முருகனுக்குப் புதியதொரு படைவீடு
கனடா நாட்டில் நான்கு நாள் பயணத்தோடு இலண்டன் வந்த எங்களைப் பத்து நாட்களாவது தங்கவைத்து விருந்து உபசாரம் செய்ய விழைந்த அன்பர்கள் விமான நிலையத்திற்கே வந்துவிட்டனர்.
இலண்டனில் அந்தப் பத்து நாட்களும் மூன்று முக்கிய நிறுவனத் தொடர்பைத் தந்தன. உலகப் புகழ் பெற்ற ஒய்.எம்.சி.ஏ. விடுதி, பி.பி.சி தமிழோசை, லண்டன் முருகன் திருக்கோவில்…
உலகில் மிகப்பிரபலமான மிகப்பெரிய நகரங்களில் ஒன்று லண்டன்; மிகமிக அழகிய நகரமும் அதுதான் என்றாலும், தேம்ஸ் நதி தீரத்தில் வீற்றிருக்கும் அந்த நகரின் அழகை விட, ஆங்கில அரசியல் நாகரிகப் பண்புகள், இலக்கியச் சிறப்புகள் ஆகியனவே என் நினைவில் நின்றன. அங்கில மொழிக்குச் செழுமை சேர்த்த சேக்ஸ்பியர், மில்டன், வேர்ட்ஸ்வொர்த், பைரன், கீட்ஸ், ஷெல்லி, டென்னிசன், டிக்கன்ஸ், பெர்னாட் ஷா, வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோரை மறக்க முடியுமா? நம்நாட்டுப் பள்ளிக்கூடப் பாட நூல்களை எல்லாம் நெடிது காலம் ஆட்சி செய்தவர்கள் அல்லவா இவர்கள்! அவர்களை ஆட்சி செய்ய வைத்த ஆங்கில மொழியின் இயல்பும், ஆட்சியால் அம்மொழியை உலகறியச் செய்த ஆங்கிலேயரின் இடைக்கால வெற்றி வரலாறும் நினைக்கத்தக்கவை. நம்மவர்களும் உலகத் தலைமைக்கு அடி எடுத்து வைத்த அந்த ஆதி நாட்களில் அப்படி முயன்றிருந்தால் – திருக்குறளும் அப்போதே உலக இலக்கியமாகி இருக்கும் என்பதும் கருதத்தக்கது.
உலகளாவிய தொண்டு நிறுவனமான ஒய்.எம்.சி.ஏ.- இல் சகோதரர் முத்தையா அன்பான வரவேற்பளித்தார். மதுரை மத்திய ஒய்.எம்.சி.ஏ-இன் பொதுச் செயலராக அவரும் அதன் செயற்குழு இயக்குநர்களில் ஒருவனாக நானும் பங்கேற்றிருந்த ஆண்டுகள், லண்டனில் இந்த உறவுப் பிணிப்பை ஏற்படுத்தித் தந்தன…..
உறவுப் பிணிப்பிற்கே உரிய பெரியவர், லண்டன் மெய்யப்பச் செட்டியார்! நம் செட்டிநாட்டுக் கோட்டையூர் ஜவகர் ஆலை நிறுவனரான இப்பெருந்தகை – கலைத் தந்தை கருமுத்து தியாகராசர் குடும்பத்துச் சம்பந்தி முறையினர். எனினும் ‘லண்டன் மெய்யப்பர்’ என்பதே அவரது பிரபல விலாசமாகிவிட்டது!
அவர் ஆற்றி வரும் அரும் பணிகளில் முதன்மையானது- முருகப் பெருமானுக்கு லண்டனில் ஆலயம் அமைத்து, முருகனின் புதியதொரு படைவீடு போல அதைப் பேணி வருவது!
லண்டனில் வேறு சில இந்து சமய வழிபாட்டு இடங்களும் உள்ளன. ஸ்ரீ மகாலெட்சுமி கோவில், சிவன் கோவில் எனும் இரண்டும் குறிப்பிடத்தக்கவை. இவ்விரண்டை விட முருகன் கோவிலே பிரசித்தி பெற்று விளங்குகிறது.
1974-இல் ஹாரிங்டன் ஸ்குயர் எனுமிடத்தில் திருமெய்யப்பர் தொடங்கிய ஆலயத்திருப்பணி திரு.அழகர் ராஜாவால் ஆக்கம் பெற்று அற்புத ஆலயமாக எழுந்துள்ளது. புறத்தே எளிமையாகத் தோன்றினாலும் உள்ளே கலையம்சங்களும் தூய்மையும் ஆட்சி செய்கின்றன.
