குறள் நிலா முற்றம் 12

ஒருங்கிணைப்பாளர்

“குறளில் ‘நட்பு’ எனும் மானுடப் பொது உறவு பற்றி வரும் ஐந்து அதிகாரங்கள் ஒருபுறம் இருக்க, இருமுறை வரும் அதிகாரப் பெயர் ஒன்றும் உள்ளது. அது என்ன என்று சொல்கிறீர்களா?”

(அவையில் சற்று அமைதி)

“நானே சொல்லிவிடுகிறேன். அது தான் குறிப்பறிதல்!”

இளைஞர் ஒருவர்

“செம்மல் லேசாக ஜாடை காட்டியிருந்தால், இந்தத் தலைப்புப் பெயரை நானே சொல்லி இருப்பேன். நெஞ்சில் நின்றது, சொல்லில் வருவதற்குள்…”

ஒரு புலவர் ஐயா

“இந்தக் காலத்துத் தம்பிகளில் பெரும் பாலோர்க்குக் குறிப்பறிதல் உடனே புரிவதில்லை; அவர்களுக்குப் புரியும் குறிப்புக்களோ நமக்குப் புரிவதில்லை.”

(அவையில் பலத்த சிரிப்பு)

ஒருங்கிணைப்பாளர்

“‘குறிப்பறிதல்’ அதிகாரப் பெயர் – பொருட்பாலில் அங்கவியலில் உண்டு; காமத்துப் பாலில் களவியலிலும் அது உண்டு. அங்கே அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகத்தைச் சொல்லுகிறார்.”

பெரும்புலவர்

“இங்கேதான் சிறிசுகள் முகத்தை மூடிக்கிறதுகளே?” (அவையில் சிரிப்பு).

ஒருங்கிணைப்பாளர்

“காமத்துப் பாலில் அறத்துப்பால் உள்ளிட்ட பல உளவியற் செய்திகளை நுட்பமாகச் சொல்லுகிறார் வள்ளுவர் எனச் சற்று முன் சொன்னேனே… அதைத் தொடர்ந்து சில நினைவுச்சரங்கள்.”

பேராசிரியர்

“இன்பத்துப்பால் தான் இதர அறம், பொருள் பிரிவுகளுக்கு அடிப்படை எனத் ‘திருக்குறள் செம்மல்’ அவர்கள் தக்க சான்றுடன் எப்போதும் நிறுவுவார்…

ஒருங்கிணைப்பாளர்

இதற்கிடையே இந்த நூற்றாண்டின் தொடக்க நன்னாளில் உலகே வியக்க, நம் பாரதத் திருநாட்டின் பாதச்சுவடாக விளங்கும் நீலத்திரைக் கடலோரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் குமரியின் முக்கடல் கூடும் இடத்திலே, உலகு வியக்க நிறுவப்பெற்ற திருவள்ளுவரின் சிலை அமைப்பும் இந்தக் கருத்தின் அடிப்படையிலேயே செதுக்கப்பட்டுள்ளது என்பதும் உலகம் உள்ள வரை நிலை பெற்றிடும்.”

பேராசிரியர் வளனரசு

“சிலை திறப்புப் பெருவிழாவில் பங்கேற்று மகிழ்ந்த நான் காணாத ஏதோ ஒரு செய்தியைப் பேராசிரியர் சொல்லுகிறார்.”

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“கலைஞர் பெருமானாரின் 20 ஆண்டு விடா முயற்சியாலும் அருங்கலைச் சிற்பி கணபதி ஸ்தபதியின் குழுவினரது ஈராண்டு உறங்கா உழைப்பாலும், கருங்கற் களைப் பாளம் பாளமாக வடிவமைத்து வண்ணமுற நிமிர்த்தப்பட்ட இந்தத் திருவள்ளுவர் சிலை, அமெரிக்க சுதந்திரதேவி சிலையை விடச் சிறப்புப் பெருமையுடையது; கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம் பெறத்தக்கது. 1330 குறட்பாக்களை 133 அதிகாரங்களில் வகுத்துள்ளமைக்குச் சான்று பகருவது போல 133 அடி உயரப் பெருமையுடையது; பிரமிப்புத் தருவது.

