குறள் நிலா முற்றம் – 9

Image result for thirukkural

இளைஞர் ஒருவர் 

“இப்போதைய கல்லூரி மாணவியர் இக்குறட்பாவைச் சற்றே திருத்தி ‘அத்தான் வருவதே இன்பம்!’ எனப் புதுக்குறள் புனைந் திருக்கிறார்கள்.”

(அவையில் சிரிப்பு அலைமோதுகிறது)

ஒருங்கிணைப்பாளர்

“என் மனதில் நிற்கும் குறட்பா முரண்களைச் சொல்ல விடாமல், இப்படி முரண்டு பிடிக்கலாமா? (மீண்டும் சிரிப்பு)

“அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

 கேடும் நினைக்கப் படும்”           (169)

எனும் ‘அழுக்காறாமை’ அதிகாரக் குறள் நாம் இதுவரை கருதிய இவ்வகைக் குறளோடு ஒரு வகையில் கருத்தொற்றுமை உடையதுதான்.

ஓரன்பர்

“ஊழை உப்பக்கம் காணாமல், அத்தானைத் தேடி வந்துவிட்டோமே? ஊழை ஒரு கை பார்த்து விட்டு ஒருங்கிணைப்பாளர் செம்மல் அவர்களின் சிந்தையில் பட்டதைக் கேட்போமே!”

ஊழ் – வாழ்கிறதா? பாழ்படுத்துகிறதா?

பேராசிரியர்

“‘ஊழ்’ என்பது எப்போதுமே சமய நம்பிக்கையோடும் வாழ்வுப் போக்கோடும் இணைந்ததொரு நெடிய சர்ச்சைதான். பண்டைய குறளின் உரையாசிரியர்களான பரிமேலழகர், மணக்குடவர் போன்றோரின் கருத்துக்களிலேயே மறுகி நில்லாது, நம் காலத்தில் வாழ்ந்த திரு.வி.க., இலக்குவனார், தெ.பொ.மீ., மு.வ., வ.சுப.மா. போன்ற பேரறிஞர்கள் என்ன சொல்லிச் சென்றார்கள் என நினைவூட்டுவது சாலப் பொருத்தம்; காலப் பொருத்தம்.”

வளனரசு

“நாங்கள் வ.சுப.மா. ஐயாவிடம் பாடம் கேட்டவரை, ஊழ் அதிகாரம் ஒரு கருத்துச் சிக்கலான பகுதி என்று தான் சொல்வார். ஊழின் மறுபெயராக நாட்டில் காலம் காலமாக வழங்கி வருவது ‘வினை’. அதனையே நேர் பொருளாகக் கொண்டு ஊழ் என்றால் தொழில் செயல் என்று கருதாமல் ‘பாவம்’ எனும் அர்த்தம் பரம்பரையாகப் பயமூட்டி வந்துவிட்டது.”

ஒரு புலவர்

“மறுமை, எழுபிறப்பு என்றெல்லாம் வள்ளுவர் கூறிய கருத்துக்கள் ஊழுக்கு மாறானவையா? நான் இதை ஏற்க மறுக்கிறேன்.”

ஒருங்கிணைப்பாளர்

“மறுப்பது அவரவர் கருத்துச் சுதந்திரம்; ஆனால், பேராசிரியர் சுட்டிக்காட்டும் பேரறிஞர் மாணிக்கனார் கருத்தை நாமும் மீண்டும் சிந்திக்கலாம். மறுமை, எழு பிறப்பு என்பன குறளில் பிற இடங்களில் வந்தாலும், அதனை ‘ஊழ்’ அதிகாரப் பொருளோடு வலிந்து பொருத்திப் பாராமல் தனியாகப் பொருளமைதி காண முற்படலாம்.”

