இந்தியாவில் நீளமான கடற்கரையைக் கொண்டது தமிழ்நாடு. இம்மாநிலத்தில் கிழக்குக் கடலோர எல்லை வரைகோட்டினை, அழகிய பெண்ணொருத்தியின் முகத்தைப் போல உருவகித்து வரைந்திருந்தார் ஓவியர் ஒருவர். அந்த முகத்தில் புன்சிரிப்பைப் புலப்படுத்தும் வாயிதழ் போல அமைந்துள்ள மாவட்டத்திற்கு ‘முகவை மாவட்டம்’ எனப் பொருத்தமானதொரு பெயரும் உண்டு. இந்த இராமநாதபுர மாவட்டத்தைக் காணவருமாறு மதுரை வானொலியில் ‘நாடுகாண் காதை’ வழியாக அழைக்கிறேன். புகார்நகரை விடுத்து மதுரை நோக்கிப் புறப்பட்ட சிலப்பதிகார இணையர்க்குக் கவுந்தியடிகள் மதுரைவரை வழிகாட்டி நடந்தார். அவ்வாறு நடந்துவந்த வழியில்- இந்த இராமநாத புறப்பகுதியும் இருந்திருப்பின்- இந்த மண்ணின் புனித வரலாற்றையெல்லாம் புதியதொரு காதையாக விரித்திருப்பார்: அதனை இளங்கோவடிகளும் இனிமையுறத் தொகுத்திருப்பார்.
நினைப்பிற்கெல்லாம் எட்டாத நெடுங்காலமாக வரலாற்றுச் சிறப்பும் வழிவழித்தொன்மையும் உடைய வழிபாட்டிடங்களைக் கொண்டதாக இராமநாதபுர மாவட்டம் விளங்கி வந்துள்ளது. இமயம் முதல் குமரி வரை என்பது போல, ‘காசி முதல் இராமேசுவரம் வரை’ எனும் ஒரு நாட்டுச் சிந்தனையும் நிலைபெற்று வந்துள்ளது. இப்புண்ணிய பாரதத்தின் புகழ்பெற்ற திருத்தலங்களுள் ஒன்றான இராமேசுவரம் உயிருக்கு ஆதாரமான பக்தி நெறியையும், காலத்தை வென்று நிற்கும் கலாச்சாரக் கட்டுக்கோப்பையும் பேணி வளர்த்து வருகிறது.
பழந்தமிழகத்துப் பாண்டியப் பேரரசின் ஒரு பகுதியான இந்த மாவட்டம், பல வரலாற்றுச் சுவடுகளைப் பெற்றுள்ளது. ‘முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே’ எனப் பாரதியார் பரவசத்துடன் பாடிய பாண்டிநாட்டு முத்துக்கள் எகிப்திய எழிலரசி கிளியோபாத்ராவின் அலங்காரப் பொருள்களாயின. அரேபியக் குதிரைகளை இறக்குமதி செய்யும் தொண்டி முதலிய துறைமுகங்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே புகழ்பெற்று விளங்கின. இதிகாச இராமாயணத்தை வரலாற்று நிகழ்ச்சியாக வரையறுத்துக் காட்டும் பல தடயங்கள் என்றென்றும் போற்றப்பட்டு வருகின்றன. ‘தென்பாண்டி நாடே சிவலோகம்’ என வாதவூரர் மொழிந்தது போல, இப்பாண்டிநாட்டுப் பகுதியில் சிவம் பெருக்கிய சீலர்களாகிய சமய குரவர் நால்வராலும் போற்றிப் பாடப்பெற்ற பல திருத்தலங்கள் – திருவாடானை, திருராமேசுவரம், திருக்கானப்பேர், திருப்புத்தூர் எனும் பாடல் பெற்ற தலங்கள் பல உள்ளன. வடக்கிலிருந்து படை எடுத்து வந்த மொகலாயர்கள் இராமேசுவரம் கோவில்வரை வந்து கொள்ளையிட்டுச் சென்றதை வரலாறு சொல்கிறது. மதுரையைத் தலைநகராகக் கொண்ட பாண்டிய, நாயக்க மன்னர்களுக்குச் சிலசமயம் உட்பட்டும் பல சமயம் உட்படாமலும் இப்பகுதியைச் சேதுபதி மன்னர்கள் தன்னாட்சி புரிந்து தனிவரலாறு படைத்துள்ளனர். பாண்டிய மன்னரால் மானியமாக வழங்கப் பெற்ற இக்கடற்கரைப் பகுதியில் 60க்கும் மேற்பட்ட ஆலயங்களில் சேதுபதிகள் அறப்பணிகள் நடத்தி வந்தனர்.