இதில் நான் சிறப்பாக அவையோர் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவது இந்த 133 அடி உயரச் சிலையின் மூன்று நிலைப் பகுப்பு.

சிலைநிற்கும் ஆதார பீடத்தின் உயரம் 38 அடி. இது அறத்துப்பாலின் 38 அதிகாரங்களுக்கு நிகர். இந்தப் பீடத்தின் மீது நிமிர்ந்து நிற்கும் உருவச் சிலையின் உயரம் 95 அடி. அதாவது பொருட்பால் அதிகாரம் 70, இன்பத்துப்பால் அதிகாரம் 25 இரண்டும் சேர்ந்தால் 95, ஆதார பீடத்தையும் சேர்த்தால் ஆக மொத்தம் 133 அடி (அவையோர் கர ஒலி)

ஒருங்கிணைப்பாளர்

“பேராசிரியர் வள்ளுவர் சிலையின் வடிவமைப்பை விரித்துச்சொல்லி வள்ளுவர் முப்பாலில் காமத்துப்பால், பொருட்பால் எனும் இரண்டும் அறத்தின் மீதே ஊன்றி நிற்கின்றன எனும் அற்புதப் பொருத்தத்தை அழகுறச் சொன்னார். அறிதற்குரிய அரிய செய்தியை நினைவூட்டியமைக்கு நெஞ்சார்ந்த நன்றி (மீண்டும் கைதட்டல்) நான் விட்ட இடமான சிலை பற்றிய விவரங்களை மீண்டும் பேசுவோம். அறிதோறும் அறியாமை கண்ட இடத்திற்கு மீண்டும் போகலாமா?”

“ ‘அறிதோறும் அறியாமை கண்டற்றால் காமம், செறிதோறும் சேயிழை மாட்டு” (1110) எனும் ‘புணர்ச்சி மகிழ்தல்’ அதிகார இறுதிக் குறட்பா அறிவினைத் தேடத் தேட, அறியாமையே மிகுவதை இவ்வளவு நுட்பமாக உணர்த்துகிறது. மற்றொரு அருமையான குறள்.. அதே அதிகாரத்தில்தான்,

“தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்

     அம்மா அரிவை முயக்கு”            (1107)

என நம்மை விருந்தோம்பலோடு இந்த மனையாளொடு இருந்தோம்பி மகிழும் ஆரா இன்பத்தையும் அழகுற ஒன்றாக்குகிறார் வள்ளுவர்..”

இடைமறிக்கும் புலவர்

“தமது வீட்டில் இருந்து கொண்டு, தாம் சம்பாதித்தலில் விருந்து அளித்து அதை விருந்தினர் வயிறார உண்பதைக் கண்டு மகிழும் மனம்…”

பெரும்புலவர்

“பின்னே என்ன? ஓட்டலுக்குப் போய் நாலு பேரோட வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டு, பில்லைத் தட்டுலே வச்சவுடனே வேறே பக்கம் முகத்தைத் திருப்பிக்கிற இந்தக் கால நாகரிகத்தை – அடுத்தாத்து நெய்யே என் அகத்துக்காரி கையேங்கிற உபசாரத்தை – வள்ளுவர் செய்யவில்லை.”

