சுதந்திரப் பொன் விழாவில்
சுடர்விடும் எண்ணங்கள்*
சுதந்திர சூரியன் உதிப்பதைப் பற்றிப் பாடிய மகாகவி பாரதி ‘பொழுது புலர்ந்தது – யாம் செய்த தவத்தால், புன்மைஇருள் கணம் போயின யாவும்’ என முன்னரே பாடிப் பரவசம் கொண்டார்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அந்தப் பொன்னான பொழுதும் விடிந்தது. புதிய விடியலுக்குப் பூபாளம் பாடும் தலைவர்கள் இருந்தனர். உதய ஒளிக்கீற்றுகளாக ஊரெங்கும் தேச பக்தித் தொண்டர்கள் அணி வகுத்திருந்தனர்.
நாட்டுப் பிரிவினையோடு நமக்கு கிட்டிய உரிமை நாளன்று, வன்முறைகளும் வலம் வரமுற்பட்டபோதிலும் நம்மைத் தடுத்தாண்டு வழிநடத்தத் தன்னலமற்ற தலைவர்கள் இருந்தார்கள். பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்போம் எனும் நம்பிக்கையை நம் முன் வளர்த்தார்கள்…
மதவாத வன்முறைக்கு மகாத்மாவைப் பறிகொடுத்தோம். சுதேச சமஸ்தானங்களை ஒரு நாட்டமைப்பில் எப்படி இணைக்கப் போகிறோமா எனத் திகைத்தோம். எடுத்த எடுப்பில் ஏவப்பட்ட படை எடுப்புக்களை எப்படியோ சமாளித்தோம். பண்டித நேருவும், படேலும் உறுதி மலைகளாக நின்று நமக்கு உற்சாகம் தந்தார்கள்.
‘மதச்சார்பற்ற நாடு’ எனும் தெளிவான அரசியல் சட்ட வரையறையுடன், திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சியைக் கருவாகக் கொண்டு, திசை எங்கும் புதிய பாரத தரிசனங்களுக்கு ஆலை, அணை எனும் கோவில் களைக் கட்ட முற்பட்டோம். மொழி, மாநிலத்தவர்களைச் சகோதர வாஞ்சை கோடாமல் சரிக்கட்டி வந்தோம். சர்வதேச உறவுகளில் அணிசேராதொரு பேரணியை உருவாக்கி வல்லரசு நாடுகளும் நம்மை வலம் வரச் செய்து வலுப்பெற்று வந்தோம்.
ஆண்டு இறுதியில் தொழில் நடத்துபவர் இலாப நட்டக்கணக்கு பார்க்கப் பேரேடு புரட்டி, ஐந்தொகையை மதிப்பிட்டது போல நாமும் இந்தப் பொன்விழா ஆண்டில் நமது நாட்டுப் பேரேட்டைப் புரட்டுகிறோம்.
வரவுப் பகுதியில் எத்தனையோ வரப்பிரசாதங்கள். சமூக பொருளாதாரத் தளங்களில் ஏற்பட்டு வரும் மறுமலர்ச்சிகள், விஞ்ஞானத் துறையில் விளைவித்துள்ள அதிசய மாற்றங்கள் (சர்வதேச அணு ஆயுதக் கட்டுப்பாட்டு அரங்கில் உரத்துப் பேசும் அளவுக்கு சுய ஆக்கங்கள்), வேளாண்துறை தொட்டுப் பல வாழ்க்கைக் களங்களில் சுய தேவைப் புரட்சிகள், வியக்கத்தக்க நிறுவனங்கள் என வளரும் பட்டியல்கள் நமக்குத் தெம்பூட்டுகின்றன. நமக்கு முன்னரும் பின்னரும் சுதந்திரம் பெற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் ஓரளவு மகிழ்ச்சியும் தருகின்றன.
அந்த மகிழ்ச்சி ஓரளவாக மட்டுமே இருப்பதும் அது பேரளவினதாக வளராததும் நமக்கு வருத்தம் தருகிறது. அதற்கான காரணத்தைப் பேரேட்டின் பற்றுப் பகுதியில் பார்க்க வருமாறு நம்மைப்பற்றி இழுக்கின்றன.
பார்க்கிறோம் – பெருமூச்சு வரும் அளவுக்குப் பார்க்கிறோம்.
“வாழ்கின்றார் முப்பது முக்கோடி மக்கள் என்றால் சூழ்கின்ற பேதமும் அத் தொகையிருக்கும்” என்ற புரட்சிக் கவிஞரின் பாடல் வரிகள் பொய்யாக வில்லையே எனும் ஏக்கத்துடன் பார்க்கிறோம். இந்த ஐம்பது ஆண்டுகளில் நமது வளர்ச்சியைச் சிதைக்கச் செய்த சீர்கேடுகள்தான் எத்தனை எத்தனை? குடியாட்சியின் பெயரால் எத்தனை குளறுபடிகள்? உட்கட்சி ஜனநாயக உணர்வைத் தீர்க்கத் தான் எத்தனை சர்வாதிபத்தியங்கள்? மதத்தின் பேரால், மொழியின் பேரால், சாதியின் பேரால்தான் எத்தனை எத்தனை மாச்சரியங்கள்? தொண்டு செய்வதன் பேரால் சுயலாப வேட்டைகள், ஊழல்கள், ஊதாரித்தனங்கள்…
இத்தனையையும் பற்றுக் களத்தில் புரட்டிய பின்னரும் நமக்குள்ளே ஒரு புது நம்பிக்கையைத் தோற்றுவிக்கும் மின்னல்கள், இடிமுழக்கங்கள் அண்மையில் நம் அரசியல் வானில் ஏற்பட்டுள்ளன.
