செய்க சிந்தனை
வாழ்வில் இன்பமும் துன்பமும் இரவும் பகலும் போல இயற்கையானவை. வாழ்வெல்லாம் இன்பமாகவே வாழ்ந்தாரும் இல்லை; முழுதும் துன்பத்தால் துவண்டாரும் இல்லை என்பது பழமொழி. எனவே இன்பம் கண்டு மகிழ்வது போல, சிந்தனையாலும், செயலாலும் துன்பம் கண்டு கலங்காமலும் வாழப் பயில வேண்டும்.
இன்பம், பிறரை எல்லாம் நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறது; ஆனால் துன்பம், நம்மையே நமக்கு அறிமுகப்படுத்தித் தருகிறது. நம்மை, நமது மனஆற்றலை, நமது செயல்திறனை, நமக்கு அமைந்த சூழலை, நாளடைவில் எதிர்கொள்ளும் சிக்கலை இவற்றிற்கெல்லாம் தீர்வுகாணும் கலையைத் துன்பம் தெளிவாகப் புலப்படுத்திக் காட்டுகிறது.
பட்டை போடப் போட வைரம் ஒளிவிடுவதைப் போல, துன்பம் அடுக்கடுக்காய் வரவர மனிதன் சோதிக்கப்பட்டுத் தன் மதிப்பை அடைகின்றான். துன்பங்கள் அவனுடைய உண்மையான குண இயல்புகளை வெளிக்கொணர்கின்றன. அவன் பிறருடைய துன்பங்களை நினைத்துப் பார்க்கிறபோது தன்னுடைய துன்பங்களைச் சகித்துக் கொள்ளக் கற்று விடுகிறான்.
‘உடல் உள்ளவரை, கடல் கொள்ளாத கவலை’ என்பார்கள். கவலைகளே, துன்பத்தைப் பிடித்து நம்மிடம் கொணரும் வலைகள்! நம்மில் பலர் அளவுக்கு மீறிக் கவலைப்பட்டு வருகிறோம்; நூறாண்டுகள் கவலைப்பட்டாலும் அக்கவலை ஒரு காசுக்கடனைக்கூடத் தீர்க்க உதவாது என்பதை அறிந்திருந்தும்கூட, நாளும் கவலைப்படுகிறோம்.
மனத்தூடே நுட்பமாய் ஓடும் சிற்றோடை போன்ற கவலையை, நாமே ஊட்டம் கொடுத்து, அதைப் பெரிய கால்வாயாக ஆக்கிக்கொண்டு விடுகிறோம்.
இந்தக் கவலையே துன்பத்திற்கு அடிப்படைக் காரணம் ஆகும். இந்தக் கவலைதான் எத்தனை வகை! தன்னைப் பற்றி, தன் குடும்பம், உறவு முதலியன பற்றி, செய்யும் தொழில், சேர்ந்திடும் நண்பர் ஆகியோர் பற்றி, உட்பகை புறப்பகை பற்றி, ஊரும் நாடும் பற்றி, நோயும் சாவும் பற்றி – நமது கவலைத் தரு நாளும் ஒரு கிளை பரப்பி, துன்பங்கள் எனும் விழுதுகள் ஊன்றி நம் வாழ்வெல்லாம் நிழல் பரப்பிக் கொள்கிறது.