ஓர் அரசு அதிகாரி

“நண்பருடன் ஓட்டலுக்குப் போய்ச் சிக்கிக் கொண்ட அனுபவத்தோடு புலவர் ஐயா பேசுகிறார்” (சிரிப்பலை)

புலவர்

“அட, நான் ஓட்டலுக்கே போறதில்லைய்யா. வீட்டிலேயே நமக்கு எப்போதும் விருந்துதான் போங்க…”

இன்னொருவர்

“அந்த ரகசியத்தையும் சொல்ல மாட்டேங் கிறீங்களே” (மீண்டும் சிரிப்பு)

மற்றோர் அரசு அதிகாரி

“இந்தப் பரம ரகசியங்களை எல்லாம், ஒவ்வொருவரும் பகிரங்கப்படுத்தத் தொடங்கி விட்டால் அதற்காக என்றே தனி இயல் ஒன்றை நாமே வகுத்து, அதையும் வள்ளுவர் தலையில் கட்டிவிடலாம்.”

ஒருங்கிணைப்பாளர்

“வருமான வரித் துறை ஆணையர் திரு மோகன் காந்தி அவர்கள் ஏதோ புதிய செய்தி ஒன்றை எழுப்ப விழைகிறார். கேட்டறியலாமே?”

வருமான வரித் துறை ஆணையர் திரு.மோகன் காந்தி

“மூதறிஞர் ராஜாஜி அவர்களின் ‘பஜ கோவிந்தம்’ எனும் நூலைப் படித்தேன் இரு குறட்பாக்களில் வரும் ‘வேண்டாமை எனும் செருக்கு – பற்றுக பற்றற்றான் பற்றினை’ எனும் வரிகளுக்கு மன நிறைவான விளக்கம் பெற்றேனில்லை.”

ஒருங்கிணைப்பாளர்

“பொருள் சேர்ப்பது வாழ்க்கைத் தேவை. அதனை உழைப்பால் நியாயமான முறையில் ஈட்ட வேண்டுமே தவிர, அறம் தவறிப் பொருள் சேர்க்கும் வேணவா, பேராசை அறவே கூடாது. அதிலும் தவறு எனக் கருதாமல், பிறர் பொருளைக் கவர முயன்றால் அதனால் முடிவில் துன்பமே மிகும். ‘இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும், வேண்டாமை என்னும் செருக்கு’ (180) என்பது குறள். பிறர் பொருளைக் கண்டு பொறாமை யுறுவதே குற்றம் எனப்படும். அப்படியிருக்கப் பிறர் பொருளை எப்படியேனும் அபகரிக்கச் சதித்திட்டம் செய்வது பெருங்குற்றம். அன்புடையவர் பிறர்க்குப் பொருளுதவி செய்து அவரைக் கை தூக்கி விடுவர்.”

அரசு அதிகாரி ஒருவர்

“பொறாமையும் பேராசையும் உடையவர் உதவி செய்வது போல நடித்துத் தக்க சமயத்தில் காலை வாரி விடுவார். கை தூக்கி விடுவதை விட, காலை வாரி விடுவதுதான் இப்போது மிகச் சுலபமாகத் தெரிகிறது.” (அவையின் முறுவல்)

ஒருங்கிணைப்பாளர்

“அன்பற்ற பொறாமைக் குணமுடையார், கொள்கையோ நடுநிலையோ இல்லாது, பிறர் தேடிய பொருளைத் தான் மட்டும் எப்படியும் அடையக் கருதினால், அவர்களுடைய குடி அழியும், குற்றங்களும் அப்போதே விளையும். எனவே, தவறான முறையில் பொருள் தேட மறுப்பதே ஒருவகையில் மானமுடைய செருக்கு என்கிறார் வள்ளுவர்.”

பெரும்புலவர்

“கலைத்திறமுடையோர்க்குக் கலைச்செருக்கு இருப்பது போல, தமது அரிய உழைப்பால் பெருஞ்செல்வம் சேர்த்தோர் சிலரிடம் மிடுக்கு அமைவது போல, வெற்றி மேல் வெற்றி பெறும் அரசியல் தலைவர்கள் சிலருக்குச் செருக்கு வந்து பற்றிக்கொள்ளுவது போலப் பிறர் பொருளைக் கவர நினையாமையே ஒரு வகையில் செருக்கு; அதாவது, வியந்து பாராட்டத்தக்க செருக்கு எனும் குறள் கருத்தைச் செம்மல் விளக்கியமைக்கு நன்றி. அடுத்து..”

