அறம் பிழைத்தால்…?
உலகு உயிர்கட்குச் சிறப்பீனும் செல்வமுமீனும் அறத்தின் ஆக்கம் பெரிது. உலகு உயிர்களுக்கு உயிரன்ன அறம் தனித்தும் நிற்பது; பொருள் இன்பத்துடன் விரவிக் கலந்தும் நிற்பது. இயற்கையுடலின் உயிர் மாசற்ற இறையானால், மாசற்ற அறமே இறையாகும். இறையாகிய அறவாழி உவமையற்றது, எல்லையற்றது, மறத்தலியலாச் சிறப்புடையது, பேரருள் சான்றது.
“அருள் குடையாக அறம் கோலாக
இருநிழல் படாமை மூவேழ் உலகமும்” (பரிபாடல்)
அறம் விழையும் நெஞ்சம் ஆக்கத்தில் நிலைக்கும் என்றால், அறம் விழையா நெஞ்சின் நிலை என்ன? அறம் பேணா அந்நெஞ்சம் ஆக்கம் தேட முயலுமா? ஆக்கம் தேட முயலாவிட்டாலும் அமைதியாக அடங்கிக் கிடக்குமா? அன்றி, அறம் பிழைக்குமா? அறம் பிழைத்தால்…. அறமே பிழைக்குமா…?
அறம்:- எண்ணம், சொல், செயல் மூன்றனுள்ளும் எண்ணம் சொல்லுக்கும் செயலுக்கும் அடிப்படையாய் அமைந்தது, அதனால் மாசற்ற, தூய்மையான அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் நான்கும் இழுக்கா இயல்புடைய எண்ணம் முதன்மையான சிறப்புடையது. எனவே,
“மனத்துக்கண் மாசிலன் ஆதல்; அனைத்துஅறன்;
ஆகுல நீர பிற” (34)
என நுண்மாண் நுழைபுலத்துடன் வள்ளுவம் காட்டும்.
“மனத்துள் மாறாது உறைந்து கிடக்கும்
சட்டத்திற்கு அறம் என்று பெயர்”
என்று பைபிள் காட்டும். தனி மனிதனுக்கு மட்டுமன்றி உலக சமுதாயத்திற்கும். இவ்விளக்கம் பொருந்தும்.
அறம் பிழைப்பதேன்…?
இயற்கையின் ஆற்றல்மிகு அமைப்பில் நல்லன எல்லாம் விரைந்து உடனே பயன் தரும் நிலை குறைவு, ஆனால் தீமை செய்வன எல்லாம் உடன் விரைந்து தீய பயன் தரும் நிலை மிகுதி. இது இயற்கையின் வியத்தகு அமைப்பு முறை. நஞ்சுண்டவன் விரைந்து மடிகின்றான். உடன் விளைவு காண இயலுகின்றது. நனிசுவை நலந்தரு உணவு உண்டவன் நலம் பெறுவான் ஆனால் உடன் பயன் காண முடிவதில்லை. இவ்வடிப்படை உண்மையே அறம் பிழைக்க அடிப்படையாய் அமைந்த சூழல்.
அரம்போலும் கூர்மையரேனும், மக்கட் பண்பில்லா மரம்போன்ற குறுகிய எண்ணமுடைய தனிமனிதனோ சமுதாயமோ அவ்வியற்கை அமைப்பை நன்கு பயன்படுத்திக் கொள்கின்றார்கள். உலகம் அறம் பிழைக்கும் சூழலில் சிக்கித் தவிக்கிறது.
“கேடும் பெருக்கமும் இல்லல்ல; நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு அணி” (115)
“நன்றே தரினும் நடுவுஇகந்துஆம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்.” (113)
என்ற நெறிகளை ஞாலம் வாழ்க்கை நடைமுறையமைப்பில் ஏற்றுக்கொள்வதில்லை. ‘புதரில் உள்ள இரு பறவைகளை விட கையில் உள்ள ஒரு பறவையே மேலானது’ என்ற எண்ணமே மக்களிடையே நிலைத்து நிற்கின்றது.