வள்ளி – தெய்வானை சமேதராக கந்தன் கருணை புரிகிறார். நம் நாட்டு முருகன் திருத்தலங்களில் நடக்கும் அத்தனை விழாக்களும் அங்கே நடக்கின்றன. சித்திரா பவுர்ணமியில் சுவாமி புறப்பாடு, வைகாசி விசாகப் பாலாபிசேகம், ஆனித் திருமஞ்சனம், ஆடிக் கிருத்திகை பத்து நாள் விழா, லண்டன் மக்களைக் கவரும் தேரோட்டம், ஆவணியில் விநாயகர் சதுர்த்தி, புரட்டாசியில் நவராத்திரி, ஆங்கில வருடப் பிறப்பன்று (பால்குடம் உட்பட) பங்குனிப் பெருவிழா – என ஆண்டு முழுவதும் அங்கே முருகன் திருக்கோல வைபவம்தான் எனக் கேட்டறிந்து மகிழ்ந்தேன்.
இந்த ஆலயத்தில் – சுப்பிரமணியனான நான்! – (என் இயற்பெயர் அதுதான்!) ‘முருக வழிபாட்டுத் தொன்மை’ பற்றிப் பேசவேண்டும் என ஏற்பாடு செய்துவிட்டார் லண்டன் மெய்யப்பர்….
‘தமிழ்க் கடவுள்’ முருகனைப் பற்றிப் பேச, வந்த இடத்தில் திடீரென அழைக்கப்பட்டிருந்தேன். எனினும் சங்க காலந்தொட்டு முருகன் புகழ் பேசும் இலக்கிய நினைவுகள் கைகொடுக்கும் என நம்பியிருந்தேன்.
அகத்திய மாமுனிக்குத் தமிழைத் தந்த முருகன், ஔவைப் பிராட்டிக்கு ஞானம் புகட்டிய குமரன், குமர குருபரர் காசியில் தமிழ்ச் செல்வம் பரப்பிட அருளிய செந்தூரான், கிருபானந்த வாரியாரை – ‘திருமுருக’ எனும் முன்னிலைப் பெயரேற்று ஆன்ம நலம் பரப்ப அனுப்பிய குன்றுதோறும் கோலம் கொண்ட கடவுள்… காலம்தோறும் அன்பர்க்கெல்லாம் அருள் பாலிக்கிறான் அன்றோ! அப்படியொரு பரவசநிலை அன்று என்னுள் பரவியது!
முருகனை வழிபட்டபின் முருக வழிபாடு பற்றியே உரையும் விரிந்தது. வாழ்வில் மனித நேயமும் தெய்வநலமும் கைகூடி நின்றிட, மனம் மொழி செயல்களை அர்ப்பணிப்பதே வழிபாடு செய்வதன் நோக்கம். ‘மனிதப் பிறவியும் வேண்டுவதே இம் மாநிலத்தே’ என வேண்டியிருந்தாலும் மனிதப் பிறவியின் இலட்சியம் மாசுபோல் அடர்ந்திடும் துன்ப நீக்கமே ஆகும். துன்பத்தை நீக்கும் எளிய இனிய வழி, இறைவனைச் சார்தலே என ஆன்றோர் அறிவுறுத்தினர்.
“தனக்குஉவமை இல்லாதான்தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது” (7)
என வள்ளுவர் மனக்கவலைக்கு மருந்து சொன்னார்.
‘மனத்துக்கண் மாசிலன் ஆதலே’ அவர் கூறும் அனைத்து அறம். மனத்தில் அழுக்காறு, காமம், வெகுளி முதலிய ஆகாப் பற்றுக்களை, புற்றுகளாக வளர்த்துக் கொண்டு விட்டால், அந்த ஆகாப் பற்றுக்கள் நாளடைவில் அழிவுப் பற்றுக்களாகப் படர்ந்து விடுகின்றன.
வள்ளுவர் ‘பற்று’ என்றார். ‘ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்’ எனப் பின்வந்தோர் உபதேசம் செய்திருக்க, வள்ளுவர் ‘பற்றுகளே இல்லாதிருப்பவனான ஒருவனிடத்தில் கொள்ளுகின்ற பற்றினை நெகிழவிடாது பற்றுக!’ என்றார்.
அன்றாட வாழ்வில் ஒவ்வொருவரும் துறக்க வேண்டியன உண்டு; ஏற்கவேண்டியன உண்டு. குப்பையை அகற்றிய பிறகே வீட்டை அழகுபடுத்த முற்படுதல் போல்… மனத்திலும் வாழ்க்கையிலும் சேர்ந்துள்ள குப்பை போலும் தீய பற்றுக்களை அகற்றிய பின்னரே நன்மையை நாடும் மனச்சால்பு வளரும். நமது அறுசமயத் தொன்மை நெறிகளுள் ஒன்றான கௌமாரம் – இப்பற்றுறுதி வகைகளையே நமக்கு அருளுகிறது. திருமுருகாற்றுப்படையில் “தாமரை புரையும் காமர்சேவடி” என்று நக்கீரர் பரவியதும், “முருகா முருகா தருவாய் நலமும் திருவும்” என்று பாரதி பாடியதும் குன்றுதோறும் ஆடும் குமரனுக்குக் காலந்தொறும் நிகழ்ந்த பூசனைகள்… லண்டன் மாநகரிலும் அப்பூசனைகள் நிகழ்வது குமரனின் இளமைப் பொதுமையைச் சுட்டுகிறது… நம்மையும் இளமைக் கோலம் பெறச் செய்கிறது.
