திருவள்ளுவரின் இறைக் கொள்கை
திருவள்ளுவரின் திருக்குறள் சாதி, சமயம், இனம், மொழி கடந்து காலத்தை வென்று நிற்கும் நூல். பல சமயத்தினரும் தம்தம் மறைநூல் என மதித்துப் போற்றும் ஒப்பற்ற அறநூல். உலக மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய இறைமைக் கோட்பாடுகளைக் கூறிப் பிணக்கில்லாப் பெரும்பயன் விளைவிக்கும் சிறந்த நூல். திருக்குறள் உலகப் பொதுமறையாய், உயர்வேதமாய்க் கருதப்படுகின்றது.
வள்ளுவரின் இறைக் கொள்கை யாது? கடவுள் வாழ்த்து இடைச் செருகலா? பிற்காலச் சமய நம்பிக்கையினர் புனைந்துரைத்ததா? கடவுள் வாழ்த்து இடைச் செருகலன்று. வள்ளுவர் இறைமையில் நம்பிக்கையுடையவர். திருவள்ளுவரின் இறைவன், உருவ மற்றவன். திருவடிகளாகக் காணப்பட வேண்டியவன்.
“அகர முதல எழுத்தெல்லாம்; ஆதி
பகவன் முதற்றே உலகு” (1)
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை முதலாக உடையன. அது போல உலகமும் கடவுளை முதலாக உடையது. அகரம் எழுத்துக்கள் எல்லாவற்றிற்கும் முதற்காரணம். அகரமின்றி ஒலி பிறக்காது. பிறவொலி பிறப்பதற்கு அகரம் துணையாகின்றது. அகரம் ஒவ்வோர் எழுத்திற்கும் உடன் துணையாக நின்று உதவுவது. எல்லாப் பேச்சு ஒலிகளுக்கும் அகரம், முதலும், துணையும், முடிவும் ஆக நிற்பது. அதுபோல, வையகமும் எல்லா உலகங்களும் நிறைந்த வானகமும் இறைவனடியாகத் தோன்றி, இறைவன் துணையால் காக்கப் பெற்று, இறைவனால் ஒடுங்கும் என்ற உண்மையையும் இவ்வுவமையால் அறிய முடிகின்றது. இறைவனே மூலமும், முதலுமாய் இருக்கின்றான் என்ற உண்மையை அறிவியல் கண்ணோட்டத்தோடு அகரம் என்ற உவமையால் அழகுற எடுத்துக்காட்டுகின்றார் வள்ளுவர். எழுத்துக்கெல்லாம் அகரமே முதலாகும். அதுபோல, உலகனைத்துக்கும், ஐம்பூதங்களுக்கும் முதலாகும் ஆதி பகவன் தனக்குத் தானே முதலாகும்.
வாழ்வு இனிமை மிக்கதாய், இன்பம் நிறைந்ததாய், உடல் நலமும், உள்ள நலமும் பெற்று, உள்ளம் மகிழ்வும் அமைதியும் நிறைந்ததாய் நிறைவாழ்வு வாழ அனைவரும் விரும்புகின்றோம். நடைமுறை வாழ்வில் நாம் விரும்பியபடி வாழ முடிகின்றதா?
வாழ்வில் இன்பம் எவ்வளவு இயற்கையோ அதுபோலத் துன்பமும் துயரும் இயற்கை. இன்பமும், துன்பமும் இரவும் பகலும் போல் மாறி மாறி வரும். யாரும் துன்பத்திலிருந்து, கவலையிலிருந்து தப்பிக்க முடியாது. தோல்வியும், ஏமாற்றமும், சோர்வும், அச்சமும் நேரும்போது, ‘வாழ முடியுமா?’ என்று கலங்கும்போது, உயராற்றலுடைய இடையூறுகளை, இடுக்கண்களை அழிக்கும் மேலான, எல்லா வல்லமையும் நிறைந்த, ஆற்றல் மிக்க உயர்துணையை, உயிர்த்துணையை நம்பிக்கையோடு நாடுகின்றோம். “இலக்கம் உடம்பு இடும்பைக்கு என்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல்” (627) என்ற நம்பிக்கை, இறைவனைத் துணைக் கொண்டால்தான் முடியும். தொடர் நினைவின் வலிமை தரும் நம்பிக்கை நமக்கு ஆற்றலைத் தருகின்றது; ஆறுதல் தருகின்றது; கவலையைப் போக்குகின்றது. எவ்வகையாலும் தனக்கு நிகரில்லாத அருளாளன் தாளைச் சேர்ந்தார்க்கு அல்லாது மனத்தின்கண் நிகழும் எல்லாத் துன்பங்களையும், துயரங்களையும் நீக்கவியலாது.