ஒரு கட்சியே நாட்டை ஆளுவது எனும் பிடிமானம் தளர்ந்து வருகிறது. மற்றக் கட்சிகளையும் அவற்றின் கூட்டணிகளையும் பரிசோதனைக் களமாக்கலாம் எனும் நம்பிக்கை வாக்காளர்களிடையே உருவாகியுள்ளது. ஊழல் செய்தவர்கள், வரம்பு மீறியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நீதிமன்றத்திற்கு – மக்கள் மன்றத்திற்குக் கொண்டு வர வேண்டும் எனும் உறுதியும் தளிர்த்து வருகிறது. குடியாட்சி என்பதை வெறும் கோபுர தரிசனம் போல உச்சி மட்டத்திலேயே நடத்தாமல், கிராமப் பஞ்சாயத்து கூட்டுறவு அமைப்பு முதலான அடித்தளங்கள் வரைமுறையாகக் கட்டியெழுப்பும் உண்மை ஜனநாயகம் மீண்டும் புலர்ந்து வருகிறது.
புலரும் பொன்விழா, அரசியல், சமுதாயப் பணித் தளங்களில் தொண்டாற்ற வருவோருக்கும் சில அரிய படிப்பினைகளையும் தந்துள்ளது. இவை புதிய படிப்பினைகள் இல்லை. வள்ளுவர் காலந்தொட்டே மதிக்கப்பட்டு வரும் பொது ஒழுக்கங்கள்தான் என்றாலும்கூட புதிய சூழலுக்கு ஏற்ப நாம் பொருள் கொள்ளுவது நல்லது. ஆட்சி செய்வோருக்கு வேண்டிய அடிப்படையான பண்புகளுள் மிக முக்கியமான இரண்டு: 1. தெரிந்து வினையாடல் 2. பெரியாரைத் துணைக்கோடல்.
தெரிந்து வினையாடல்
ஆட்சி செய்வோர் தம் நெறியில் கோணாது செயலாற்ற வேண்டும். அப்போதுதான் உலகும் கோணுதல் அற்று விளங்கும். உலக மக்களும் நேர்மையை மதித்து ஒழுகுவார்கள்; மரியாதை செய்வார்கள். ஆகவே ஆட்சி புரிவோர் மன்ன ராயினும், தலைமை அமைச்சர்கள் ஆயினும், கொள்கை வகுக்கும் அதிகாரிகள் ஆயினும், கோணாத குணத்திறம் கொண்டவர்களையே தேர்ந்து செய்கையில் ஈடுபடுத்த வேண்டும். இதனை நாள்தோறும் நாடிச் செய்ய வேண்டும்.
“நாள்தோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடாது உலகு” (520)
பெரியாரைத் துணைக்கோடல்
ஆட்சிக்கு அரணாக இருப்பது படை, பாதுகாப்பு, கோட்டை, அரண் ஆகியன மட்டுமா? இவை புறக்கருவிகள் மட்டுமே ஆகும். இவற்றிற்கு எல்லாம் மேற்பட்ட உள் அரணாகத் துலங்குவன பத்திரிகைகள், மாற்றுக் கட்சிகள், பொதுமக்கள் மனப்போக்கு, சான்றோர் ஆக்க நலம் என்பன.
‘பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்’ (குறள்:996) என வரையறுத்த வள்ளுவம் அத்தகைய பண்புடைய பெரியோரைத் துணை ஆக்கிக்கொளல் ஆட்சிக்கு ஆற்றல் தரும் அரண் என்கிறது. பெரியோரின் துணையினைத் துச்சமாகக் கருதி உதறிவிட்டு, தன்னிச்சைப் படியே நடப்பதானது ஒரே சமயத்தில் பலபேரின் பகையைத் தேடிக் கொள்வதை விடப் பத்து மடங்கு தீமை பயப்பது என்கிறது ‘பெரியோரைத் துணைக்கோடல்’ எனும் குறள் அதிகாரப் பாடல்.
“பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்” (450)
நமது அரசுகள் அண்மைக் காலங்களில் பல நிலைகளில் சான்றோரைத் துணைக் கொள்ளாமல் தன்னிச்சையாகச் செயல்பட்ட விபரீதங்களை நாம் அறிவோம். சட்ட மன்ற மேலவை எனும் மூத்தோர் அவையினை முடக்கியமையால் பலதுறைச் சான்றோர் வழி அமைப்பை ஆட்சி மன்றம் பெற முடியாமல் போன அவலத்தைக் கண்டோம்.
இப்போது புதிய வெளிச்சங்கள் தெரிகின்றன. மேலவை மீண்டும் வருவது மட்டுமில்லை. நமது தாயகத்துக்குப் பெருமைகள் எல்லாம் உதய ஞாயிற்று ஒளிக்கற்றைகளாக மீண்டும் பரவி வருவதும் நமக்கும் புலப்படுகின்றன. அத்தகைய பொன்விழாக் கீற்றுகள் உச்சிவானத்துப் பகலவனாக நிலவ, இச்சுதந்திர நன்னாளில் வாழ்த்துவோம். ஆட்சிக் கலை வித்தகங்களை ஆசான் வள்ளுவரிடம் கற்றறிவோம்.
10378total visits,82visits today