக்கத்தைப் பேணி வளர்த்துள்ளார்கள்.
நம் நாடு விடுதலை பெற்று குடியாட்சி அமைந்த பின்னர் அரசியல் விருப்பு வெறுப்புக்களில் ஆட்சியைப் பிடிக்கும் கலை, நிலைகளில் ஈடுபாடு கொண்டுள்ள அளவுக்கு இதரக் கலைத் துறைகளை வளர்க்கும் நாட்டம், ஊட்டம் பெறவில்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். தமிழிசை வளர்ப்பதில் அரசியல் இலாபம் இருந்தால் ஆகா! ஓகோ!! என அணி வகுக்க முற்படுவார்கள். அவ்வாறு அரசியல் ஆதாயம் பெற முடியாமையால் தமிழிசை இயக்கம் பாட நூலோடு, பண்முறை ஆராய்ச்சியோடு, மாநாட்டோடு, மலர் வெளியீட்டோடு நின்று விடுகிறது. இது நாள் வரை இப்படி இருந்தது போதும், இனிமேல் தமிழிசை இயக்கத்தின் எல்லைகள் விரிய வேண்டும்.
மறுமலர்ச்சி இயக்கம் என்பது பல கூறுகளால் அமைந்தது. தமிழ் மறுமலர்ச்சி இயக்கம் – இன, மொழி கலாச்சாரக் கூறுகளைப் போல – இசையையும் உள்ளடக்கியது என்பது எவரும் ஒப்புவது. ‘இசைக்கு மொழி முக்கியமா?’ எனும் பழைய சர்ச்சைகளுக்கெல்லாம் இனிச் செவி கொடாது தமிழிசை இயக்கத்தை மக்கள் இயக்கமாக, பாமரர் செயல் இயக்கமாக நாம் மாற்றிட வேண்டும். நாட்டுப்புறக் கலை வடிவங்களான காவடி, பள்ளு, கும்மி முதலியவற்றைத் திரைப்படத்தினர் மாசுபடுத்திவிடாமல் அவற்றையெல்லாம் தமிழிசைச் செல்வங்களாக, மரபுடைய இசைச்செல்வங்களாக மாற்றிட வேண்டும்.
மேலை நாடுகளில் குழு இசை எல்லா நிறுவனங் களிலும் இடம்பெறுவது போல, நம் கல்வி நிறுவனங்களிலும் பல கலை அரங்குகளிலும் நம் செந்தமிழிசையே முதன்மை பெற வழி திறக்க வேண்டும். தொழிலாளர் அணி வகுப்பு, இளைஞர் இயக்கம், சுற்றுலாப் பயணம், போர்ப் பரணி முதலிய துறைதோறும் தமிழ் இசையே எழவேண்டும். தொடக்கப் பள்ளி தொட்டு, மேனிலைப்பள்ளி வரை இசைப் பாடத்தை, பாடத் திட்டத்தோடு இணைக்க வேண்டும்.
பயிற்சி பெற்ற ஆசிரியர்களை இங்கெல்லாம் நியமித்துக் கொள்ள வேண்டும்.
சென்னை அண்ணாமலை மன்றம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரை ராஜா முத்தையா மன்றம் முதலிய மையங்களில் தமிழிசை ஆசிரியருக்குத் தகைசால் பயிற்சிகளைத் தொடர்ந்து நல்கும் திட்டங்களைத் தீட்ட வேண்டும். தமிழிசையில் நாட்டமுள்ள மாணவர்களுக்கு ஊக்கமும், வாய்ப்பும் நல்க வேண்டும். வெளிநாட்டார் நாடிப் போற்றும் வகையில் நம் தமிழிசை தேனார் தமிழிசையாய்ச் சிறக்க வேண்டும்.
தாய்மொழியாகத் தமிழ் மொழியில் உள்ளத்தில் மலர்ந்து தெளிவாக, சிறந்த கருத்துருவம் பெற்ற இன்பக்கடலாகத் தமிழிசை விளங்கட்டும். வானம் போல, கடல் போல விரிந்தது இசை உலகம். எனினும் நமக்கு இசைவான வகை துறைகளில் அதில் ஆதிக்கம் கொள்ளும் வகையில் நமக்கே உரிய எல்லைகளை, உரிமை எல்லைகளை விரியச் செய்வது காலத்தின் தேவை எனக் கருதுவோம். தெருவெல்லாம் தமிழிசை முழக்கம் செழிக்கச் செய்வோம்.
“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்” (666)
2208total visits,2visits today