இந்திய நாட்டுப் பொதுநூல்களின் வரிசையில் முன்னிடம் பெறுபவை இராமாயணமும் மகாபாரதமும் திருக்குறளும் ஆகும். இராமாயணம் இனியதொரு நீதி நூல்; மகாபாரதம் விரிந்ததொரு சமூகச் சாத்திரம்; திருக்குறள் ஓர் உலகப் பொதுமறை. மகாபாரதத்தை அருளிய வியாசர், ஏறத்தாழ இலட்சம் சுலோகங்களில் எண்ணிலாச் சித்திரங்களையும் வரலாற்று நடப்புகளையும் பேராற்றலுடன் வருணித்துள்ளார்.
மாபெரும் தங்கச் சுரங்கம் போலவும். பரந்து பட்டதொரு கானகம் போலவும் அமைந்துள்ள மகாபாரதத்தின் உயிர்நிலையாக இருப்பது கீதை. பல்வேறு தத்துவச் சுடர்களும் உபதேச மணிகளும் இக்கீதையிலிருந்து பிரவகித்துள்ளன. தரும ஞானக் கருவூலமான இக்கீதை, மகாபாரதத்தில் ஒரு சிறு அங்கமே ஆயினும், இந்து சமய சாத்திரத்தின் மணிமுடியாகவே அது திகழுகிறது. கீதையை கிருஷ்ண பகவான் குருசேத்திரப் போர் நடுவே அர்ச்சுனனுக்கு அருளினார். போரில் தன் தாயாதிகளுடன் மோதி நிற்க வேண்டியதொரு இடர்ப்பாட்டிற்கு உள்ளான அர்ச்சுனனின் கலக்கத்தை அகற்றி அவனைப் போரில் மன உறுதியோடு ஊன்றி நிற்கச் செய்வதற்காகக் கீதை அருளப்பட்டது எனக் கருதப்படுகிறது. என்றாலும், கீதை அருளப்பட்டதன் முழுநோக்கமும் இது இல்லை என்பதை அதனை ஆழ்ந்து கற்கும் எவரும் எளிதில் அறிய முடியும். கோழைத்தனத்தை அகற்றுதல் எனும் எளியதொரு நோக்கத்தை விட, வாழ்வுப் பேருண்மைகளை உணர்த்தி, மக்களின் உள்ளத்தை மூடும் மேகப் படலங்களை அகற்றி, மன உறுதியோடும், கடமைப் பற்றோடும் வாழ்ந்திட வழிகாட்டுவதே அதன் விழுமிய நோக்கமாகும்.
“அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தான் செயின் (497)
“கடன்என்ப நல்லவை எல்லாம்” (981)
இந்திய ஞான வாழ்வின் கலைக்களஞ்சியமான கீதைக்கு நிகராக, தமிழ் மண்ணில் மலர்ந்த வாழ்க்கை நூல் திருக்குறள். வாழ்க்கைப் போரில் அவரவர் சந்திக்கும் சிக்கல்களுக்கெல்லாம் எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் தீர்வு நல்கிக் காலத்தை வென்று நிற்பது திருக்குறளின் பெருஞ்சிறப்பாகும். கீதை, திருக்குறள் எனும் இரண்டிலும் பொதிந்துள்ள சில பொதுக்கூறுகளை மட்டும் சுருக்கமாக நம் நினைவுப் படலத்திற்குக் கொணர்வோம்.
திருக்குறள் நடுநிலைப் பண்போடு உலகிற்கே அறம் உணர்த்திய திருமறையாகவும் பொதுமறையாகவும் திகழ்வது; உலக மக்கள் அனைவரின் நல்வாழ்விற்கும் பெருவாழ்விற்கும் ஒப்பில்லாப் பொதுமை நலம் தருவது; உயர் நாகரிகமுடையதாய் இனம், நாடு, மொழி, சமயம், காலம் இவையெல்லாம் கடந்த தனக்கு உவமையில்லா முதல் நூலாக விளங்குவது; வேறுபடும் சமயங்கள்கூடத் தமதென உரிமை கொண்டாடிப் போற்றிப் பாராட்டிடும் புகழுடன் திகழ்வது.