உரைகேட்ட அன்பர்களின் ஒருமித்த பாராட்டைப் போல லண்டன் மெய்யப்பர் அளித்த விருந்தும் மெய்மறக்கச் செய்தது! அந்த விருந்தில் கலந்து கொண்ட பேரன்பர் சங்கரண்ணாவின் தமிழ்ப்பணி லண்டன் செல்லும் தமிழர்களோடு உலகத் தமிழர்களிடையிலும் புகழோசையாகப் பரவியது.
பிக்பென் கடிகாரக் கோபுரம், பக்கிங்காம் அரண்மனை, நம்பர் டென் டவுனிங் ஸ்ட்ரீட் (பிரதமர் இல்லம்), பாராளுமன்றக் கட்டிடம், பல்கலைக்கழகம், பெரிய பொது நூலகம் (இந்தியா ஹவுஸ் லைப்ரரி இதில் ஓர் அங்கம்), பொருட்காட்சி, வெஸ்ட்மினிஸ்டர் ஆலயம் இவை எல்லாம் லண்டனை நினைவூட்டும் புகழ்ச் சாசனங்கள் இவற்றோடு உலகெல்லாம் தொடர்பு கூட்டி நிற்பது பி.பி.சி.!
உலகச் செய்தித் தொடர்புக் கலையில் முன்னிடம் பெறும் பி.பி.சியின் தமிழோசைப் பிரிவில் சங்கரண்ணா பணியாற்றுகிறார்.
சங்கரண்ணா – பி.பி.சி. தமிழோசையில் – இலக்கியப் பேட்டிக்கு ஏற்பாடு செய்தார். பேட்டி – திருக்குறள் பணிகளைப் பற்றியே அமைந்தது. “திருக்குறளில் இத்துணை ஈடுபாடு உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?…. மேடைகளில் உரையாற்றும் பேராசிரியர்கள் தம் கருத்துக்கு ஆக்கமாகத் திருக்குறளை அவ்வப்போது மேற்கோளாக எடுத்தாண்டு பேசுவது இயல்பு. ஆனால் சாதாரண உரையாடலிலேயே பேசும் விஷயத்திற்குப் பொருத்தமான குறட்பாக்களைச் சடுதியில் நினைத்துச் சொல்லும் ஆற்றல் உங்களுக்கு எப்படி வந்தது?” எனும் கேள்விகளுடன் பேட்டி தொடங்கியது.
“எனது திருக்குறள் ஈடுபாட்டு வளர்ச்சிக்கு உதவியவை இரண்டு; ஒன்று, நான் பெற்ற பேறு; மற்றொன்று எனக்கு அமைந்த வாய்ப்பு. என் தந்தை வழிப்பாட்டனார் – பெரியணர் ஒரு ஆசுகவி. மதுரைத் தமிழ்ச்சங்கப் பெரும் புலவர்களின் சாற்றுக்கவிகளைப் பெற்றவர். என் தந்தையார் நடராசரும் புலமைத்திறம் மிக்கவர். இறைமையில் இசைந்த இந்த இருபெரியோர்களின் மரபுவழிச் செல்வமாக வந்த தமிழ் உணர்வு எனக்கு அமைந்த ஞானப்பேறு. தமிழ் விழாக்களில் (அரங்கேறும் உரைகளை மனம் ஒன்றிக்கேட்பது இளமை முதல் எனக்கு அமைந்ததொரு வழக்கம் அவ்வாறு பேசுவோர் – இலக்கியமாயினும் சரி, சமூகவியல் காட்டியே பேசியது, இந்நூல் பற்றிய ஆர்வத்தை என்னுள் தூண்டியது. “திருக்குறளில் அப்படி என்னதான் உள்ளது?” எனத் துருவித் தேடும் நாட்டத்தை இவ்வாய்ப்புக்கள் ஏராளமாக எனக்கு வழங்கின. ஈடுபாட்டிற்கு உரிய காரணங்கள் இவையேதான்.