உலகில் சிக்கல்களும் சிரமங்களும் இல்லாத மனிதர் யார்? அமைப்பு எது? நாடு தான் எது? இத்துன்ப மேகங்கள் சூழக்கண்டு, கவலைப்பட்டு வாடுவதால், துன்பம் ஓடிடுமா? கவலைக்கான காரணங்களை ஆராய்ந்து, சிந்தனை செய்து ‘நோய் நாடி, நோய் முதல்நாடி, அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்’ (948) என்றபடி செயலுக்குத் துணிய வேண்டும். கடந்த காலக் கவலைகளை மறந்துவிட்டு, ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ எனும் உற்சாகத்துடன், இன்றைக்கு உரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி, வாழக் கற்றுக் கொள்ளவேண்டும். துன்பங்கள், சோதனைகள் என்பன வேதனையைத் தந்தாலும் தமது ஆழ்ந்த சிந்தனையால் உருவாகும் செயல்திறத்தால் அவற்றைச் சாதனைகளாக மாற்றிக் கொள்ள முனைய வேண்டும். கடமையுறுதியோடு வேலையில் ஈடுபடுவதே கவலைக்குக் கைகண்ட மருந்து என்பது போல, செயலீடுபாடு மிகமிக சுடச்சுடரும் பொன் போல, வாழ்வும் ஒளி பெற்றுத் துலங்கும்.
“துன்பப் பறவைகள் தலையில் கூடுகட்டுவதை வேண்டுமானால் தடுக்கலாமே தவிர, அவை நம் தலைக்கு மேலே வட்டமிடுவதை ஒருபோதும் தவிர்க்க முடியாது” என்பார் மேலைநாட்டு அறிஞர் ஒருவர். உலகம் நம்மைப் பற்றித் தெரிந்து கொண்டுள்ளதோ இல்லையோ, ஆனால், அந்த உலகத்தைப் பற்றி நாம் தெரிந்து கொள்வதற்கு, நமக்கு வரும் துன்பமே சாளரமாக அமைகிறது. இன்ப வேளையில் ஒருவன் கற்றுக்கொள்வதைவிட, துன்பம் வரும் நாளில்தான் அவன் அதிகம் கற்றறிந்து கொள்ளுகிறான்; நட்புரிமை, சுற்றுச்சூழல், உலகியல் உண்மை எனும் இவற்றை எல்லாம் சீர்தூக்கி அறியும் வாய்ப்பினைப் பெறுகிறான்.
ஆதலின் கவலையை, துன்பத்தை ஒரு சிக்கலாகக் கருதித் தீர்வுகாண முற்படவேண்டுமே தவிர, குனிந்து குமைந்து சிதிலமாகிப் போய்விடக்கூடாது. நம் சிந்தனைக்கு உட்படாத, தீர்க்கவியலாத சிக்கலாக அமையின், அதனையும் எதிர்நோக்கி, அதனையும் வாழ்வின் ஒரு பகுதியாக ஏற்று, எப்படியும் வாழ்ந்துகாட்டத் துணிய வேண்டும். ‘ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான்’ ஆதலால் உலக நடையினை அறிந்து, உயிருக்கு உரிய அறிவையும் ஆற்றலையும் பிறரிடத்துப் போலத் தானும் வளர்த்துக்கொண்டு, துன்பத்தை ஒரு சுவையாகப் பழகி, மாற்றி ஏற்றுக்கொண்டு உயர முற்படவேண்டும்.
“இலக்கம் உடம்புஇடும்பைக்கு என்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்” (627)
என்பார் வள்ளுவர்.
இதனை உணர்ந்து, எதையும் தாங்கும் இதயம் கொண்டு, சிறு துன்பங்களைப் பழக்கமான ஒன்றாக ஏற்று, பெருந்துன்பங்களை எதிர்கொள்ளவேண்டிய ஒன்றாகக் கருதித் துணிந்து, ஆற்றலும் வன்மையும் பெற்று வாழவேண்டும். இவ்வாற்றலைப் பெறும் போது – நம்பிக்கை, மனத்திண்மை, சமநிலைப் பாங்கு என்பன நம்மோடு கை கோத்து உடன்வரும். ‘இடுக்கண் வருங்கால் நகுக’ (621) அப்படி அணுகும்போது – துன்பமும் இன்பமாக மாற முற்படும். பகைவரும் மதிக்கும் சிறப்புப் பெறவேண்டும் எனில், துன்பத்தையே இன்பமாக மாற்றும் ஆற்றல் பெற வேண்டும்.