ஏழை, எளியவர், துன்பமும், துயரும் உடையவர் மட்டுமன்றி, ஆற்றலும், பெருமையும் மிக்க அரசாள்பவர் களும், முற்றும் துறந்த துறவியர், பெருஞ்செல்வர்கள், அறிஞர்கள், ஞானிகள், விஞ்ஞானிகள், வலிமை மிக்கவர் என அனைவரும் தங்கள் நிலையிலிருந்து தாழாது வாழவும், மேலும் மேலும் உயரவும், எதிர்பாராத விபத்து, ஆபத்துக்கள், மனத்தில் தோன்றும் அச்சங்கள் இவை களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும், எல்லா மனக்கவலைகளை மாற்றிடவும் இறைவன் துணையை நாடுகின்றனர். கடவுளை மறுப்பவர்களும் உயிரச்சம் ஏற்படும்போதும், பதவியிழக்க நேரிடும்போதும் தங்களைக் காத்துக் கொள்ளப் பெரும் நம்பிக்கையோடு இறைவனை இரகசியமாகப் பற்றிக் கொள்கின்றார்கள்.
முதலில் கடவுள் நம்பிக்கையற்றவர்கள், காலம் மாறும் போது, துன்பங்கள், துயரங்கள் அடுக்கடுக்காய் நேரிடும்போது, நோய்களால் பாதிக்கப்படும்போது, தாழ்வு நேரும்போது, நண்பர்களால், உறவினர்களால் கைவிடப் படும்போது, தனக்கு நிகரில்லாதவன் தாளைப் பற்றிக் கொள்கின்றார்கள். அறிவின் துணை மட்டும் கொண்டு நாத்திகம் பேசுகின்றவர்களும், துன்பங்கள் பேரிடியாகத் தாக்கிப் பேரிடர் ஏற்படும் போது, இதயத்தால் உணர்ந்து உண்மை அனுபவத்தால் தெளிவுபெற்றுத் தங்கள் சிற்றறிவுக்கு அப்பாற்பட்ட வாலறிவனின் அற்புத ஆற்றலை உணர்ந்து மாற்றம் பெறுகின்றார்கள். மனக்கவலையை மாற்ற வல்லவன் எல்லா வல்லமையும் நிறைந்த இறைவனே என்று உணர்கின்றனர்; இயற்கையின் பேராற்றலை உணர்கின்றனர்.
“தனக்குஉவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது” (7)
இறைவன் எல்லாருடைய உள்ளத்திலும் வீற்றிருக்கின்றான். இறைவன் தூயவர் உள்ளத்தில் மாட்சியுடன் ஆட்சி செய்கின்றான். இறைவன் என்றால் எங்கும், எதிலும் நிறைந்து தங்கியிருப்பவன் என்று பொருள். கடவுள் என்றால் எல்லா எல்லைகளையும் கடந்து நிற்பவன் என்று பொருள். எங்கும் நிறைந்தும் கடந்தும், எல்லா உயிர்களிலும் பொருள்களிலும் நீக்கமறத் தங்கியிருக்கும் இறைவன் பெரும் கொடைஞன்; பேரருள் மிக்கவன். வேண்டத்தக்கது அறிந்து வேண்டுவன எல்லாம் நல்குபவன்; வேண்டிய வேண்டியாங்கு செய்தலால் செய்தவம், ஈண்டு முயலப்படும். இறைவனை நோக்கி முயன்று தவம் செய்தால், இடைவிடாது உழைத்தால் வேண்டியதை வேண்டியபடி பெறலாம் என்று வள்ளுவர் உறுதியளிக்கின்றார்.
‘மலர்மிசை ஏகினான்’ என்பது பரிமேலழகர் கருத்துப்படி அன்பால் நினைப்பவரது உள்ளக் கமலத்தின் கண் அவர் நினைத்த வடிவோடு சேறலே ஆகும். அன்பாய் நினைப்பவர் நெஞ்சத் தாமரையில் எழுந்தருளிய இறைவனை வழிபடுவோர் இம்மையிலும் நீடுவாழ்ந்து, மேலுலகிலும் நலம்பெற்று வாழ்வர். நிலமிசை, மிசைநிலம் என்று மாற்றிப் பொருள் கண்டால் நிலமிசை என்பது இம்மை உலகில் என்றும், மிசைநிலம் என்பது மேலுலகில் எனவும் பொருள் தரும்.