மகாபாரதத்திற்கு ஒரு பக்கம் ஆறு பருவங்களும், மறுபக்கம் பன்னிரண்டு பருவங்களும் அமைந்திருக்க அவற்றினிடையே நந்தா விளக்கெனக் கீதை இலங்குகிறது.
கீதையின் முதல் அதிகாரம் அர்ச்சுனனின் மனப் போராட்டத்தைக் குறிக்கின்றது. அவனது பரிவுணர்ச்சி இதில் மேலோங்கி நிற்கிறது. இரண்டாம் அதிகாரம் உடலெடுத்த ஆன்மா அழிவில்லாதது எனும் சாங்கிய யோக அடிப்படையை எடுத்துரைக்கிறது; சுயதர்மப்படி இதில் மிகுதியும் வலியுறுத்தப்படுகிறது. மூன்றாம் அதிகாரம் கர்ம யோகத்தைக் கற்பிக்கிறது. நான்காம் அதிகாரம் நேர்மையான சிந்தையின் அவசியத்தைப் போற்றுகிறது. அதர்மம் ஓங்கித் தர்மம் குன்றும் போதெல்லாம் கடவுள் அவதாரம் எடுப்பார் எனும் ‘சம்பவாமி யுகே யுகே’ என்னும் வாசகம் இந்த அதிகாரத்தின் மணிமுடியாக நிற்கிறது. “எந்த வழியில் அணுகினும் அந்த வழியில் நான் அன்பு காட்டுகிறேன்.” எனும் தத்துவ தரிசனங்கள் இப்பகுதியின் சிறப்பு அம்சங்கள். ஐந்தாம் அதிகாரம், ஒருவன் ஞானத்தை உணர்ந்து, தன் கர்மங்களைக் கடந்து நிலைபெற வேண்டும் என்ற கர்ம சந்நியாச யோகத்தைக் கற்பிக்கிறது.
ஆறாம் அதிகாரம் யோகத்தின் குறிக்கோள் பரம்பொருள் அனுபவம் என்பதை எடுத்துரைக்கிறது. எல்லா உயிர்களையும் ஆத்மாவினுள் காணும் சம தரிசனத்தை, “காக்கைச் சிறகினிலே நந்தலாலா நின்றன், கரிய நிறம் தோன்றுதையா நந்தலாலா” எனப் பாரதிக் கவிஞன் கண்டுணர்ந்த மெய் அனுபவத்தை நமக்குப் புலப்படுத்துகிறது.
ஏழாம் அதிகாரம் ஞான யோகத்தையும், எட்டாம் அதிகாரம் பிரம்ம யோகத்தையும் விளக்கி நிற்க, ஒன்பதாம் அதிகாரம் ‘அனைத்தும் என்னுள் உயிர் பிழைத்திருப்பன’- எது செய்தாலும் எனக்காக நல்கி விடு – எனும் ராஜ யோகத்தை விளம்புகிறது.
பத்தாம் அதிகாரம் பரம்பொருளின் புகழையும் மாட்சியையும் விண்டுரைக்கிறது. பதினொன்றாம் அதிகாரம் விசுவ தரிசன யோகமாக, அகிலத்துக்கும் நீயே தந்தை எனத் தன்னையே அர்ப்பணித்து வணங்கும் தொழுநிலையைக் காட்டுகிறது.