பேராசிரியர்

“வள்ளுவரின் ஊழ் பற்றிய கொள்கை முற்பிறப்புக் குறிப்போ, பழமை வினைக் கருத்தோ, அவ்வுலக அறிவிப்போ சிறிதளவும் இல்லாதது. ‘ஊழ்’ அதிகாரம் முழுவதிலும் இத்தகைய செய்திகள் இல்லை. பரிமேலழகர் உரையிலும் முன்வினைக் குறிப்புப் பற்றி ஏதும் இல்லை என்பதே பேரறிஞர் ஆய்வு. மாணிக்கனார் ‘ஊழ்’ எனும் சொல்லுக்கு ‘முறை’ என்றே, அதாவது உலக முறை, உலகச் சூழ்நிலை, உலகத்து இயற்கை என்றே பொருள் கண்டார்.”

அரசு அதிகாரி

“உலக மயம் எனும் நிறீஷீதீணீறீவீsணீtவீஷீஸீ பற்றி வள்ளுவர் அப்போதே சொல்லிவிட்டார் என நிறுவலாமே?”

ஒருங்கிணைப்பாளர்

“மாணிக்கனார் கருத்துப்படி ஊழ் என்பது ஓர் ஒழுங்குக்குக் கட்டுப்பட்டு உருப்பெறுவது; ஆனாலும், அதன் போக்கைக் கணிப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. ஏனெனில், ஊழின் தோற்றத்திற்குப் பல காரணங்கள் அமையக்கூடும். இடம், காலம், அரசு, சமூகம், சுற்றுச்சூழல் முதலிய புறநிலைப் பாங்கெல்லாம் முடிவில், உலகியற்கையாய் ஊழாய் மாறி நிற்கும். அது ஒரு மனிதனின் வாழ்வுப் போக்கின் புற நிலையைப் பெரிதும் பாதிக்கும் என்பதால், அந்த அதிகாரத்தில் செல்வம் பற்றிய செய்தியை அடுக்கிச் சொல்லுகிறார். ஒரு சூழ்நிலையில் வருந்தி உழைத்தாலும் வாராத செல்வம், மற்றொரு சமூகச் சூழலில் கோடி கோடியாய்ச் சேர்ந்து விடுகிறது. ஆயினும், சூழ்நிலையால் ஊழுக்கு நம்மை அடிமைப் படுத்திக் கொள்ளாமல் இடைவிடா முயற்சியால் ஊழையும் புறம் காண முற்பட வேண்டும்.”

பேராசிரியர்

“எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு

     அவ்வது உறைவது அறிவு”           (426)

“செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து

     இயற்கை அறிந்து செயல்”           (637)

எனும் குறள்களை ஊழோடு பொருத்திப் பார்த்தால் மேலும் தெளிவு பெறுவோம்.

ஒருங்கிணைப்பாளர்

“‘உலைவின்றித் தாழாது உஞற்றுபவர் ஊழையும்’ அதாவது வலிமையுடைய ஊழையும் என ‘உம்’ அடைமொழி சேர்த்திருப்பதைக் கவனிப்போம். வள்ளுவர் எவ்வளவு தன்னம்பிக்கை ஊட்டுகிறார் எனச் சிந்திப்போம். ‘அறிவுடையார் எல்லாம் உடையார், எண்ணிய எண்ணியாங்கு எய்துப, துன்பம் உறவரினும் செய்க, பெருமை முயற்சி தரும்’ என்பன எல்லாம் ஊழைப் புறம் காண நமக்கு வள்ளுவம் தந்துள்ள ஊக்கக் கருவிகள்: ஆக்கக் கருத்துக்கள்.”

பேராசிரியர்

“மாணிக்கனார் கருத்துக்கு மகுடம் வைத்தாற் போல, திருக்குறள் செம்மல் அடுக்கிச் சொன்ன விளக்கக் குறட்பாக்கள் நமக்கு எழுச்சியூட்டு கின்றன. சற்று முன்னர் பேரறிஞர் மு.வ.வின் ஊழ்க் கருத்து என்ன என்றும் கேட்கப்பட்டது.”