ஒருங்கிணைப்பாளர்

‘நடுவுநிலை தவறிச் சேர்த்த பொருளால் தானம் செய்து புகழ், விளம்பரம் என்றெல்லாம் தேடினாலும், அது, ஒருவகையில் கருமித்தனம் தான்.”

புலவர் ஒருவர்

“அதற்குப் பின்னால் கர்ம வினைப் பலனும் உண்டு.”

ஒருங்கிணைப்பாளர்

“அறத்தொடு சாராத பொருளைப் பிறர்க்கு ஈகை செய்வதால், புகழோ பெருமையோ நிலைபெற்று விடாது, வெற்று விளம்பரமாகவே போய்விடும்.”

வருமான வரித் துறை அதிகாரி

“ராஜாஜி சொன்ன.. பற்றுக குறளைக் கொஞ்சம் பற்றுக..” (அவையில் சிரிப்பு)

ஒருங்கிணைப்பாளர்

“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

     பற்றுக பற்று விடற்கு..”        (350)

என்பது வள்ளுவம்”

பெரும்புலவர்

“வருமான வரித் துறை ஆணையர் கேட்ட கேள்வியில் எத்தனை பற்றுகள்? பற்றும் வரவும் இல்லாமல் பேரேடு போட முடியாது. வரிவிதிப்பும் கிடையாது” (சிரிப்பலை)

ஒருங்கிணைப்பாளர்

“‘துறவு’ அதிகாரத்தின் இந்தக் கடைசிக் குறளில் ‘பற்று’ எனும் பிடிப்பு வாழ்வையும் விடுப்பு வாழ்வினையும் வள்ளுவர் வேறுபடுத்திக் காட்டுகிறார். துறவு முறைகள் பல வகை. இளங்கோவடிகள், விவேகானந்தர் போன்றவர்களின் மணவாத் துறவு, மணந்து வாழும் போதே ஒரு குறிப்பிட்ட வயதை எட்டிய பின் மேற்கொள்ளும் சில கோட்பாட்டுத் துறவுகள், அருளுணர்வு பெருகி, தன்னலம் ஓய்ந்தபின், இல்லற வாழ்வையும் துறந்து, பிறர் நலம் பெறவும், தன் ஆன்மா உய்வு பெறவும் முழுமைத் துறவே பூணுதல்… ஆனால், இல்லறத்தில் இருக்கும் போதே, சில நிலைகளில் பற்றற்று வாழ்ந்து, கடமையைச் செய்வோரும் காந்தியடிகளைப் போலச் சிலர் உண்டு. புறத்துறவும் கொள்ளலாம். அகத்துறவும் அமையலாம். முழுமையான, பற்றறுத்த வாழ்க்கை, ஐம்புலனையும் செம்மையாக அடக்கிய வாழ்க்கை பூணுவது எளிதில்லை. ‘யான், எனது…’ என்பது இருந்தே தீரும்.”

பெரும்புலவர்

“ஏதாவது ஒன்றைப் பற்றி நிற்பதே உயிரின் இயல்பு. எனவே சில்லறைப் பற்றுக்களை விட வேண்டுமானால் செம்பொருளான சிறந்ததொரு பற்றினைப் பற்றுக என்பது தானே பொருள்?”

ஒருங்கிணைப்பாளர்

“பிறவி நோக்கம் இடையறா இன்பமே ஆகும். அதனால் நிம்மதியும் அமைதியும் பெறுவதே குறிக்கோள். இந்த இன்பத்திற்கு அடிப்படை ஆசை. அது அளவின்றிப் பெருகிப் பேராசையாகிவிட்டால், அதுவே துன்பத்திற்கு மூல காரணம் ஆகிவிடுகிறது.”