இறைவன் எல்லாவற்றுள்ளும் நிறைவுள்ளவன். அதனால் தனக்கு எதிலும் வேண்டுதல், வேண்டாமை, விருப்பு, வெறுப்பு இல்லாதவன். அவனுடைய திருவடியைச் சென்று அடைபவருக்கு என்றும் துன்பங்கள், துயர்கள் தோன்றா.
“வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல” (4)
இறைவன் ஐந்து அவாக்களும் நீங்கப்பெற்றவன்; ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்டவன்; இறைவன் தன்னை வழிபடுவோரின் ஐந்து புலன்களின் வழியாகத் தோன்றும் ஆசைகளைக் கட்டுப்படுத்துபவன் அத்தூயவனது உண்மையான ஒழுக்க நெறியைப் பின்பற்றி நடந்திடுவார் நீடிய புகழுடன் வாழ்வர்.
இறைவனின் நல்லியல்புகளைப் பின்பற்றி ஒல்லும் வகையால் அறவினை செய்வோரிடம், புகழ்மிக்க நற்பணி ஆற்றுபவர்களிடம் அறிவை மயங்கச் செய்யும், செருக்கை ஏற்படுத்தும் நல்வினையும் தீவினையும் சேரா.
“இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு” (5)
இறைவன் பொறிவாயில் ஐந்தவித்தான்; மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களும் இல்லாதவன்.
ஒழுக்கமே கடவுள் தன்மையை வளர்ப்பது
“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்” (131)
ஒழுக்கமே உயிர். பொய்தீர் ஒழுக்க நெறியே வள்ளுவர் போற்றும் உயர்வாழ்வு. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை, இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி. நல்லொழுக்கம் நல்லறமாகிய விளைச்சலுக்கு விதைக்கப் படும் விதை. தீய ஒழுக்கம் அப்பொழுது மட்டுமன்றி எப்பொழுதும் தீராத துன்பம் தரும். ஒழுக்க நெறி வாழ்தலே தெய்வ வாழ்வு; இன்ப வாழ்வு; இனிய வாழ்வு.
‘அறன் வலியுறுத்தல்’ அதிகாரத்தில் வள்ளுவர் அறத்தின் ஆற்றலையும், பெருமையையும் விரிவாகக் கூறுகின்றார். சிறப்பாகிய வீடுபேற்றையும், செல்வச் செழிப்பையும் வழங்குவது அறநெறியாகும். இவ்வறத்தைக் காட்டிலும் மேன்மையானது எதுவும் இல்லை.
“சிறப்புஈனும்; செல்வமும் ஈனும்; அறத்தின்ஊஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு?” (31)
“அறத்தான் வருவதே இன்பம்;மற்று எல்லாம்
புறத்த புகழும் இல” (39)
அறச்செயலால் வருவதே இன்பம். அறச்செயலே புகழ் தரும். அறத்திற்கு மாறானது இன்பம் தந்தாலும், துன்பம் ஆகும்; புகழையும் பெருமையையும் கெடுக்கும்.
அறக்கடவுள் நன்மை செய்பவருக்கு நன்மையையும், புகழையும், இன்பத்தையும் நல்குவார். தீமை செய்பவரை, அறவாழியாகிய படைக்கலம் அழிக்கும்; தீயோரை ஒடுக்கும்; ஒறுக்கும்.
“என்பு இலதனை வெயில்போலக் காயுமே
அன்பு இலதனை அறம்” (77)
“மறந்தும் பிறன்கேடு சூழற்க; சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு” (204)
அறக்கடவுளாகிய இறைவன் மறத்தை, தீமையை அழித்து, நன்மையாகிய அறத்தைக் காப்பான். அறக் கடவுளாக விளங்கும் அந்தணனாகிய இறைவன் அடி போற்றி நடப்பவர், மற்றைப் பொருளும் இன்பமுமாகிய கடல்களை இறைவன் துணைகொண்டு எளிதாகக் கடந்து செல்வர். மற்றவர் பிற துன்பக் கடலில் இருந்து மீளமுடியாது துன்புறுவர்.