மு.வ. தந்த முதன்மை விளக்கம்

அரசு அதிகாரி

“நான் அவரது வாழ்க்கை விளக்கப் பேரேட்டில் படித்தது நீங்காது நினைவில் நிற்கிறது. படைப்பில் விண்ணிலும் மண்ணிலும் ஒரு முறையான ஆட்சி இயக்கம் உள்ளது. அவை ஒரு ஒழுங்குக்கு உட்பட்டே இயங்கியும் இயக்கியும் வருகின்றன. அதுபோல, மக்கள் வாழ்வில் ஆக்கமும் அழிவும் ஒரு நியதிப்படியே நிகழ்கின்றன. இந்த ஒழுங்கமைவு நிலையை ஆய்ந்தறிவது மிக அரிது; ஆனால் உண்டு என உணர்வது எளிது. இந்த ஆட்சி முறையை ‘ஊழ்’ எனச் சான்றோர் கூறிவந்தனர். வள்ளுவரும் அவ்வழி பற்றியே பேசினார். செல்வம் சேர்த்தல், நுகர்தல் முதலிய புறவாழ்வுப் போக்கில் ஊழ் தலையிடுவது போல, அறிவு, அடக்கம், ஒழுக்கம் முதலிய வாழ்வுப் பாங்கில் ஊழின் ஆட்சியை மட்டுப்படுத்தி வெற்றி கொள்ள முடியும். வேண்டிய வேண்டியாங்கு எய்திட முடியும். அதாவது, சமூக வாழ்வின் புற நிலையில் ஊழின் போக்கிற்கு ஏற்பவே செயல்கள் நடக்கின்றன; ஆனால், மனிதர்களின் அகவாழ்வுத் துறை எதுவாயினும் அதில் தனி நபரின் தன்னம்பிக்கையும் இடைவிடா முயற்சியுமே ஊழையும் புறங்கண்டு விடத் தூண்டுதல் தரும்.”

ஒருங்கிணைப்பாளர்

“அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை; அதனை

     மறத்தலின் ஊங்குஇல்லை கேடு.”     (32)

“பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா

     பிற்பகல் தாமே வரும்”              (319)

எனும் குறளாசான் அறிவுரையோடு ஊழை இங்கே புறங்கண்டுவிட்டு, நான் முன்னர் கூறக் கருதிய, எனக்குத் தோன்றிய சில குறள் முரண்களைச் சிந்திக்க முற்ற அவையோர் இசைய வேண்டும்.”

அவையிலிருந்து ஓரன்பர்

“செம்மல் உங்கள் முரண்களைச் சொல்லுங்கள்.”

ஒருங்கிணைப்பாளர்

“அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

     கேடும் நினைக்கப் படும்”                 (169)

எனும் குறளில் நல்லவனுக்குக் கேடும் தீயவனுக்கு ஆக்கமும் வருவது ஏன் என ஆராய்க என்கிறார் வள்ளுவர்.”

பெரும்புலவர்

“இக்குறட்பாவில் ‘அவ்விய’ (அதாவது நடுவுநிலை கருதா நெஞ்சுடைய), ‘செவ்வியான்’, ‘ஆக்கம்’, ‘கேடு’ எனும் நான்கு சொற்களும் பல பொருட்களைத் தரும் வகையில் தொகுக்கப் பட்டுள்ளன. ‘நினைக்கப்படும்’ என்பது இந்தக் குறளைத் தவிர வேறெங்கும் கையாளப் படவில்லை என்பதையும் நாம் இங்கே நினைக்க வேண்டும்!”

ஒருங்கிணைப்பாளர்

“இன்றைய சமுதாய நிலையில் அவ்வியர்களான தீயவர்கள் பலர் ஆக்கம் பெற்று விடுகின்றனர் என்பதையும், செவ்வியர்களான நல்லவர்கள் அத்தகைய ஆக்கமின்றி நலிவுறுகின்றனர் என்பதையும் வள்ளுவர் மறுக்கவில்லை; அத்தகைய ஆக்கமும் கேடும் முறையானவை எனவும் ஏற்கவில்லை. இந்த மாற்றுநிலை ஏன் என்பதை ஆராய வேண்டும் என்கிறார்.”