பன்னிரண்டாம் அதிகாரம் பக்தி யோகத்தையும், பதின்மூன்றாம் அதிகாரம் அறியப்படும் உண்மைப் பொருள் பற்றியும் பேசுகின்றன. பதினான்காம் அதிகாரம் குணத்ரய விபாக யோகம் பற்றியும், பதினைந்தாம் அதிகாரம் புருஷோத்தம யோகம் பற்றியும் உரைக்கின்றன. ‘மேலே வேரும் கீழே கிளைகளும் உள்ள நித்திய அரசமரம்’ இதில் சுட்டப்படுகிறது. பதினாறாம் அதிகாரம் தெய்வாசுர சம்பத் விபாக யோகத்தையும் பதினேழாம் அதிகாரம் ‘ஓம் தத் சத்’ (ஓம் – அது உனது) எனும் பிரம்மனைச் சுட்டும் அடையாள மந்திரத்தைக் காட்டுகிறது. பதினெட்டாம் இறுதி அதிகாரம் ஒருவன் பிரம நிலைக்கு உயரும் அமர நிலையைச் சுட்டுகிறது.
அமரநிலை சுட்டிப் பேசும் கீதையைப் போலவே, திருக்குறளும் வானகம் இங்குத் தென்படச் செய்யும் வழிகளை விதந்தோதுகிறது. “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” (50) என வையத்து மனிதரெல்லாம் வாழ்வாங்கு வாழ்ந்திட வரம்பு கோலித் தருகிறது. எனவே தான் வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்டதாகத் தமிழ் நாட்டைப் பாரதிப் புலவன் பாடிப் பரவினான். தாம் யாத்த நூலுக்குச் சிறப்பீட்டித் தந்துள்ளார் வள்ளுவர். கீதை போல, உலகிற்கென ஒரு நூலை அளித்த பெருமையை இந்தத் தமிழ் மண்ணுக்கு அவர் அளித்துள்ளார்.
திருவள்ளுவரின் நூல் அறம், பொருள், இன்பம் எனப் பகுக்கப்பட்டுள்ளது அறமும் பொருளும் காதலும் ஓர் இனத்தாருக்கே உரியன அல்ல. அவை எல்லா மனிதர்க்கும், இந்த உலகிற்கும் பொதுவானவை. ‘உலகம் ஒரு குலம்’ என்பதே திருக்குறளின் உயிரோட்டம். உலகம் ஒரு குலமாக விளங்க வேண்டுமெனில், அந்த உயிரோட்டத்திற்கு, அன்பு எனும் குருதியோட்டம் நிலையாக இயங்குதல் வேண்டும். ‘அன்பின் வழியது உயிர்நிலை’ (80) என்பதே வள்ளுவத்தின் நிலையான குருதியோட்டம். அன்பினை வளர்த்து வாழ்வதே மக்கட் பிறவியின் நோக்கம்; வாழ்க்கைக் கலையின் ஆக்கம் பண்பும் பயனும் உடைய இல்வாழ்க்கை யினைத் தேர்ந்து தெளிந்து நடந்திட வலியுறுத்துவதே வள்ளுவர் நெறி. வள்ளுவர் நெறிக்கு அடிப்படை அறம். மனத்துக்கண் மாசிலனாக வாழ்வதே அனைத்து அறன்; அகிலத்து அறன். இன்று உலகில் மண்டியுள்ள அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் என்பன எல்லாம் இழுக்கானவை; அற ஒழுக்கத்திற்குப் புறம்பானவை.
திருவள்ளுவர் ஆட்சி நெறியிலும் பொருளாதார முறையிலும் பொதுமை அறமே பேசுகிறார். மன்னராட்சி விளங்கிய காலத்தே எழுதப்பட்டாலும் மக்களாட்சி துலங்கும் காலங்களுக்கும் பொருந்தும் வகையிலேயே அவர் ஆழ்ந்த தொலைநோக்கோடு எழுதியுள்ளார். பொதுமையும் மனத்தூய்மையும் இரு கண்களாக அமைய வாழ்வரங்கு முழுமைக்கும் அவர் வழிகாட்டியுள்ளார். ஒப்புரவு, ஈகை, புகழ், இன்னா செய்யாமை, நட்பு, குடிமை முதலிய எண்ணற்ற சிந்தனைத் தருக்களை நிறுவி அவ்வரங்கு முழுமைக்கும் நிழல் பரப்பியுள்ளார்.