இலங்கையை ஆண்ட மன்னன் ஸ்ரீராஜசேகரனின் அருந்துணையோடு இலங்கைத் திரிகோணமலையில் இருந்து கடல் வழியாகக் கற்களைக் கொணர்ந்து உடையன் சேதுபதி, 13-ஆம் நூற்றாண்டில் இராமேசுவரத்தின் கோயில் கருவறையைக் கட்டினான். பின்னர் கிருஷ்ண தேவராயர் காலத்தில் அதன் வடக்கு, தெற்குக் கோபுரங்கள் கட்டப்பட்டன.
‘திரைகள் முத்தால் வணங்கும் திருஇராமேசுவரம்’ என்று அப்பர் சுவாமிகள் பாடியருளினார். எத்தனையோ புண்ணியத் தலங்கள் இருப்பினும் இராமபிரானையே கவர்ந்திழுத்த இராமேசுவர ஜோதிர்லிங்கம் புண்ணியத் தலங்களின் இமயமாகவே விளங்கி வருகிறது.
அன்று இராமபிரானை ஈர்த்தது போல, இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகெலாம் இந்து சமயப் பெருமை பற்றி, இந்திய மண்ணின் அருமை பற்றிப் பேருரை யாற்றச் சென்ற சுவாமி விவேகானந்தரையும் இந்தத் தலம் ஈர்த்தது. சேதுபதி மன்னர் நல்கிய பொருளாதார ஆக்கத்தையும் இராமநாத சுவாமிகளின் அருளாதார ஊக்கத்தையும் பெற்றுச்செல்ல ‘ஊட்டிவிடும் சென்மம் வரும் வழியைத் தாளிட்டுப் பூட்டிவிடும் சேது’ வழியாகவே விவேகானந்தரும் வந்தார்.
‘வையை என்னும் பொய்யாக் குலக் கொடியை’ கடலோடு சங்கமம் ஆகவிடாமலே தடுத்து தன்னிடம் உள்ள பெரிய பெரிய கண்மாய்க்கரையிலேயே தக்கவைத்துக் கொள்ளும் தனிப்பெருமையுடைய இராமநாதபுரம் சீமை வறண்ட பிரதேசம் என்பது நாடறிந்த உண்மை. இங்கே வானம் பொய்ப்பதால் மண்ணில் வறட்சி ஏற்படுவது இயல்பு என்றாலும் இப்பகுதி மக்கள் தம் உழைப்பில் மலையாத நம்பிக்கை உடையவர்கள் என்பதை மறுக்க முடியாது. கடலோரப் பகுதிகளில் எல்லாம் பழைய நெய்தல் நிலப் போராட்ட வாழ்க்கை நீடிக்கிறது என்றாலும் திரைகடலோடித் திரவியம் தேடும் முனைப்பும் முயற்சியும் இவ்வட்டார மக்களுக்கே உரிய தனிச்சிறப்புக்கள். மாவட்டப் பிரிவினைக்கு முற்பட்ட பழைய இராமநாதபுர மாவட்டம் பரப்பளவில் மிகப்பெரியது; எனினும் அதன் ஆட்சித்தலைநகராகப் பல வசதிகளைக் கருதி மதுரையே நீடித்ததால் இம்மாவட்டத்தின் வளர்ச்சிப் போக்கில் பல பாதிப்புக்கள் ஏற்பட்டன. அண்மையில் செய்யப்பட்ட மாவட்டச் சீரமைப்பால், முகவை மாவட்டம், அளவில் சுருங்கி விட்டது; என்றாலும் ஆக்க நலத்தில் போட்டியிட்டு முன்னேறத் துடித்து நிற்கிறது. தலைநகரான இராமநாதபுரத்தில் பழைமைச் சுவடுகளைத் தாண்டி புதுமைப் பொலிவுகள் தலைதூக்கி வருகின்றன. வாய்ப்புள்ள இடங்களில் தொழில்களைத் தொடங்கும் எண்ணங்கள் மலர்ந்து வருகின்றன.