துன்பத்தைப் பொறுத்துக் கொள்வது வேறு; அதனை இன்பமாக மாற்றிக் கொள்ளுதல் வேறு. எனவே துன்பத்தை இன்பமாக மாற்றிக் கொள்ளுதல் எல்லோருக்கும் இயலுமா எனக் கேட்கலாம். சான்றோர் வாழ்வில் அவர்கள் மேற்கொண்ட சாதனைகளைச் சாமானியர்களாகிய நாம் கைக்கொள்ள இயலுமா எனச் சந்தேகப்படலாம். சான்றோர்கள் நமக்காகவே வாழ்ந்து காட்டியுள்ளார்கள். அவர்களது வழியைப் பின்பற்றி ஓரளவு செல்ல முற்படும்போது அவர்கள் கண்ட சாதனைச் சுடர்கள் நமக்கு வழிகாட்டிக் கைகொடுக்க வந்துவிடும். துன்பம் வாழ்வின் கொடை. அதன் சுவை தெரிந்தால்தான் இன்பத்தின் சுவையும் புரியும். வெயிலருமை நிழலில் தெரிவது போல ஒன்றன் சிறப்பு மற்றொன்றில் புலனாகும். துன்பத்தை வாழ்விற்கு உதவும் சாதனையாக்கும் எளியது முடிந்தால் அரிய சோதனைகளைச் செய்து பார்க்க முனைகையில் – நாணயத்தின் இரு பக்கங்களைப் போல – இன்பமும் துன்பமும் தக்க சமன்பாட்டைக் காணும்.
துன்பச் சூளையில் அதிகம் வேகும்போது பொன்னார்ந்த மனம் புலப்பட்டு உதவுகிறது. துன்பம் ஒரு வகையில் பலருக்கும் கசப்புத்தான். என்றாலும் கசப்பே நாளடைவில் நாம் விரும்பும் சுவையாகிவிட முடியும். வேப்பங்கொழுந்தைச் சிறிது சிறிதாகத் தின்னப் பழகிக் கொண்டால் – அது சுவையான மருந்தாகி நலம் செய்வதைப் போல துன்பச் சுவையும் நலம் தரும் மருந்தாகிவிடும். வாழ்வில் துன்பமும் சில சமயங்களில் நமக்குத் தேவைதான். அழுக்குத் துணியை அடித்துத் தோய்த்து மாசு நீக்குதல் போல, நம்மைப் பீடிக்கும் பல்வேறு மனமாசுகளையும் நீக்கிக்கொள்ள, அத்துன்பத் தோய்வே தக்க பயன் தரும்.
சில சமயங்களில் துன்பம் வாழ்வின் மையமாக நின்று ஆட்டி வைக்கும் போது, அதிலும் ஒரு சுகம் காணலாம்; ஒருவகை லயம் இழைந்தோடுவதை உணரலாம். உண்மையில், எந்த ஒன்றும் முற்றிலும் துன்பம் தருவதில்லை. அத் துன்பத்தின் ஊடேயும் – புகை நடுவினில் தீ இருப்பதைப் போல – அத்துயரத்தின் நடுவிலும் வாழ்க்கை எனும் நம்பிக்கைத் தீ கனன்று கொண்டே இருக்கும். பக்குவமாக அதைச் சற்று ஊதிவிட்டு அணையாமல் அரவணைத்துக் கொண்டால், அது மறுபடியும் கொழுந்து விட்டெரியத் தொடங்கிவிடும். இந்த மனப்பக்குவத்தை எவரும் முயன்று ஆக்கிக் கொள்ள முடியும். அப்பக்குவம் கைவந்துவிட்டால், எதிரியும் பணிந்து நிற்கும் ஏற்றம் நமக்கு ஏற்பட்டுவிடும். காந்தியடிகள், பண்டித நேரு முதலியோரின் போராட்ட வாழ்வில் ஏற்பட்ட மனப்பக்குவங்கள் அவரவர் வாழ்வுப் போராட்ட முனைகளிலும் ஏற்பட்டே தீரும். இந்தப் பக்குவத்திற்கு உதவும் முதல்படி நமக்கு சிந்தனையில் செயலில் – ஒருவகைச் சமநிலைப் பாங்கு ஏற்படுதல் ஆகும்.