பெரும்புலவர்

“வள்ளுவரும் இதை ஆராயாமல் விடவில்லை. அவற்றை மாற்றும் வழிகளை வரையறுக்காமல் நழுவி விடவில்லை. காலந் தொறும் மாறும் சமூக, அரசியல் சூழலினூடே தக்க நெறிமுறைகளை நீங்களே வகுத்துக் கொள்ளுங்கள் என அறைகூவல் விடுப்பது போல இக்குறளை அமைத்துள்ளார்.”

அரசியல் அன்பர்

“அறைகூவல் என்று புலவர் ஐயா மழுப்ப வேண்டாம். இன்றைய மாசு படிந்த சமுதாய அமைப்பை மாற்றிப் புதியதொரு உலகம் படைக்கும் புரட்சியே சரியான நெறி எனக் கோடு காட்டிக் கொடி அசைத்திருக்கிறார் என்பதே எங்கள் கருத்து” (கைதட்டல்).

ஒருங்கிணைப்பாளர்

“அவ்விய நெஞ்சத்தான் அடைவது நிலையான ஆக்கமாக நீடிக்க முடியாது. செவ்வியான் உறுவதும் கேடாகவே இருந்துவிட இயலாது. எனினும் நடைமுறை வாழ்வில் அவ்வியர் ஆக்கம் பெறுவதும், செவ்வியான் கேடுறுவதும் நீடிக்கிறதே என அப்பெருந்தகை வருந்தும் உணர்வே இக்குறளில் எதிரொலிக்கிறது. ஆக்கத்திற்கும் கேட்டிற்கும் பழவினை காரணம் என்பதை அவர் ஏற்கவே இல்லை. ‘நினைக்கப்படும்’ எனும் சொல்லால் பல வகையிலும் ஆய்ந்து உரிய செம்மை நெறிகளைச் சமுதாயம் பின்பற்ற முற்பட வேண்டும் எனவே எச்சரிக்கிறார். சமுதாயத்தில் உள்ள சுயநலமிகளுக்கும், முறையற்ற, நெறியற்ற அரசியல் பொருளாதாரக் கூட்டமைப்புக்களை ஆட்டிப் படைப்போருக்குமே இந்த எச்சரிக்கை முதலில் பொருந்தும்.”

‘திருக்குறள் செம்ம’லின் சீர்மிகு பட்டியல்

பேராசிரியர்

‘திருக்குறள் செம்மல்’ அவர்கள் அழகாக ஒருங்கிணைத்துச் சுட்டியமை போல வள்ளுவப் பேராசான் மாற்று நெறிகளாகப் பட்டிய லிட்டுள்ளவை:

– அறன் இழுக்கி, அல்லவை நீக்காத அரசமைப்பு

– இயற்றல், ஈட்டல், காத்தல் முதலிய ஆட்சிப் பொறுப்புக்களில் புகுந்துள்ள ஜனநாயகச் சீர்கேடுகள்

– நேர்மை, திறமை என்பவற்றைப் போற்றாத நிறுவனங்கள்

– ஒப்புரவோ நடுவுநிலையோ போற்றிக் காக்க முடியாத சான்றோர் சிலரின் தவிப்புக்கள்.

– கயமையைக் கருவியாகக் கொண்டோரின் அன்றாட ஊர்வலக் கொடிபிடிப்புக்கள்

– உள்ளூர்ப் பழ மரமாகவோ, ஊருணியாகவோ உதவாமல், நடுவூர் நச்சுமரமாக நிற்கும் நாசகார சக்திகள்

– இரந்தும் உயிர் வாழும் இழிநிலையினைச் சமுதாயத்தில் இன்னும் நீடிக்க வைத்துவிட்டு, ஆன்மீகப் போதனை செய்யும் போலி நிறுவனக் கூட்டங்கள், கூடாரங்கள்.