என்னதான் புதுமைநலன்கள் புகுந்தாலும் சில இடங்களில் பழமைப் பெருமைகள் ஒருபோதும் குன்றிப் போவதில்லை என்பார்கள். உரோமாபுரியைப் போல, எருசலத்தைப் போல, மக்கா நகரைப் போல, இராமேசுவரம் எனும் திருத்தலப் பெருமையால் முகவை மாவட்டம் என்றென்றும் பழமைப் பெருமைகளை, பண்புகளை, நம்பிக்கைகளைப் பேணிக்காக்கும் நினைவரங்கமாகவே திகழும் என்பதை அங்கு சுற்றுலாச் செல்லும் எவரும் ஏற்பர்.
‘காசி – ராமேசுவரம் சாலை’ எனும் வழிநடைப்பாதை காலம்காலமாக இருந்ததை வரலாறு சொல்கிறது. திருச்சி- மதுரையில் இருந்து மானாமதுரை வழியாக 1906-இல் இருப்புப்பாதை போடப்பட்டது. ‘இந்தோ-சிலோன் போட் மெயில்’ எனும் ரயில் அக்காலத்தில் மிகமிகப் பிரபலமாக விளங்கியது. இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களாகச் சென்றவர்கள் மருத்துவப் பரிசோதனைக்காகத் தங்க வைக்கப்பட்ட ‘மண்டபம் முகாமும்’ 1914-இல் கட்டப்பட்ட பாம்பன் பாலமும் முக்கியமானவை. 1973-இல் சாலை வழிப்பாலம் ஒன்று கட்டும் திட்டம் மிகப் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டது. இராமேசுவரம் தீவினை இராமநாதபுரம் மாவட்டத்து நிலப்பகுதியுடன் நிரந்தரமாக இணைக்கும் ‘பாம்பன் சாலைப் பாலம்’ 1988-இல் திறந்து வைக்கப்பட்ட பின்னர் சுற்றுலாப் பயணிகளின் வருகை பலமடங்கு அதிகரித்து உள்ளது.
இந்த பாம்பன் சாலைப் பாலம் அரியதொரு பொறியியல் சாதனை. ஏற்கனவே உள்ள 12 அடி உயர ரயில் பாலத்தில் வலதுபுரத்தில் கட்டப்பட்டுள்ள இந்தச் சாலைப்பாலத்தின் நீளம் 2 1/2 கிலோமீட்டர்; வாகனங்கள் செல்ல 7.5மீட்டர் அகலப் பாதையும் நடைபாதையாக 1.5 மீட்டர் அகலமும் விடப்பட்டுள்ள, 80 அடி உயரமுள்ள பிரமிப்பூட்டும் அமைப்பு இது. பாலத்தின் கீழே 75 அடி உயரம் கொண்ட சரக்குக் கப்பல்கள் தாராளமாகச் செல்ல முடியும். இதுபோல பாக் ஜலசந்தியையும் மன்னார் வளைகுடாவையும் இணைக்கும் ‘சேதுக் கால்வாய் திட்டமும்’ நிறைவேறிவிட்டால் முகவை மாவட்டம் முன்னணி மாவட்டம் ஆகிவிடும் கனவு நனவாகும்.
‘மங்கம்மாள் சாலை, மலையெல்லாம் சோலை’ என்பதைப் போல முகவை மாவட்டக் கடற்கரையிலிருந்து இலங்கை வரை எண்ணற்ற கடல் தீவுகளும் பவளத் திட்டுக்களும் உள்ளன. இவற்றுள் ஒன்றான குருசடித் தீவு உயிரியல் ஆராய்ச்சியாளர்க்குச் சிறந்ததொரு களஞ்சியமாகத் திகழ்கிறது. அரிய உயிரின வகைகள் இங்கே ஏராளமாக உள்ளன. இராமேசுவரத்திலிருந்து மண்டபம் வழியாக 20 கிலோமீட்டர் கடற் பயணத்தில் இத்தீவுக்குச் செல்ல முடியும். பயணவழியில் எல்லாம் பவளப்பாறைகளைக் கண்டு வியக்கலாம். கர்ண பரம்பரையாகக் கேட்டு வந்த ‘பவளக்கொடி’ முதலான நாட்டுப்புற இலக்கியங்களுக்குப் பின்னணி கூட்டிய வரலாற்று நிகழ்ச்சிகளை எண்ணி எண்ணி மகிழலாம்.