பலர்க்கும் பல வகையாகப் பயன்படும் சிறப்புடைய திருக்குறளை, இலக்கிய நூலாகவும் அறவழிச் சுரங்கமாகவும் இலங்கும் திருக்குறளை, பகவத்கீதையோடு ஒப்பிட்டுச் சில கருத்துக்களைச் சொல்ல விழைகிறேன்.
“இந்த நூலை, மூளை கொண்டு கற்காமல் இதயம் கொண்டு உணர வேண்டும்” எனக் காந்தியடிகள் பகவத் கீதையைப் பற்றி எழுதினார். இது திருக்குறளுக்கும் பொருந்தும். இன்னும் ஒரு படி மேலே சென்று மதிப்பிடுவதென்றால், திருக்குறளை மூளை கொண்டும் கற்கலாம்; இதயம் கொண்டும் உணரலாம். அறியவும் உணரவும் காலமெல்லாம் வழிகாட்டும் கற்பக விருட்சங்களாக விளங்கும் கீதையையும் திருக்குறளையும் ஒரு சில நிலைகளில் நின்று ஒப்பிட்டுப் பார்ப்போம்.
திருக்குறளும், கீதையும் வாழ்வில் முழு நிறைவு நூல்களாகும். மனிதனை நிறைமனிதனாக்குவது இரு நூல்களின் அடிப்படையாகும்.
வாழ்விற்கு வழிகாட்டியும், எக்காலத்திலும், எல்லோருக்கும் முரணின்றி அறிவொளி பரப்பியும் நன்மையும் பயனும் நல்கியும் பெருமையுற்று நிலைத்து நிற்பவை. உண்மை நிறைந்து, அறிவுக்கு ஏற்புடையனவாய் மறைமொழிகளாக மனிதனை நிறைவுபடுத்தும் நிறை மொழிகளாகக் காலத்தையும் வென்று வாழ்பவை.
“நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்” – (28)
‘தூய, அன்பையும், ஞாயிறு போன்ற, அறியாமை இருளகற்றி நலம் செய்யும் தெளிந்த செயல் அறிவையும், உறுதியான ஆற்றலையும் ஒருங்கே அமையப்பெற்றவன் நிறை மனிதன் ஆகின்றான்’ என்று கீதை இயம்புகிறது.
கண்ணன் வாழ்ந்து காட்டிய வாழ்க்கையே அவருடைய கூற்றுக்கு இலக்கணமாகியது. ‘மனத்திலுள்ள மாசு நீக்குக’ என்றார் கண்ண பெருமான்.
“மனத்துக்கண் மாசிலன் ஆதல்; அனைத்துஅறன்;
ஆகுல நீர பிற” (34)
என்றார் வள்ளுவர்.
‘நலத்தை நிலைநாட்டுபவர்க்கு நல்லவை எல்லாம் தம் கடமை’ என்றார் கண்ணபெருமான்.
“கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு” (981)
என்றார் வள்ளுவர்.
“உயிர்களிடத்து அன்பு கொண்டு வாழ்க” என்று அன்புருவாகவே வாழ்ந்தார் கண்ணன்.
“அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு” (73)
“அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு” (75)
என அன்பின் பெருமை பேசினார் வள்ளுவர்.
கருணையுடன் பிறர் துன்பம் கண்டு இரங்கி துன்பம் நீக்கி இன்பம் நல்க வேண்டும். அருள் கொண்டு தொண்டு செய்து வாழும் போது தான் நிறை நிலை, முழுநிலை, தெய்வநிலை பெற இயலும். பல வகையால் ஆராய்ந்தாலும், அன்பும் கருணையும் தான் துணை. ஆகவே “நல்லாற்றின் நாடி அருள் ஆள்க. பல்லாற்றான் தேரினும் அஃதே துணை” என்பார் வள்ளுவர். அறிவு பெற்றதன் பயனே பிற உயிர்கள் துன்பம் கண்டு இரங்கி அன்பு கொண்டு நலம் செய்வது தான். அதுவன்றி பெற்ற அறிவால் பயனுண்டோ? என்று வினவுவார் வள்ளுவர்.