‘எண்குணத்தான்’ என்ற சொல்லுக்கு உரையாசிரியர்கள் பல்வேறு பொருள் கூறுகின்றார்கள். பரிமேலழகர், பரிதியார், மணக்குடவர் ஆகியோர் எட்டுக் குணங்களை யுடையவன் என்று பொருள் கொள்கின்றனர்.
தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களில் நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை என இவை எட்டுக் குணங்களாம்.
எட்டுக்குணங்களையும் ஏற்றுக்கொண்டு திரு.வி.க. அவர்கள் அடியாரால் எண்ணப்படும் குணங்களை உடையவன் என்ற சிறப்புப் பொருளும் கண்டார்.
‘எண்குணத்தான்’ என்பதற்கு எளிமை வாய்ந்த குணமுடையான், அன்பருக்கு எளியன் என்ற பொருளும் உண்டு. எண் என்னும் அடி திருக்குறளில் எளிமை என்ற பொருளில் வழங்கப்பட்டுள்ளது.
“எண்பொருள வாகச் செலச் சொல்லி” (424)
“எண்பதத்தால் எய்தல் எளிதுஎன்ப” (991)
“எண்பதத்தான் ஓராமுறை செய்யா மன்னவன்” (548)
இக்குறள்களில் வரும் ‘எண்’ என்ற சொல் எளிமை என்ற பொருளில் வழங்கப்பட்டுள்ளது. இறைவன் அடிகள், யான், எனது என்னும் செருக்கறுத்து அருளும். அவ்வடிகளை வணங்குவதே செருக்கு அறுக்க உதவும் குணமாகும்.
தலைநிமிர்வு முனைப்பிற்கு அறிகுறி
தலை, தாளை வணங்குவது தாழ்மைக்கு அறிகுறி
மேலேயுள்ள தலை, இறைவனின் கீழேயுள்ள திருவடிகளில் விழுவது செருக்கும், முனைப்பும் சாய்ந்து விழுந்து ஒடுங்குதலைத் தெரிவிப்பது என்கிறார் திரு.வி.க.
எண்குணத்தான் : ஆதிபகவன் மூலம் அருளப்பட்ட வேதம்.
மனிதன் தலை உயிரின் அறிவையே குறிக்கும். தலையாகிய சிற்றறிவு, தாளாகிய வேதமுடன் பொருந்த வேண்டும். இன்றேல், கற்றதனால் பெற்ற அறிவில் பயனில்லை என்பார் கா.அப்பாத்துரையார்.
இயங்காத உடல், பேசாத வாய், மோவாத மூக்கு, காணாத கண், கேளாத செவி ஆகியவற்றால் பயன் ஏதும் விளையாது. அதுபோல எண்ணரிய பண்புகளின் இருப்பிடமாகத் திகழும் இறைவனின் திருவடியை வணங்கி நடவாதவரின் தலைகளின் நிலையும் பயனற்றது ஆகும்.
“கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை” (9)
திருவள்ளுவர் மறுபிறப்பில் நம்பிக்கையுடையவர்; ஓருயிர் பல பிறப்பு எடுக்கும் என்று கருதுபவர். இறைவனுடைய திருவருளைப் பெற்றவர்கள், இறைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்கள், பிறவியாகிய பெருங் கடலைக் கடக்க முடியும்; மற்றவர் அப்பிறவிக் கடலைக் கடக்கமுடியாது.
“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன்அடி சேரா தார்” (10)
திருவள்ளுவர் அறக்கடலாய் விளங்கும் இறைவனைச் சார்ந்து பேரா இயற்கை பெற்று இனிது வாழ, பிறவாநிலை பெற்றுப் பேரின்பம் காணக் காட்டும் வழிமுறைகள் யாவை?
இறைவன் ஒருவன் உண்டு என்று உணர்ந்து வாழ வேண்டும். துன்பங்கள், துயரங்கள் நீங்கி இன்புற்று வாழ, நிலமிசை புகழோடு நீடு வாழ, அச்சம், ஆபத்து நீங்கி வாழ, இறைவனின் துணை வேண்டும். வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து, வாழ்வில் பயனடைய, பிறப்பு முதல் இறப்பு வரை தெய்வநிலை பெற இறைவன் திருவடிகளின் துணை வேண்டும்.