– குற்றம் கடியாமல், குடிதழுவிக் கோலோச்சாமல், கட்சி நலனையே ஆட்சித் திறனாகக் கொண்டு, சட்டமன்றங்கள் – நீதிமன்றங்களைச் சந்தைக் கடையாக்கும் ஆகாப் போக்குகள் – என்று நீளும் இவற்றையெல்லாம் நினைக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். இதை முரண் என ஏன் கருதவேண்டும்?”

(கைதட்டல்)

ஒருங்கிணைப்பாளர்

“பேராசிரியர் வள்ளுவப் பேராசான் பல இடங்களில் சுட்டிக் காட்டியவற்றைப் பட்டியலிட்டு ‘நினைக்கப்படும்’ என்பதற்கு விளக்கம் தந்தமை பாராட்டுக்கு உரியது. அவ்வித்து அழுக்காறுடையான் ஆக்கமெல்லாம் அப்போதைக்குப் பெற்றாலும் அது மற்றொரு நாளில் நிச்சயம் தவ்வையை – மூதேவியைக் கூட்டி வந்து விடும் என்கிறார். ‘அழுக்காறு என ஒரு பாவி’ (168) என அச்சுறுத்துகிறார். இன்றைக்கு ஆலமர நிழல் அமர் அரச வாழ்வு கை கூடினாலும், நாளைக்கே அது ஒற்றைப்பனை நிழல் போலப் பயனற்று ஒதுங்கிப் போய்விடும் என்கிறார். நல்லவர்கள் கெடுவதில்லை என்றே நம்பிக்கையூட்டுகிறார்.”

வருமான வரித் துறை அதிகாரி

“ ‘நல்லவர்கள் கெடுவதில்லை இது நான்கு மறைத்தீர்ப்பு’ .. என மகாகவி பாரதியார் வள்ளுவத்திற்கு விளக்கமாகத் தந்துள்ள முத்தாய்ப்புச் செய்தியை ஏற்று, இதை முரணாக எண்ணாது இதர சமுதாய நன்னெறி அரண்களைத் தேடலாமா?”

ஒருங்கிணைப்பாளர்

“சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி

     வறங்கூர்ந் தனையது உடைத்து”       (1010)

சமுதாயச் சீர்மையை நாடுகின்றவரே சீருடைச் செல்வர்! அதாவது, காந்தியடிகள் கூறும் ‘ஜிக்ஷீustமீமீsலீவீஜீ’. சமூகநலக் காவல் பண்புடைமையுடை யோர்கள், ஒரு சமயம் வறுமைப்பட்டாலும், அது ‘சிறுதுனி’, சிறுதுயரம்’ என்றும், மாரி சில சமயம் மழை பொழியாமல் கருத்தும் மேகம் கலைந்துவிடுவதைப் போன்றதே என்றும் அருமையான உவமையால் தெளிவூட்டுவதாகவே இதனைக் கருதவேண்டும். தனி உடைமைச் செருக்கில்லாமல், ஒப்புரவே நாட்டமாகக் கொண்ட அத்தகைய சீருடைச் செல்வரின் மீதுள்ள மதிப்பு ஒருநாளும் சமுதாயப் பார்வையினின்றும் நீங்கிவிடாது. மேகம் சிறிது நேரம் வானினை மறைத்துவிட்டு விலகுவதைப் போல, அந்தத் தற்காலிக வறுமையும் நீங்கிவிடும். சுருக்கமாகச் சொல்வதென்றால், நல்லார்க்கு வரும் கேடு நிரந்தரம் இல்லை. அதுபோல அவ்விய நெஞ்சம் உடையார்க்குச் சேரும் ஆக்கமும் நிலையான தில்லை எனும் வள்ளுவ அமைதியை ஏற்கலாம்.”

ஒரு புலவர்

“ஒருங்கிணைப்பாளர் தந்த விளக்கத்தை நாமும் ஏற்கலாம்.”