“துன்பம் உறவரினும் செய்க துணிவுஆற்றி
இன்பம் பயக்கும் வினை” (669)
எனும் வள்ளுவர் அறிவுரைப்படி, இன்பம் பயக்கும் காரியங்களை, துணிவாற்றி – அதாவது கலங்காது – செய்ய வேண்டும். துன்பத்தைப் புறங்காணவும் வேண்டும். இன்பத்தை மேலும் மிகுவித்துக் கொள்ளவும் வேண்டும். இந்த ஆற்றலே பக்குவம். இப்பக்குவத்தின் அடுத்த படி- ‘நகுக’. நம்மை ஒரு மூன்றாம் நபர் போலக் கருதிக் கொண்டு, நமக்கு வரும் பிரச்சினைகளை அணுகவும் சமாளிக்கவும் முனையும் போது நகும் மனப்பாங்கும், நடுவுநிலைத் திறனும் நமக்கு ஏற்பட்டுவிடும்.
இன்று பழியும் பழிப்பும் அற்ற வாழ்க்கை அருகி வருகிறது. நமது அரசு முறைகளும், சமுதாய நடைமுறைகளும் பழிபடர்ந்த வாழ்வுக்கே முலாம் பூசுகின்றன. போட்டியும் பொறாமையும் அடர்ந்த வாழ்வில், எப்படியும் நிலைக்க வேண்டும் என்ற போராட்டத்தில் நண்பரே பகைவராகும் துன்பமும், சுற்றமே எதிராகும் துயரமும் வளர்ந்து வருகின்றன. ஊரெல்லாம் இவ்வாறு காற்று கெட்டுப் போயிருக்கையில், நமது நுரையீரலில் மட்டும் நல்ல காற்று வந்துவிடும் என எதிர்பார்க்கலாமா?
உலகப் போக்கோடு – அந்த வெள்ளத்தோடு அடித்துச் செல்லப் படுவதைவிட, அதற்கு எதிர் நீச்சலிடும் போதுதான்- வாழ்வில் ஒருவகைச் சுகம் தெரிகிறது. இந்தச் சுக அனுபவம் ஒவ்வொருவர் வாழ்வுக்கும் உரியது; சற்று முயலும் எவர்க்கும் எளியது; நாளடைவில் எல்லோர்க்கும் இனியது.
பகைவரே போற்றும் இச்சிறப்பினை அடைய துன்பத்தையே இன்பமாக மாற்றிக் காட்டும் ரசவாத உணர்வு அவரவர் மனதில் – செயலில் – அரும்ப வேண்டும்; மலர வேண்டும்; மணம் பரப்ப வேண்டும்; அந்த மணம் பரவப் பரவ – சூழ்நிலைக் காற்றும் சுத்தமாகும். ஒருவர் பூசிக்கொள்ளும் வாசனை – சூழ்ந்திருப்போருக்கு எல்லாம் மணம் பரப்புகிறதல்லவா, அதைப் போல! வள்ளுவர் இதனையே,
“இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்
ஒன்னார் விழையும் சிறப்பு” (630)
எனப் பக்குவமாகச் சொன்னார்.
“துன்பமே இயற்கை எனும்
சொல்லை மறந்திடுவோம்
இன்பமே வேண்டி நிற்போம்
யாவும் அவள் தருவாள்”
எனப் பரவசமுற்றுப் பாடினான் பாரதி.
மறக்கத் துணிவதும் – நாடி நிற்க முயல்வதும் – வாழ்க்கை நடைக்கு உதவும் இரு கால்களைப் போன்றவை. இந்த நடைப்பயிற்சியினையே நமது இலக்கியங்கள் எல்லாம் பேசுகின்றன.
34248total visits,23visits today