பேராசிரியர்

“அதாவது, ஒருவன் எதனிடம் மிகுபற்றுக் கொண்டு வாழ்கிறானோ அதனால் துன்பம் அடைவான், எதிலிருந்து பற்று விட்டு நிற்கிறானோ அதானல் அவனுக்குத் துன்பம் இல்லை.”

ஒருங்கிணைப்பாளர்

“ ‘யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்’ (341) எனும் குறட்கருத்து அதுதான். இந்தப் பத்தாம் பற்றுக் குறளை வள்ளுவர் வினா – விடை போல அமைத்துள்ளது தான் சிறப்பு. கைவிட வேண்டியது எது? பற்று விடுதல். அதற்கு முதலில் என்ன செய்ய வேண்டும்? வேறொன்றைப் பற்றுக. இந்தப் ‘பற்றுக’ எனும் பதத்தை மிக நயமாகக் கையாண்டு ஒருவகை மயக்கமூட்டுகிறார் வள்ளுவர்.”

பெரும்புலவர்

“ஆமாம், எதைப் பற்றினாலும் மயக்கம் வந்துவிடாமல் கைப்பற்ற வேண்டும்.”

ஓரன்பர்

“புலவர் ஐயா எந்தப் பற்றையும் இன்னும் விடாத அனுபவத்தைச் சொல்கிறார்” (அவையில் சிரிப்பலை)

ஒருங்கிணைப்பாளர்

“இப்போதெல்லாம் தனிநபர் வாழ்வை விடச் சமுதாய வாழ்வில் இருப்போரிடம் பொதுப்பற்றை விடத் தன்னலப் பற்று, தன் பெண்டு, தன் பிள்ளை என்னும் வாரிசுப் பற்றுகள் ஆட்டி வைக்கின்றன. இத்தகையோரிடம் மக்களிடம் அதிலும் சிறப்பாக வறுமைக் கோட்டிற்குக் கீழே சீரழிந்தோரிடம் இரக்கச் சிந்தை எனும் பற்றுறுதி ஏற்பட்டால், பிற சுயநலப் பற்றுக்கள் எல்லாம் தாமாக விட்டுப்போக ஆரம்பித்துவிடும். புகழ்ந்தவை போற்றிச் செய்யும் பெருமனம் வளரத் தொடங்கும். வள்ளலார் வேண்டியது போல, ஆருயிர்க்கெல்லாம் அன்பு செய்யும் தொண்டுமனப் பற்று விடாது பற்றிக் கொள்ளும். அதனைப் பற்றுக என வள்ளுவர் சொன்னதாகக் கருதி ராஜாஜியின் பஜ கோவிந்தச் சரிதத்தை நாமும் ஏற்போம்.” (கை தட்டல்)

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“எல்லோரும் ‘பஜ கோவிந்தம்’ மட்டும் பாடிக் கொண்டே இருந்தால் நாட்டில் படரும் பசிப்பிணி போய்விடுமா, என்ன? இந்த உலகு இருக்கும் வரை ஏழையரும் இருப்பர். எனவே அயலாரை நேசித்து உதவும் பற்றினை வளர்ப்பதே மனித நேயம். அது இல்லாத வெறும் இறைபக்தி பொருளற்றது என விவிலியம் போதிக்கிறது.”

இடையில் ஒருவர்

“கிட்டத்தட்ட எல்லாச் சமயங்களின் உபதேச சாரமும் அதுதான்.”

ஒருங்கிணைப்பாளர்

“உபதேசம் வெறும் ஊறுகாய் போல மட்டும் இருந்து விடலாமா? பற்றே வேண்டாம் என்பதை விட, நாட்டின் மீது பற்றுக்கொள்க, நல்ல செயல்களில் நாட்டம் கொள்க என வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் மக்கள் சக்தி இயக்கங்கள் வளரவேண்டும், வளர்க்கப்பட வேண்டும்.”

( தொடரும் )

5711total visits,4visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>