தனிமனிதன் குறைந்த முயற்சியில் தான் வாழ வேண்டும். தன் குடும்பம் வாழ வேண்டும் என்று குறுக்கு வழியில் வாழ்க்கை வழிதேட விழைகின்றான். இன்று இடுக்கண் உற்றாலும் நாளை நல்லற நெறியில் நற்பொருன் ஈட்டுவோம் என்ற அறநெறியை அவன் மனம் நாடுவதில்லை, இதனால் அவன் அழுக்காறு உடையவனாய், புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்பவனாய், பேரவா உடையவனாய் ஆகின்றான். இத்தகு தனித்தனி குறுகிய நோக்குடையவர் களால் மன்பதை பாழ்படுகின்றது. அதனால்தான் சமுதாய அமைப்பில் இன்னா செய்தார்க்கும் இனியவை செய்து அவ்வொன்னாரை நல்லவராக ஆக்கும் முயற்சியைக் காண இயலுவதில்லை. ‘அளவிறந்து ஆவது போலக் களவினால் ஆகிய ஆக்கம் கெடும்’ என்ற உண்மை உணர்ந்தவர்களைக் காண இயலுவதில்லை. ‘தன்னெஞ்சத்து அழுக்காறில்லாத இயல்பை ஒருவன் ஒழுக்காறாகக் கொள்க’ என்ற கொள்கை உணர்ந்தவர்களைக் காண இயலுவதில்லை ‘மற்றின்பம் வேண்டுபவர் சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யார்’ என்ற ஆன்ற பொருளுணர்ந்த வர்களைக் காண இயலுவதில்லை. ஆனால் குறுகிய நோக்கத்தால் பொறுமையற்றவர்களாய், கயவராய், பெரும் பொய்யராய், கொடிய கொலைஞராய் வாழ்வோரைக் காண முடிகின்றது. இத்தகையோர் குற்றமிழைத்தால் உலகம் எளிதில் இக்குற்றத்தைக் கண்டு இவர்களைப் பழிக்கிறது; ஒறுக்கவும் செய்கின்றது, ஆனால் தனிமனிதன் தனக்கென்று ஓர் அமைப்புப் பெற்றிருப்பானானால், ஆற்றல் நிறைந்தவனானால் இக்குற்றம் மறைக்கப்படுகின்றது. மற்றும் குறுகிய நோக்குக் கொண்ட திறன் மிக்க வல்லவர்களான இத்தகைய தனிமனிதர்கள் தலைவர்களாக அமைந்து விட்டாலோ உலகம் அவர்கள் குற்றத்தை மறைப்பது மட்டுமின்றி, ஏற்றிப்போற்றி இறைஞ்சி ஏற்றுக்கொள்ளவும் செய்கிறது. இதுவும் உலகின் வியப்புமிகு போக்கு.
யார் குற்றம்?
அறம் பற்றி விளக்க விழைந்த வள்ளுவர் மக்களின் வாழ்க்கையமைப்பைப் பற்றிப் பல்வேறு கோணங்களில் ஆய்ந்து மக்கள் அறம் பிழைக்கக் காரணமான உண்மையைக் கண்டு துயருற்றவராய்,
“நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு” (20)
என்று கூறுகிறார். ‘கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே எடுப்பதூஉம்’ ஆகிய மழைநீர் இல்லாமல் உலக வாழ்க்கை அமையாது என்று வாழ்க்கைப் போராட்டத்தைச் சுட்டிக்காட்டி அத்தகைய போராட்டத்தில் சிக்கித் துயருழந்து ஒழுக்கத்தைக் கைவிட்டவர்களைப் பழிக்காமல் இரக்கம் காட்ட வேண்டும் என்ற உண்மையை இலைமறை காயாக எடுத்துக் காட்டுகின்றார்.