கடவுள் பெயரால் நடைபெறும் சடங்குகள், சரியை, கிரியை வழிபாடு ஆகியவற்றைப் பற்றி விருப்பு வெறுப்பின்றி யாதொரு செய்தியும் திருவள்ளுவர் கூறவில்லை.
வாழ்க்கை, அறத்தின் அடிப்படையில் அமைய வேண்டும். அறத்தோடு பொருந்தி நற்செயல்கள் செய்தால் எல்லா நன்மைகளும் ஆக்கமும், உணர்வும் நாடி வந்து சேரும். அறச்செயல் செய்யாது மறந்துவிட்டால் தீமையும், கேடும் நாடாமலே தேடி வந்து சேரும்.
“அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை; அதனை
மறத்தலின் ஊங்குஇல்லை கேடு.” (32)
மனம் மாசற்றதாக இருந்தால்தான், – பொறாமை, நியாயம் இல்லாத பேராசை, தன்னையே அழிக்கும் கடுங்கோபம், கடுமையான இன்னாச்சொற்கள் ஆகியவை களிலிருந்து நீங்கியிருந்தால்தான் – உண்மையால் நிறைந்திருந்தால்தான் – இறைவன் நம் மனத்தகத்தே வீற்றிருப்பான்.
திருவள்ளுவர் வலியுறுத்தும் அடிப்படை நெறிகள் யாவை? பொய்யாமை (வாய்மை), கொல்லாமை, பிறர் உயிர்களைத் துன்பம் செய்யாது போற்றி வாழ்தல், அன்பும் அருளும் கொண்டு வாழ்தல், குடும்பத்திற்கும், உலகிற்கும் உரிய கடமைகள் செய்து பற்றற்றான் பற்றினைப் பற்றிப் பற்றற்று வாழ்தல், விதித்த நற்கடமைகள் ஆற்றல், விலக்கியன ஒழித்தல், அன்பு, நாண், ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையுடைய சான்றோர்களாய், இயன்ற வகையெல்லாம் அறப்பணிகள் செய்து வாழ்தல், அச்சமே கீழ் மக்கள் ஆசாரம் ஆதலால் மேன்மக்களாய் அஞ்சாமை அல்லால் துணைவேண்டா என அச்சமற்று வாழ்தல், அஞ்ச வேண்டிய பழிக்கு அஞ்சி மானத்தோடு வாழ்தல், நிலையாமை உணர்ந்து நிலைத்த செயல்கள் ஆற்றி, சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்தின் வகை தெரிந்து வாழ்ந்து மெய்யுணர்வு பெற்று இம்மையில் புகழோடு வாழ்ந்து, பிறவா நிலை பெற்று, என்றும் பேரின்பம், பேரானந்தம் பெற்று வாழ்தலே வாழ்வில் புகழோடு பயனுற வாழ்ந்திட திருவள்ளுவர் காட்டும் நெறி ஆகும்.
“ஒன்றாக நல்லது கொல்லாமை; மற்றுஅதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.” (323)
முதல்நிலையில் சிறந்த நல்லறம் கொல்லாமையே. அதனை அடுத்த நல்லறம் பொய்யாமை போற்றி வாய்மையை மேற்கொள்ளுதல்.
“கற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றுஈண்டு வாரா நெறி.” (356)
இவ்வுலகில் உண்மை உணர்த்தும் நூல்களைக் கற்று மெய்ப்பொருளைக் கண்டவர்கள் பிறவா நெறிக்கு முயல்வர்.
“பிறப்புஎன்னும் பேதைமை நீங்கச் சிறப்புஎன்னும்
செம்பொருள் காண்பது அறிவு.” (358)
மனத்தைச் செம்மைப்படுத்துவது செம்பொருள். செம்பொருள்தான் கடவுள். பிறப்பு என்னும் பேதைமை நீங்கச் சிறப்பு என்னும் இறைவன் திருவருளை நாட வேண்டும்.
“இன்பம் இடையறாது ஈண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்.” (369)
ஆசை என்று சொல்லப்படுகின்ற துன்பத்தின் துன்பம் கெடின், இன்பம் இடையறாது வந்து சேரும்.
“ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.” (370)
ஒருகாலும் நிறைவு பெறாத இயல்பினையுடைய ஆசையினை ஒருவன் நீக்கிவிடின், அவ்வாறு ஆசையை நீக்கிய நிலையே பிறவா நிலையைத் தரும். ஆசைகள் அற்ற நிலையிலே வீடுபேறு அடையலாம்.
4101total visits,1visits today