“இன்றைய உலகச் சிக்கல்களுக்குத் திருக்குறளில் தீர்வு காண இயலுமா?” எனும் கேள்விக்கு திருக்குறளின் ஞாலப் பழமையையும் அதன் காலப் புதுமையையும் எடுத்துக்காட்டி விளக்கம் சொன்னேன். “திருக்குறளை நீங்கள் எப்படிப் பயன் கொள்ளுகிறீர்கள்? சொந்த அனுபவத்திலிருந்து சொல்லுங்கள்!” என்பது பேட்டியில் அடுத்த வினா.
“லண்டனுக்குப் பயணமாக வந்துள்ள நான் சுற்றுலா – இலக்கிய அறிமுகம் ஆகியவற்றோடு என் தொழில் முயற்சிகளுக்கும் உரிய நேரம் ஒதுக்கிக் கொண்டுள்ளேன். இதற்கு நானறிந்த திருக்குறளே ஒரு சான்று:
பழகிய யானையின் துணையோடுதான் காட்டில் திரியும் புதிய யானையைப் பிடித்து வசக்கிக் கொணர முடியும். அதுபோல நமக்கு நன்கு தெரிந்த தொழில் அல்லது அன்பரின் உதவியோடுதான் மற்றொன்றையும் செய்து முடிக்க முடியும்.
“வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று” (678)
என வினை செயல்வகையைக் கூறும் குறட்பா – எனக்கு- இலக்கியம் – தொழில் இரண்டிலும் இருமுகத் தொடர்பைக் கூட்டித் தந்துள்ளது. இப்படிப் பலருக்குப் பல குறட்பாக்கள் அனுபவ ஆக்கம் தரக்கூடும்.
தமிழ்நாட்டில் மேற்கொண்டுள்ள திருக்குறள் ஆராய்ச்சி மையத்தின் நோக்கும் போக்கும் பற்றிப் பேட்டி வலம் வந்தது. தமிழ் மாமுனிவர் தவத்திரு அடிகளார் திருக்குறள் நெறிபரப்பச் செய்துவரும் சீரிய தொண்டுகளைப் பட்டியலிட்டுச் சொன்னேன். அனைத்து தரப்பினரையும் உறவு கூட்டிப் பிணிக்கும் ஊடகமாகத் திருக்குறளை ஆக்கியவர் அடிகளார் என நினைவு கூர்ந்தேன்.
திறமான புலமையெனில் – வெளிநாட்டார் அதனை வணக்கம் செய்வார்கள் என்பதற்கு உரிய அரங்காக – பி.பி.சி. விளங்குவதையும் சங்கரண்ணா போன்றோரின் தொண்டினால் அதில் தமிழோசை ஓங்கி ஒலிப்பதையும் மனதாரப் பாராட்டி விடை பெற்றேன்.
மறுநாள் – தமிழகத்திலிருந்து தொலைச் செய்தி வந்திருப்பதாகச் சொன்னதும் ஓடிவந்து போனைக் கையிலெடுத்தேன் “நான்தான் குன்றக் குடியிலிருந்து தெய்வசிகாமணி பேசுகின்றேன்” என்ற குரல் என்னைத் திடுக்கிடச் செய்தது. பி.பி.சி. தமிழோசையை விடாமல் கேட்கும் வழக்கமுடைய தவத்திரு அடிகளார், எனது பி.பி.சி. பேட்டியைக் கேட்டு, மறுநாளே என்னைப் பாராட்ட போனில் அழைத்திருந்தார். இது எத்தகைய பேறு! திருக்குறளால் நான் பெற்ற பேறு அல்லவா?
பி.பி.சி. தமிழோசைப் பேட்டியே பயணத்தின் மணிமுடியாக அமைந்துவிட்டதால் அந்த முழுநிறைவோடு லண்டன் நகரைச் சுற்றிப் பார்க்க மனம் இடம் தந்தது.
திட்டமிட்டப்படி ஐரோப்பிய நாடுகளில் காஸ்மாஸ் எனும் சுற்றுலாக் குழுவோடு பத்துநாட்கள் சுற்றினோம். அந்நாடுகளின் வளர்ச்சியைப் பார்த்துப் பார்த்து வியந்தோம்.
அந்த வியப்புச்சுவடு மறைவதற்குள் துபாய், அபுதாபி எனும் சுவர்க்க பூமியில் நான்கு நாட்கள் சுற்றிப் பார்த்தோம். சகோதரர் அல்ஹாஜ் முகமது பாருக். தேவிபட்டினச் செம்மல் – தொழிலொடு அங்கு தமிழும் வளர்க்கும் தூய நெஞ்சராக விளங்குகிறார். அன்பர்களைக் கூட்டி அவர் அளித்த விருந்துகளில் திருக்குறளையும் பரிமாறி விட்டுத் தாயகம் திரும்பினோம்! மேற்குத் திசையில் மறையாத வாழ்வுச் சுடராகத் திருக்குறள் விளங்கும் என நம்பிக்கையோடு தமிழ் மண்ணில் கால் வைத்தோம்.
4957total visits,2visits today