அதிகாரி

“ஒருங்கிணைப்பாளர் முற்றத்து அவையில் நாம் அமரும் முன்னர், தவத்தின் பயன் பற்றிய ஒரு முரண்பாட்டுச் செய்தியைச் சொன்னார்; அதை நினைவூட்ட விரும்புகிறேன்.”

ஒருங்கிணைப்பாளர்

ஐயா அவர்கட்கு நன்றி.

தவம் படுத்தும் பாடு

“ ‘தவமும் தவம் உடையார்க்கு ஆகும்’ – அதாவது இங்கே தவம் என்றால் காடு சென்று கண்மூடித் தனித்து இருப்பதில்லை; சமுதாயத்தில் வாழ்ந்திருந்தே, மக்களுக்குப் பயன்தரும் சீரிய பணிகளை மேற்கொள்ளுவது என்றே கருத வேண்டும். அத்தகைய சமுதாயப் பொறுப்பற்றவர்கள் தவம் செய்வதாகச் சொல்வது சமூகக் கேடாகவே முடியும்.”

இடைமறித்த ஒருவர்

“நம் நாட்டில் பல ஆசிரமச் சந்நியாசிகள் நடத்திய அலங்கோலங்கள் எல்லாம் நமக்குத் தெரியுமே!”

ஒருபுலவர்

“அந்த ஆனந்த உல்லாசங்கள் எப்படித் தவம் ஆகும்? அவையெல்லாம் ‘பாவம்’ என்றே சொல்ல வேண்டும்.”

ஒருங்கிணைப்பாளர்

‘தவம் செய்தார்தம் கருமம் செய்வார்’ என்றும், ‘உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை’ என்றும் கூறும் வள்ளுவர்…”

பேராசிரியர்

(இடைமறித்து) “ஆனால் அதே குறள் வரிசையில்,

“ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்

     எண்ணின் தவத்தான் வரும்” (264)

எனச் சொல்லும் போது தவம் என்பது பிறரைத் தண்டிக்க, ஒறுக்க ஒரு கருவியாகக் கொள்ளப்படுவது ஒரு வகையில் முரண்தானே?”

மற்றொருவர்

“தவக்கோலம் வேறு; தவ ஒழுக்கம் வேறு என்பார் அறிஞர் மு.வ. தவ ஒழுக்கம் இல்லாதவர்கள் அதை மேற்கொள்வதாக நடிப்பது வீண்.”

இன்னொருவர்

“இந்தத் தவக்கோலமும் தவ ஒழுக்கமும் துறவிகளுக்கு மட்டும்தானா? ‘இந்த வம்பு நமக்கு ஏன்?’ என இல்லறத்தார் ஒதுங்கி விடுகிறார்களே?”

ஒருங்கிணைப்பாளர்

“அப்படிச் செய்ய அவசியம் இல்லை. தவம் – இரு சாராருக்கும் பொது; பொருந்தக்கூடியது. சிலர் இல்லறத்தை முற்றிலும் விடுத்துத் தவ வாழ்வில் முற்றாக ஈடுபடுவர். எனினும் இல்லற வாழ்வில் ஓரெல்லை தாண்டிய பின், மேற்கொள்ளலாம்.

வள்ளுவர் இதை வேடிக்கையாக,

“துறந்தார்க்குத் துப்புரவு வேண்டின் மறந்தார்கொல்

     மற்றை யவர்கள் தவம்”        (263)

என வினா எழுப்புகிறார். இல்வாழ்க்கையில் பகைவர்களை மடக்கித் திருத்துவதற்கும் நண்பர்களை மதித்து உயர்த்துவதற்கும் ஒரு வகை ஆற்றல் வேண்டும். அந்த ஆற்றல் தவ ஒழுக்கத்தினைக் கைக்கொள்ளுவதால் எவருக்கும் வந்து சேரும் என்பதே வள்ளுவம். வாழும் வாழ்க்கையையே ஒரு நோன்பாக மாற்றிக் கொள்ளும் சான்றோர் பலர் நம் தமிழ்நாட்டிலேயே வாழ்ந்து வழிகாட்டி யுள்ளனர் – வள்ளலார், மறைமலை அடிகளார், திரு.வி.க. போல்…”