“அறிவினால் ஆகுவதுஉண்டோ பிறிதின்நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை” (315)
“வலிவு படைத்தோன் வாழ்வுக்கு உரியவன்”
என்று கூறுகிறது கீதை. “உள்ளம் உடைமை உடைமை” “எண்ணிய எண்ணியாங்கு எய்துவர்; எண்ணியர் திண்ணிய ராகப் பெறின்” என்று உள்ள வலிவையும், பேராற்றலையும் வியந்து பேசுவார் வள்ளுவர். “எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத் திட்பம் வேண்டாரை வேண்டாது உலகு” என்பார் வள்ளுவர். பேராற்றல் படைத்த மனிதன் தன் ஆற்றலை உணர வேண்டும் “அரிய என்று ஆகாதது இல்லை. ஆதலின் சிறியவராய், புன்மையராய் சீர் குன்றாமல், பெரியோராய் செயற்கரிய செயல் செய்ய வேண்டும்”.
மனித உயிர்களை அன்போடு நேசித்து,‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?’ (71) என்று உணர்ந்து, என்பும் பிறர்க்கு உரியதாக்கி அன்புற்று வாழ்க! கொத்தாக மலர்ந்து மணம் வீசும் மலர்கள் போல, ஒளி வீசும் பகலவன் போல, அறிவு மணம் மலர்க; அறிவாற்றல் நிறைக – நல்லவை யெல்லாம் கடனாகக் கொண்டு கடனறிந்து சான்றாண்மை மேற்கொள்க!
இத்தகு செயல்களாலே உலகம் இன்புற்று வாழும் எனக் குறளும் கீதையும் உலகப் பொது நூல்களாய் வழிகாட்டி நிற்கின்றன.
காமம், கோபம், மயக்கம், யான் எனது என்னும் செருக்கு நீங்கித் தெளிந்த மனமுடைய மெய்யறிவு பெற்றவர் துயருறுவதில்லை. ‘எல்லா உயிர்களிடமும் தூய சம அன்பு செலுத்துபவன் என்னுடன் ஒன்றறக் கலக்கின்றான்’ என்று கூறும் கீதை.
“காமம் வெகுளி -மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்” (360)
“யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்” (346)
காமமும் மோகமும் – பேராசையும்,
கோபமும் – மயக்கமும் நீங்கி
நான் – எனது என்ற அகந்தைகளும்
நீங்கி வாழ்ந்தால் துன்பங்கள் மறையும்.
இன்பங்கள் பெருகும். வேண்டுதல் வேண்டாமை இல்லாது கடமையாற்றும்போது எண்ணியவை, சொல்லியவை மாறுபடாது. உறுதியான, இடைவிடாப் பயிற்சியால் செயல் ஆற்றும்போது மனம் மகிழ்வுறும், உலகம் அமைதியுறும். உலகம் வாழும்.
கீதையும் திருக்குறளும் வாழ்விற்கு நம்பிக்கை அளிப்பவை, வாழ்க்கையில் நேரிடும் இடர்கள், துன்பங்கள் நீக்குபவை. அச்சம் தவிர்த்து, மோகம் நீக்கி, மயக்கம் தவிர்த்து, மும்மலம் நீக்கி, கடமையை உணர்த்தி, செயலினைப் போற்றி, மனித குலத்தை மாண்புறச் செய்து வானுறையும் தெய்வத்திற்கு இணையாய் அமரர்களாக வாழ வழி வகுப்பவை.
கீதை காட்டும் பாதையும், வள்ளுவர் காட்டும் வழியும் ஒன்றோடு ஒன்று இசைந்தவை; இணைந்தவை; கீதையில் குறளையும் குறளில் கீதையும் காண்கின்றோம்.
5420total visits,2visits today