நாவிற்கு சுவை உணர்வு இருப்பது போலச் செவிக்கும் சுவை உணர்வு உண்டு. நல்ல உணவு உடலை வாழ வைப்பது போல, நாம் பெறும் நல்லறிவும் நம் உள்ளத்தை வாழ வைக்கும். நல்லுணவு நாவிற்கு இனிமை தருவது போல், நற்கருத்துக்கள் செவிக்கு இனிமை தரும். அதனால் தான் பாரதி, ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ என்றார். தேனை நாவால் சுவைக்கும் போது என்ன இன்பம் கிடைக்குமோ அத்தகு இன்பம் செந்தமிழ்நாடு என்று சொல்லும்போது காதில் தேனாகப் பாய்ந்து இனிக்கிறது என்கின்றார் புதுமைக்கவிஞர் பாரதி.
கேடில்லாத, அழியாத விழுச்செல்வம் கல்வியென்றால் நல்லவையாக அமைந்த கேள்விச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலைமையானது. ஒரு துறையில் கற்றவர்களுக்கும்- பல துறைகளில் அறிவு வழங்குவது கேள்விச் செல்வமாகும். கற்றவன் நுட்பமாக, இனிமையாக, கேட்பவரைப் பிணிக்கும் வகையில் நல்ல செய்திகளை ஆற்றலுடன் கூறும்போது, கல்வி கல்லாதவனும் கற்றதன் பயனைப் பெறுகின்றான். அறிஞர்கள் மிகச் சிறந்த கருத்துக்களை எடுத்துச் சொல்லும்போதும் அவற்றை விரித்துச் சொல்லும் போதும் தொகுத்துச் சொல்லும்போதும் கற்றறியா எளிய மக்களும் பயன் பெறுகின்றார்கள். பல காலம் செலவழித்துப் பல நூல்களைப் படித்தவர்கள் நல்ல கருத்துக்களை நயமுடன், எளிமையுடன் கூறும்போது அவற்றைக் கேட்பவர்கள் சில மணித் துளிகளிலே மிகப் பெரும் பயனைப் பெற்று விடுகிறார்கள்.
வேள்வியால் கிடைப்பது விண்ணில் வாழும் அமரர் விரும்பும் அமரத்தன்மை தரும் அவியுணவு. கேள்வியால் கிடைப்பது மண்ணிலே வாழ்வோர் விரும்பும் இறவாச் சிறப்புடைய அமுத வாழ்வு.
வாழ்வு சிக்கல்கள் நிறைந்தது; உணர்ச்சி நிறைந்தது. ஆதலால் கேட்பதெல்லாம் கேள்வியாகிவிடாது. மனம் உணர்ச்சிவயப்படும் சமயத்தில் எல்லாம், தடுமாறுகின்ற நேரத்தில் எல்லாம், நல்லோர் சொன்ன கருத்துக்கள் தாம் நற்பயனை, நன்மைகளை அளிக்கும்.
அறம் செய விரும்பி, வாழ்வின் ஒரு பகுதியை மட்டும் அறம் செய்ய வேண்டும் என்று ஒதுக்காமல் வாழ்வு முழுவதுமே அற வாழ்வாகத் திகழ முற்பட வேண்டும். தனி மனித வாழ்வும், குடும்ப வாழ்வும் அறவாழ்வினை மேற்கொண்டு நடக்கும்போது நாடும் உலகமும் நலம் பல பெற்றுத் திகழும். வாழ்க்கைக்கு இவ்வறம் சிறப்பைத் தரும்; செல்வத்தைத் தரும். நிலையாத வாழ்க்கையில் நிலைத்த புகழைத் தரும்; இவ்வாறு நிரந்தரமாக நிலைபெற்றுப் புகழ்பெற்று, வாழும் உயிர்கள் ஆக்கம் பெறும்.
உலகின் அற நியதிகளும் நியாயங்களும் மீறப்பட்டால் நிச்சயமாகத் தீய விளைவுகள் உருவாகிவிடும். நாம் விதைக்கும் விதைகளுக்கு ஏற்பவே பின்னர் விளைவுப் பயனைப் பெற முடியும். நாம் செய்யும் நல்ல அறச் செயல்களே நல்ல பயன் தரும். நல்ல விளைவுகளைத் தர முடியும்.
அறச் செயல்களைச் செய்யும் வகையால் எக்காரணம் கொண்டும் அவற்றை இடையே விட்டு விடாமல் இயன்ற வகையில் எல்லாம் தொடர்ந்து அந்த அறச் செயல்களைப் போற்றிச் செய்ய வேண்டும்.
நாளை நாளை என்று நாட்களைத் தள்ளிப் போட்டுத் தட்டிக் கழித்துவிடாமல், நிலையாத வாழ்க்கையில் நிலைத்த புகழோடு வாழத் தலைப்பட வேண்டும். இளமைக் காலத்தே மன நலம் மிகுந்தவராய் வளர வேண்டும். குறிப்பாக, இளைஞர்கள் நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்று சோம்பல் கொள்ளாமல் நற்செயல்களில் தீவிரமாக நாட்டமுற வேண்டும்; அயராது அறப்பணிகள் செய்ய வேண்டும். அதுவே உடல் நலியும் காலத்தும் அழியாப் புகழ் தந்து துணை நிற்கும்; உடல் அழிந்த காலத்தும் அழியாப் புகழ் தரும்.
ஆகவேதான் வள்ளுவர் கட்டளையிடுகின்றார் – என்ன கட்டளை? கேட்போம்.
“அன்றுஅறிவாம் என்னாது அறஞ்செய்க; மற்றுஅது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.” (36)
11552total visits,11visits today