இளைய தலைமுறையின் வழிகாட்டிகளாக…

ஓர் இளைஞர்

“இன்றைய தலைமுறைக்கு எழுச்சியூட்டு வதையே ஒரு தவமாகக் கொண்ட நம் தமிழகத்து டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி, நம் அறிவியல் மேதை டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் எனப் பெரிய பட்டியலே போடலாமே?”

ஓய்வு பெற்ற அரசு அதிகாரி கா.கருப்பையா

“இந்த இளைஞர் தன் வாழ்க்கை வழிகாட்டிகளாகப் பிறரைப் போலச் சினிமாக் கலைஞர்க்குப் போஸ்டர் ஒட்டாமல், சமுதாய நலனுக்கே தம்மை அர்ப்பணித்து வாழும் சான்றோரைக் குறிப்பிட்டது என்னை மெய்சிலிர்க்கச் செய்து விட்டது. (சபையை நோக்கி) உங்களுக்கு அந்த உணர்வோட்டம் தெரியவில்லையே.”

கூட்டத்தில் பலர்

“நன்றாகத் தெரிகிறது; தெளிவாகவும் புரிகிறது… எல்லோரும் இளைஞரைப் பாராட்டிக் கைதட்டி விடுவோம்” (சிரிப்பலையும் கர ஒலியும்)

ஒருங்கிணைப்பாளர்

“இளைஞர் குறிப்பிட்டதைப் போலத் தவப்பாங்குடைய சான்றோர் உலகில் சிலராகவும், தவ நன்முயற்சி செய்யாதவர் பலராகவும் உள்ளனரே என வள்ளுவர் வருத்தப்பட்டார். அந்த வருத்தம் நீங்கும் வகையில் வளரும் சமுதாயத்து இளைஞர் பலர், அறிவாக்கமுடைய சான்றோருடன் அணிசேர்ந்து உழைப்பு, விடாமுயற்சி, பொதுநலம் எனும் புதிய தவநெறிகளால் இச்சமுதாயத்தில் எண்ணிக்கையில் பலராகப் பெருகிடப் போகும் ஒளிக்கதிர்கள் வீசத் தொடங்கிவிட்டன.”

(மீண்டும் கைதட்டல்)

இளைஞர்

“நான் மீண்டும் ஒரு சந்தேகத்தை அவை முன்னர் வைக்க அனுமதிக்க வேண்டுகிறேன். குணமெனும் குன்றேறி நிற்கும் சாதனைச் சான்றோர்களை நாட்டு இளைஞர்கள் தமது வாழ்க்கை வழிகாட்டிகளாக (ஸிஷீறீமீ விஷீபீமீறீs) கொள்ள வேண்டும் என அடிக்கடி எங்களுக்குச் சொல்லப் படுகிறது. அத்தகைய சான்றோரில் பலர் கோபத்தால், வெகுளியால் அவர்களை அணுக முயலும் இளைஞர்களை விரட்டி விடுகிறார்களே?”

அரசு அதிகாரி

“தம்பி… அப்படி விரட்டப்பட்டோரில் நீங்களும் ஒருவரா?”

இளைஞர்

“அந்தப் பெரியவர் விரட்டும் முன்னரே நான் தப்பி ஓடிவந்துவிட்டேன்.” (அவையில் சிரிப்பு)

ஒருங்கிணைப்பாளர்

“ஒருவேளை.. அந்தப் பெரியவர்,

“செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

     அவியினும் வாழினும் என்”          (420)

என இந்த இளைஞரைக் கருதியிருக்கச் சற்றும் வாய்ப்பில்லை.”

 

( தொடரும் )

2260total visits,2visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>