உலகத்திற்குத் தமிழர்களை அடையாளம் காட்டி வான்புகழ் கொள்ள வைத்தது திருக்குறள். தமிழ்ச் சமுதாயத்தின் பெருமைக்கும் ஆக்கத்திற்கும் நிலை பேற்றுக்கும் வழிகாட்டுவது திருக்குறள். அந்தந்தக் கால, தேசச் சூழலுக்கேற்ப, தன்னைப் புதுப்பித்துக் கொண்டு, புதுமைச் சிந்தனைகளை வழங்கி, அன்பு நெறியாலும், அறிவு நெறியாலும் வாழ்வை நல்வழிப்படுத்தும் ஆற்றல் பெற்றது திருக்குறள்.
தனக்கு உவமை தானாகவே விளங்கி, ஒப்பு உவமையற்று, காலத்தை வென்று நின்று, இன்றைய அறிவியல் யுகத்திற்கும் ஏற்ற புதிய சிந்தனைகளை வழங்குவது திருக்குறள்.
அறியாமையாகிய இருளிலிருந்து உண்மைப் பேரொளிக்கு அழைத்துச் செல்வது திருக்குறள். மனிதன் மனத்துக்கண் மாசில்லாதவனாக மனத்தூய்மை பெற்று அறவாழ்வு வாழ, தெய்விக உணர்வு பெற்று உயர வழிகாட்டுவது திருக்குறள்.
நம் மனத்தின் அசுர உணர்வுகளை, மிருக உணர்வுகளை- காமம், வெகுளி, மயக்கம், அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகியவைகளை அடக்கி, நீக்கி, தெய்வ இயல்புகளை – அன்பு, நாண், கண்ணோட்டம், ஒப்புரவு, வாய்மை, மனிதநேயம் இவைகளை மலரச் செய்வது திருக்குறள்.
பேரலைகள் சுழன்று அடிக்கும் பெருங்கடலில் பயணம் செய்யும் படகோட்டிகள் கை சலித்து, உடல் சலித்து, மனம் உழன்று வருந்தும்போது, இருளில் ஒளி காட்டும் கலங்கரை விளக்குக் கண்டு கரையேறுவது போல, போராட்ட உலகில் மனம் சலித்து, துன்புற்று வாழும் மனிதர்களைக் கரைசேர்ப்பது, கலங்கரை விளக்கமாய் விளங்குவது முப்பாலாகிய திருக்குறள்.
நாம் வாழும் காலம் அறிவியல் யுகம், கணினி யுகம், இண்டர்நெட் யுகம், அறிவுடையார் எல்லாம் உடையார், அறிவுடையார் ஆவது அறிவார் என்பது மெய்ப்பிக்கப்பட்ட யுகம். எது நிலைத்தது என்றால், நிலையாமை தான் நிலைத்தது. எது மாறாதது என்றால், மாற்றம் தான் மாறாதது. ஆதலால், நில்லாத உலகின் மாற்றத்திற்கு ஏற்ப, போராட்ட உலகத்திற்கு ஏற்ப நம்மை நாம் தகுந்தபடி மாற்றிக் கொண்டால் தான் நிலைத்து நின்று வெற்றி பெற முடியும்.
“எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு” (426)
“உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்” (140)
காலத்திற்கு ஏற்றபடி அறிவியல் உலகின் போக்கை ஆராய்ந்து, காலத்திற்கு ஏற்ற கல்வியும், அறிவும் பெற்று கடும்உழைப்பாலும் முயற்சியாலும், உன்னத நிலை பெற்று உயர வேண்டும். குடியரசுத் தலைவர் கனவு 2020-ஆம் ஆண்டில் நாம் வல்லரசு ஆவோம் என்பது. இக்கனவு, தமிழர் வாழ்வில் நனவாக வேண்டும்.
“உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல்” (596)
“உள்ளிய எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்” (540)
என்ற குறள்நெறி தமிழகத்தில் நிலைபெற வேண்டும்.
பல நூலறிவும், உலகியல் அறிவும், நடைமுறை அறிவும் நிறைந்து, பல சொல்லக் காமுறாமல், பயனில்சொல் பாராட்டாமல், சில சொற்களாலே தெளிவாகவும் மிகச் சுருக்கமாகவும் எழுதப்பட்ட நூல் திருக்குறள்.
விதித்தன செய்தலும், விலக்கியவை ஒழித்தலும் மக்களை நல்வழிப்படுத்தும் என்று உணர்ந்து இலக்கிய நயத்துடன், நுண்மாண் நுழைபுலத்துடன் பல துறையினர்க்கும் ஏற்றாற் போல் நிறைமொழி மாந்தராய் வள்ளுவர் உலகிற்குப் பொதுமறை தந்தவர்.
“செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க
செய்யாமை யானும் கெடும்” (466)
வள்ளுவர் தம்மை முன்னிலைப்படுத்திக் கூறியது மூன்று இடங்களில்தான். அவற்றுள் முதன்மையாக ‘யாம் கண்ட உண்மை’ என்று வலியுறுத்தியது ‘வாய்மை’யைத் தான்.
“யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற” (300)
இக்குறளை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தால் திருவள்ளுவர் திருக்குறளாய் வாழ்ந்து, பின்னர் திருக்குறளைப் படைத்துள்ளார் என்று உணரலாம். உள்ளத்தின் தூய்மை உண்மை, சொல்லின் தூய்மை வாய்மை, செயலின் தூய்மை மெய்ம்மை என்பர், ஆகவே எண்ணம், சொல், செயல் இவைகளில் முழு நம்பிக்கை கொண்டு வாழ்ந்தவர் திருவள்ளுவர்.
அதனால்தான் அவரால்,
“கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல் வேறுபட்டார் தொடர்பு” (819)
என்று பாட முடிந்தது. திருவள்ளுவருக்கு இவர்கள் கனவில் கூட கொடியவர்களாகக் காட்சியளிக்கின்றனர், கனவும் கொடியதாகின்றது.
திருவள்ளுவரின் திருக்குறள் அறவுரைகளைப் புகழ்ந்து போற்றிப் பாராட்டி விட்டு அவர் வாக்குப்படி வாழாவிட்டால் நமக்கும் பெருமையில்லை, நாம் போற்றும் வள்ளுவருக்கும் பெருமை சேர்க்க மாட்டோம்.
“புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்” (538)
திருக்குறளை உணர்ந்து படிப்பதும், கொத்தாக மலர்ந்து மணம் வீசும் மலர்கள் போல் அறிவு மணம் பரப்பப் பேசுவதும் வாழ்ந்து காட்டி வளம் பெறவேயாகும். அவ்வாறு முயலாதவர்கள் பேதையர்களில் எல்லாம் கடையான பேதையர்கள் தான். கற்றபடி, பேசியபடி வாழாதவன் போல அறிவில்லாதன் இல்லை.
“ஓதி உணர்ந்தும், பிறர்க்குஉரைத்தும் தான்அடங்காப்
பேதையின் பேதையார் இல்” (834)
இவ்வுலகில் சிக்கல்களும் துன்பங்களும் மிகுந்துள்ளன. இன்னா உலகில் இனிமை காணப் பழகிக் கொள்ள வேண்டும். உலகம் அன்பு தழுவிய வாழ்க்கையால் துன்பம் தவிர்த்து இன்புற வேண்டும். துன்பங்கள், துயரங்கள், எதிர்பாராத ஆபத்துக்கள், சுனாமி போன்ற அதிர்ச்சி தந்த இயற்கைப் பேரழிவுகள் நிகழும் போது, அன்பும் கருணையுமே அருமருந்தாகின்றன. சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவால், இப்பெருங்கேட்டிலும் ஒரு நன்மை ஏற்பட்டது.
“கேட்டினும் உண்டுஓர் உறுதி” (796)
மக்கள் மனித நேயங் கொண்டு சாதி, சமயங்களால் வேறுபடாது ஒற்றுமை கொண்டு அறப்பணி, அருந்தொண்டு ஆற்றினார்கள். இயற்கைப் பேரழிவு மக்களின் அன்பையும் கருணையையும் பொங்கச் செய்தது.
“அறிவினான் ஆகுவது உண்டோ? பிறிதின்நோய்
தம்நோய் போல் போற்றாக்கடை?” (315)
என அன்பும் கருணையும் கொண்டவர் துன்புற்றவரின் துயர் கண்டவுடன் மனமுருகி, துயருற்றவர்களின் இன்னல் களைத் தமக்கு ஏற்பட்டனவாகக் கருதித் துன்பங்களைத் தம் தலைமேல் சுமந்து அரும்பணியாற்றினர். அறிவினால் ஆகுவது உண்டு என்பது மெய்ப்பிக்கப்பட்டது.
பிறரின் துன்பம் கண்டவுடனே, அன்புடையவர்களின் கண்களில் உடனே கண்ணீர் பெருகுகின்றது. கருணையுடை யோரின் அன்பை மறைத்து வைக்கும் தாழ்ப்பாள் உண்டோ?
“அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்” (71)
நம் ‘உலகத் திருக்குறள் பேரவை’ மூலம் அறம் பொருள் இன்பம் எனும் முப்பால் நெறிகளை அறங்களைச் செவ்வனே எடுத்துத் தொகுத்து உலகிற்கு வழங்குவோம்.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்”
“பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும்” (972)
என்ற உயர்நெறிகளைக் கொண்ட அன்புலகை, ஒப்பற்ற அருள் உலகை அறிவொளியால் மிளிரச் செய்வோம்.
“அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்” (611)
3124total visits,1visits today