இன்றைய அமைப்பு முறையிலும் இதே நிலைதான். மழை இருந்த இடத்தைப் பொருளும் பதவியும் கைப்பற்றிக் கொண்டிருக்கின்றன. இதுதான் வேறுபாடு. ஆதலால் மக்கள் மேல் மட்டும் குற்றம் காண்பதில் பயனில்லை. மக்கள் வாழும் அமைப்பு முறையில் தவறு நிகழ்ந்திருக்கிறது. மக்கள் எண்ணித் துணியும் இயல்பு பெறாதவர்கள். ஆனால் அவர்களைப் பயன்படுத்திக் கொண்டு குறுகிய நோக்கமுடைய தன்னலம் மிக்கோர் வளர்ந்து விடுகிறார்கள். உலக அமைப்புப் பாழ்படுகின்றது.
அறம் பிழைத்தால்….? அறமே பிழைக்குமா…? அறம் விழையும் நெஞ்சமானது ஆக்கத்தில் நாட்டம்கொள்வது போல் அறம் விழையா நெஞ்சம் கேட்டை விளைவிக்கும்.
“வடுவிலா வையத்து மன்னிய மூன்றில்
நடுவணது எய்த இருதலையும் எய்தும்” (114)
என்று நாலடியார் பொருள் செயல் வகையின் சிறப்புக்கூறும். அறவழியில் ஈட்டிய அருஞ்செல்வம் அல்லது தலைமைப் பேறு போராட்டத்தை எழுப்பாது, உலகில் போராட்டம் குறைய வேண்டுமானால் பொருள் பொதுவில் பயன்படும் முறை ஓங்கி வளர்தல் வேண்டும். குறுகிய எண்ணம் குறைந்து அருள் சான்ற நெஞ்சம் வளர்தல் வேண்டும். அறத்தில் ஈடுபடா உள்ளம் பெரும் போராட்டங்களை எழுப்பும். தனி மனிதனின் அகப்போராட்டமாய்த் தொடங்கி புறப்போராட்டமாயும் வளர்ந்து உலகப் போராட்டமாய் முடியும். போராட்டத்தின் இறுதி விளைவு கேடே, ஆதலால் வள்ளுவம்.
“அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை; அதனை
மறத்தலின் ஊங்குஇல்லை கேடு” (32)
என்று கூறும். அறமுறை நிலவா நாடு ஆக்கம் பெறுவதில்லை. இதைக் கலித்தொகை,
“சிறுகுடியீரே, சிறுகுடியீரே!
வள்ளிகீழ் விழா, வரைமிசைத் தேன்தொடா
கொல்லைகுரல் வாங்குஈனா, மலைவாழ்நர்
அல்ல புரிந்தொழுகலான்”
என்று கவினுடன் காட்டும்.
தனிவாழ்விலும் பொதுவாழ்விலும் உலகில் கேடு சூழ்வன செல்வமும் பதவியும். உலகச் சூழலானும் அமைப்பு முறையானும் நேர்ந்த குறையால் தன்னலம் மிகுந்தவரும் குறுகிய நோக்கமுடையவரும் தமது ஆற்றலால் ஞாலத்தை அடக்கித் தம் வழியில் ஆள இயலுகின்றது. இந்நிலை வளர்ந்தால் உலகம் நிலைக்குமா? அறம் பிழைக்குமா?
‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம்’ என்ற பேருண்மையை ‘தொல்லை வினையால் துயருழந்தாள் கண்ணினீர்கொல்ல உயிர்கொடுத்த கோவேந்தன்’ மெய்ப்பித்தான் அன்று. அவன் அறஞ்சான்ற நெஞ்சத்தான். ஆனால் இன்று நிலை என்ன? அறம் குறைந்து, அன்பு தேய்ந்து, அமைதி மங்கி தன்னலம் உயர்ந்திருக்கின்றது. குறுகிய நோக்கம், குறுகாது வளர்ந்திருக்கின்றது. மக்களில் ஒருவருக்கொருவர், குடும்பத்திற்குக் குடும்பம், இனத்திற்கு இனம், நாட்டுக்கு நாடு பகையும் பொறாமையும் பரந்து நிறைந்து வளர்ந்து வருகின்றது. இதுவே இயற்கை என்று கூறும் அச்சநிலைக்கு உயர்ந்துவிட்டது. இந்நிலையில், அறம் வாழுமா?
