மனித வாழ்வு அமைதியும் இன்பமுமாக அமைய வேண்டுமானால் வாழ்வு அற வாழ்வாக மலர வேண்டும். அறத்தால் வருவதுதான் இன்பம். மற்றவை யாவும் இன்பம் என ஒருவகை மயக்கம் தருவதன்றிப் புகழ் தருவதில்லை; இனிமை தருவதில்லை.
மனம் மாசற்று இருப்பதுதான் அறம். உள்ளம் தூய்மையுடையதாய் உள்ளத்தால் பொய்யாது ஒழுகுவது தான் அறம். வெறும் புகழ் மயக்கத்தால், பயன்கருதிச் செய்யப் பெறும் செயல்கள் தொடக்கத்தில் தவிர்க்க இயலாதவை யாகவே இருக்கும். ஆனால் மனம் பக்குவப்படத் தொடங்கியதும் நல்ல பயிற்சியால் இச்சிறு மாசுகள் நீங்கும். பொதுவாக, பொறாமை, பேராசை, கோபம், இன்னாச்சொல் என்பன அறியாமையால், மயக்கத்தால் உருவாகும் குணங்கள்! இக்குற்றங்கள் நீங்கப் பெற்றால் மனம் மாசு நீங்கி ஒளிபெறும்; வாழ்வும் ஒளிபெறும்.
‘உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினில் ஒளி உண்டாகும்.’ செய்யும் செயலிலெல்லாம் இருளும் மயக்கமும் நீங்கி அறஒளி நிறையும்.
வாழ்க்கை நிலையாமை உடையது. நில்லாத இவ்வாழ்க்கையை என்றும் நிலையானது என மயங்கி யிருத்தல் புல்லறிவு ஆகும்.
‘நேற்றிருந்தார் இன்றில்லை. இன்றிருப்பவர் நாளை இல்லை’ என்ற வியப்பான உலகில், காலம் தாழ்த்தாது, வாழும் ஒவ்வொரு நாளும் அறம் செய்ய வேண்டும்.
‘நாள் என ஒன்றுபோல் காட்டி உயிரறுக்கும் வாள்’ என்பதை நன்கு உணர்ந்து நாளும் அறம் செய்ய வேண்டும். நம் வாழ்விற்கு எப்போது இறுதி நேரிடும் என்று தெரியாத நிலையில் உறுதியான, நன்மையான காரியங்களை அறுதியிட்டு நாடிச் செய்ய வேண்டும்.
குறுகிய வாழ்நாளை நீண்ட பயன் மிகுந்த வாழ்நாளாக்க வேண்டுமானால், நாள் என்பது ஒரு கூர்மையான வாளாக மாறி வாழ்நாளை அறுக்காமல் இருக்க வேண்டுமானால், தடையில்லாமல் வீழ்நாள் இல்லாமல் அமைய வேண்டுமானால், விரைந்து நாள்தோறும் நாடி நல்லறச் செயல்கள் செய்ய வேண்டும். அப்போது துன்பத்தை, துயரத்தை வரவிடாமல் வழியடைக்கும் கல்லாக அறம் விளங்கும்.
சிறப்பாக நாம் ஆளும் அரசைத் தேர்ந்தெடுக்கும் போது அவ்வரசு நாட்டின் நலம் கருதிச் செயல்படும்; அறவழியில் நிற்கும்; மக்களின் அச்சம் நீங்கிப் பாதுகாப்புத் தரும்; பொருளாதாரத்தை மேம்படுத்தும். எனவே இன்பம் நல்கும் ஏற்றமிகு அரசையே தேர்ந்தெடுக்க வேண்டும்.
அறத்தை அறிந்து, மனச்சான்றுள்ள, தியாகம் நிறைந்த, தூய வீரம் நிறைந்த, ஊக்கமும் துணிவும் மிகுந்த விரைந்து செயலாற்றும் நேர்மையாளர்களை ஆட்சிப் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இவைகளை எல்லாம் எண்ணிப் பார்க்காமல், நன்கு ஆராயாமல் – குறுகிய நோக்கோடு, தன்னலத்தோடு முடிவு செய்தால் தீமை விளைந்துவிடும். ஆட்சியில் தீயவர் களையும் தீயவைகளையும் ஏற்றுக்கொள்ளும் துன்பம் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து துயரமே தந்துவிடும்.
நன்றாக ஆராய்ந்து பார்த்து முடிவு செய்து பொறுப்பேற்குமாறு தேர்ந்தெடுத்தவுடன் அவர்கள் மீது முழு நம்பிக்கை கொள்ளவேண்டும். அடிக்கடி தலையிடுவது, குறுக்கிடுவது, அவதூறு செய்வது என்பன மிகப்பெரிய துன்பத்தைத் தரும். ஆராய்ந்து தெளிந்து நம்ப வேண்டும். நம்பித் தெளிந்தவுடன் வீணான ஐயம் கூடாது. எத்துறையாயினும் ஒரு முடிவுக்குப் பின்னர் இடையில் வரும் குழப்பம். சந்தேகம் ஆகியவற்றை முற்றிலும் நீக்கிவிட வேண்டும். அவர்களுக்கு ஆதரவாய் இருந்து நன்கு செயல்பட உரிமை அளிக்க வேண்டும்.
தீரா இடும்பை தரும் எது என்று கேட்டு, அதற்கு வள்ளுவர் விடையும் அளிக்கின்றார்.
“தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்” (510)
ஒருவனைத் தெளிவில்லாமல், ஆராயாமல் தேர்ந்தெடுத்தாலும் துன்பம். ஆராய்ந்து தெளிந்த ஒருவரிடம் ஐயப்படுதலும் நீங்காத துன்பம். இத்துன்பம் நீக்கி இன்பம் பெற்று வாழ்வோமாக.
62632total visits,44visits today