புண்ணிய பாரதத்தில் போற்றி வழிபடும் தலங்களில் பிரசித்தி பெற்ற இரண்டு – காசியும், இராமேசுவரமும். இவ்விரண்டனுள் முன்னதை முறையாக வழிபட்டவர் பின்னதையும் வழிபட வேண்டும் என்பது மரபும் நியதியும் ஆகும். வடநாட்டு மக்களைத் தெற்கே வரவழைத்து, தென்னாட்டவரை வடபுலம் ஏக வைக்கும் கட்டாயக் கடமையாக்கும் கலாச்சார உறவுக்கும் சைவ – வைணவ சமய ஒற்றுமைக்கு வழிகாட்டும் தார்மீக நெறிக்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் காலமெல்லாம் ஆக்கம் தருவதாக இராமேசுவரம் தீவு விளங்கி வருகிறது.
இராமேசுவரம் தீவு திருமாலின் திருக்கரத்தில் உள்ள சங்கின் வடிவம் போல அமைந்துள்ள அருமை வியக்கத்தக்கது. இதைச் சூழ்ந்துள்ள கடலில் தூய்மையான வெண்பவளமும் சங்கும் ஏராளமாகக் கிடைக்கின்றன. இத்தீவின் கிழக்கோரமாக இராமநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் இலங்கைப் போருக்கு முன்னரோ பின்னரோ இராமபிரானால் எழுப்பப்பட்ட பெருமையுடையது என்பார்கள்.
“தேவியை வலிய தென்னிலங்கைத் தசமுகன்
பூவியலும்முடி பொன்றுவித்த பழபோய் அற
ஏவியலும் சிலை அண்ணல் செய்த இராமேசுவரம்”
எனத் திருஞான சம்பந்தர் தம் திருப்பதிகத்தில் இதைப் பாடியுள்ளார்.
“செங்கண்மால் செய்த கோயில் திருவிராமேச்சு வரம்”9
என்று திருநாவுக்கரசர் இதனை உறுதி செய்துள்ளார்.
இராமாயணப் போருக்குப் பின்னர் இராமபிரான், சிவலிங்கப் பிரதிட்டைக்காக ஒரு நேரம் குறிப்பிட்டு அனுமனைக் காசிக்குச் சென்று சிவலிங்கம் கொணருமாறு அனுப்பினார். அனுமன் நியமித்த நேரத்திற்குள் வாராமை யால், சீதை, கடற்கரை மணலையே சிவலிங்கமாக்கிக் கொடுக்க இராமபிரான் அதனைப் பிரதிட்டை செய்து விட்டார். காலம் கடந்து வந்த அனுமன் இதுகண்டு சினந்து, பிரதிட்டை செய்த சிவலிங்கத்தைத் தனது வாலால் கட்டிப் பெயர்த்தெடுக்க முற்பட்டான். இராமபிரான், அனுமனைச் சமாதானப்படுத்தி, அவன் கொணர்ந்த சிவலிங்கத்தை, இராமலிங்கப் பிரதிட்டையின் முன்னால் வைத்து அதற்கே முதற்பூசை நடைபெற வேண்டும் எனக் கட்டளையிட்டார். தம் தொண்டனுக்கு, அவரது உழைப்புக்கு உரிய மரியாதையினைச் செய்தார். இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இராமநாதப் பெருமானுக்கு நாள்தோறும் கங்கையிலிருந்து கொண்டுவரப்படும் தீர்த்தம் அபிஷேகம் செய்யப்படுவது அரியதொரு விசேடம்.
இந்த இராமேசுவரத் தலம் மூர்த்தி விசேடம், தல விசேடம், தீர்த்த விசேடம் எனும் மூவகைச் சிறப்புக்களையும் ஒருசேரப் பெற்றிருப்பினும் தீர்த்த விசேடம் மிகச்சிறப்பாய் போற்றப்படுகிறது. இங்கே திருக்கோயிலின் உள்ளே 22 தீர்த்தங்களும் வெளியே 22 தீர்த்தங்களும் உள்ளன. திருக்கோயிலின் கிழக்கே உள்ள கடல் அக்கினி தீர்த்தம் எனப்பெறும் இதில் நீராடிய பின்னரே திருக்கோயில் தீர்த்தங்களுக்குச் செல்லவேண்டும். பிற கடல் தீர்த்தங்களில் நீராடிட, திதி, வார, நட்சத்திர நியமங்கள் பல உண்டு. ஆனால் இராமேசுவரத் தீர்த்தத்தில் நீராட நியமம் ஏதும் இல்லை. இராமநாதசுவாமி கோவிலின் பிரகாரம் 4000 தூண்களைக் கொண்டது; மூன்றாவது பிரகாரம் உலகிலேயே மிக நீளமானது எனும் பெருமைக்கு உரியது.