தனிமனித வாழ்க்கையையும், அவனைச் சார்ந்த குடும்பத்தினரையும், நலம் நாடும் நட்புடையாரையும் பிணக்குக் கொள்ளச் செய்து அவர்களை ஆட்டி ஆட்சி புரிவதும், பொருளாட்சி, பொருளல்லாதவரையும் பொருளாகச் செய்யும் பொருள் ஒரு கூட்டத்தின்பால் குவிந்து கிடக்க, நெருப்பினுள் துஞ்சலினும் கொடிய நிரப்பினுள் வாடுகின்றது ஒரு கூட்டம். இவ்வாறு இங்கும் இனத்தின் பெயரால் செல்வர் – வறியவர் எனப் பிரித்து இவர்களை ஆட்சி புரிவதும் பொருளாட்சி, மற்றும் நிறத்துக்கு நிறம், வகுப்புக்கு வகுப்பு, சமயத்துக்கு சமயம் போராட்டத்தை எழுப்பியதும் பணமே. உலகப்போரின் அடிப்படையே பொருளால் அமைந்ததாகும். நாடுகளுக்கு இடையே வலிமையுடைய நாடாய் இலங்க வேண்டும் என்ற பேரவாவால், பொருள் வலிமையால் படைவலிமையை வளர்த்து, சில வல்லரசுகள் உலகத்தை அச்சத்துக்கு உள்ளாக்குகின்றன. இவ்வாறு இங்கு கொடுங்கோல் ஓச்சுவதும் பொருளாட்சியே! அமைதியை நிலைநாட்டு வதற்கென அமைக்கப்பட்ட உலக அமைதிக் காப்பு அறநிலையமான ஐக்கிய நாட்டு அவையும் பொருள் வளமும் படைபலமும் மிகுந்த நாடுகளைச் சார்ந்திருக்கின்றது. இவ்வாறு தனிமனிதன் முதல் உலகம் வரை நிலவி நிறைந்து நிற்கும் குறை உலகுக்குப் புலப்படுமா? அறம் பிழைக்குமா?
ஆயினும், அறம் எவ்வாறேனும் வாழும், தீமை தோற்கும், அறம் வெல்லும் இது உண்மை. கருவி குறிக்கோளாக மாறியிருப்பதே இன்றைய அச்சத்திற்குக் காரணம். அமைதியான பண்புமிகு அறவாழ்வே குறிக்கோள் ஆகும். செல்வம் ஒரு கருவி. அமைப்பு முறை மாறி யிருக்கிறது. இதுவே குறை, இக்குறை நீக்கமுடியாத குறையன்று. இன்றைய சூழலில் தனிமனித வாழ்க்கையைச் சீர்திருத்துவதினும் உலகச் சமுதாய அமைப்பை மாற்றி நெறிப்படுத்தினால் இக்குறை நீங்கும்.
தன்னலங் கருதாது அறத்தின் வழிநின்று கடனாற்றும் சான்றோர் ஒருசிலராவது என்றும் வாழ்வர். அத்தகையோரால் உலகம் என்றும் உயிர்கொண்டு வாழும்.
“உண்டால் அம்ம இவ்வுலகம்…
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.” (புறநானூறு.182)
“பண்புடையார்ப் பட்டுஉண்டு உலகம்; அஃதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்.” (996)
சான்றாண்மைக்கு ஆழி எனப்படும், ஊழி பெயரினும் தாம் பெயராச் சான்றோர் வாழும் வரை, மனிதப் பண்புகள், உணர்வுகள் மனிதனிடம் நிலைத்துநிற்கும் வரை, அறம் அழியாது. அறத்தை அழிக்க முடியாது. தீமை அளவிறந்து ஆவது போலக் கெடும். “இறைச் சட்டங்கள் மனித மனத்துள் அமைந்திருக்கின்றன. அதனுடைய சுவடுகள் அழியாதவை”
10805total visits,9visits today