இத்திருக்கோயிலில் இருந்து இரண்டு கி.மீ. தூத்தில் உள்ள கந்தமாதனகிரி எனும் மணல்மேட்டில் இராம பிரானுடைய பாதங்கள் இரண்டும் பிரதிட்டை செய்யப் பட்டுள்ளன. தெற்கே 16 கி.மீ. தொலைவில் தனுஷ்கோடி உள்ளது. 1964-இல் வீசிய கொடிய புயலால் முற்றிலும் அழிந்து போன இந்தத் தொன்மையிடம் ‘இன்னும் அழித்துவிடாதே’ எனக் கடலை இறைஞ்சி நிற்கும் இடம் போலக் காட்சி தருகிறது.
முகவை மாவட்டத்திற்குச் ‘சேது நாடு’ எனப் பெயர் உண்டு. சேது என்பது வேதாரண்யம் கோடியக்கரையில் தொடங்கி தனுஷ்கோடியில் முடிகிறது. இராமர் அயோத்தி சென்று முடி சூடிய பிறகு, இராமேசுவரத்திற்கு மூன்றாம் முறை வழிபட வந்தபோது இவற்றிற்கு இடையே உள்ள 64 தீர்த்தங்களில் நீராடி வந்தமையால் இவை சேதுமகிமை பேசின. இவற்றுள் இப்போது 13 தான் உள்ளன. ‘சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்’ எனப் பாரதி பாடியது இந்தத் தீர்த்த வீதியைத் தானோ! என்று நம்மை எண்ண வைக்கும் வகையில் வரிசையாக இவை அமைந்துள்ளன. அரசு கருதியுள்ள கீழைக்கடற்கரை நெடுஞ்சாலை இவ்வழியாகத்தான் போடப்படும் என்கிறார்கள்.
திருப்புல்லணை எனும் புகழ்பெற்ற வைணவத்தலம், தேவிப்பட்டணம் எனும் நவக்கிரகத் தீர்த்த வழிபாட்டிடம், பாம்பனில் வையிரவத்தீர்த்தம், இராமேசுவரத்தில் இராமலட்சுமணத் தீர்த்தம் தனுஷ்கோடியில் சோபன தீர்த்தம், உத்தரகோச மங்கையில் நடராசர் திருவடி வணங்கி முடிப்பது இராமேசுவர யாத்திரையின் நிறைவுநலம் என்பார்கள்.
முகவை மாவட்டத்தில் தொண்டி பழம் பெருமை பேசும் பாண்டி நாட்டுக் கடற்கரை என்றால் கீழக்கரை புதுமை நலம்பாடும் எழில்மிகு பேரூர். திரைகடலோடித் திரவியம் தேடுவோர் வாழ்க்கை வனப்புக்களையும் போராட்டங்களையும் இங்கே ஒரே வார்ப்பாகக் காணலாம்.
முகவை மாவட்டம் பல சமய நெறியினரும் சமரச உணர்வோடு வாழும் சகோதர மாவட்டம் எனலாம். மாமன், மச்சான் என உறவுப்பெயர் சொல்லிச் சமூக நலம் பேணும் ஒப்புரவு மாவட்டம் எனலாம். முகவை மாவட்டம் வறண்ட பிரதேசம் என இங்கிருந்தபடியே எண்ணிவிடாமல், ஒருதடவை பயணத் திட்டமிட்டுப் புறப்படுங்கள். அங்கே நமது பாரம்பரியப் பண்பாட்டுக் கோலங்களையும், புதிய வளர்ச்சிக்கான உயிரோட்ட நாளங்களையும் கண்ணாரக் கண்டு மகிழலாம், இராமேசுவரத்தில் தீர்த்தமாடி வருவதோடு இந்த மண்ணின் எதிர்கால வளத்தில் தீர்க்கமான நம்பிக்கையோடும் திரும்பலாம்.
98667total visits,82visits today