“நாடுஎன்ப நாடா வளத்தன; நாடுஅல்ல
நாட வளம்தரு நாடு” (739)
என்ற குறளுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் வண்ணம் வானுயர்ந்த கட்டடங்களும், கலைநுட்பமும் அழகும் நிறைந்த மாளிகைகளும், கண்கவர் வண்ணச் சோலைகளும், ஆறெனக் கிடக்கும் வீதிகளும், ஆல்ப்ஸ் மலை ஓரத்தில் அமைதிக்கு இடமாய் ஆரவாரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் தேம்ஸ் நதியின் எழில்மிகு காட்சியும், தொழில் வளமும், செல்வ வளமும், இயற்கைச் செழிப்பும், வாட்டமில்லாத மக்களின் முகமலர்ச்சியும் கொண்ட இலண்டன் மாநகரிலும், அழகுக்கு ஓர் அடையாளமாய் விளங்கும் பாரீஸ் நகரில் வாழும் தமிழ்ச் சான்றோர் பெருமக்கள் கம்பன் கழகம், சைவநெறிக் கழகம், நாட்டியப்பள்ளி போன்ற அமைப்புகளை உருவாக்கி தமிழ்க் கலை மற்றும் இலக்கியப் பணியாற்றி வருகின்றனர். அவ்வமைப்புகளின் அன்பழைப்பினை ஏற்று இருநாடுகளிலும் உலகத் திருக்குறள் பேரவையின் கிளைகளைத் தொடங்கி வைக்கின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
வையத்துள் வாழ்வாங்கு வாழ நன்னெறிகளை வகுத்தளித்துள்ள திருக்குறளினை உலகம் முழுதும் பரப்பிடும் உயர்ந்த நல்நோக்கம் கொண்டு தவத்திரு. குன்றக்குடி அடிகளார் சுவாமிகள் கட்டமைப்புடன் கூடிய ஒரு கூட்டமைப்பாக உருவாக்கியது ‘உலகத் திருக்குறள் பேரவை.’ அடிகளாரின் வழித்தடத்தினைப் பின்பற்றிச் செயல்பட்டு வரும் உலகத் திருக்குறள் பேரவைத் தலைவர் தவத்திரு. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்களின் வாழ்த்துக்களைப் பெற்று இலண்டன் நகரத்திற்கும், பாரீஸ் நகரத்திற்கும் 21.09.2012 அன்று வான்மழை வாழ்த்திட, பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் இலக்கிய அமைப்புகளின் நல்ல உள்ளங்கள் பாராட்டி மகிழ்ந்திடப் பயணமானேன்.
இலண்டன் மாநகரில் நமது தமிழ்ப் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் நிலைநிறுத்தும் வண்ணம் விளங்கும் உயர்கலையான பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சியில் 22.09.2012 அன்று சிறப்பு விருந்தினராக எனது மருமகன் டாக்டர் கி.ஷி.கணேசன் (வேந்தர், விநாயகா மிஷன்ஸ் பல்கலைக் கழகம்) அவர்களுடனும், எனது குடும்பத்துடனும் கலந்து கொண்டேன். இலண்டன் குரொய்ங்டன் பிலீட் அரங்கத்தில் நாட்டியாலயா கலை மன்றத்தினர் பிரமாண்ட நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்திருந்தனர். சுமார் 2000க்கும் மேற்பட்ட தமிழர்களும், நாட்டிய ஆர்வலர் களும், நாட்டிய விற்பன்னர்களும், நாட்டியக் கலைஞர்களும் கலந்து கொண்டு சிறப்பித்த நாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சியில் சிறப்பாகக் கலைப்பணியாற்றி வரும் நாட்டியப்பள்ளி அமைப்பாளர்களையும், கலைஞர்களையும் வாழ்த்திடும் நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்களின் வரவேற்பிலும், உபசரிப்பிலும் பிரமிப்பூட்டும் வகையில் நடைபெற்ற நடனங்களிலும் மகிழ்ந்த என் மனம் ஒரு மகிழ்ச்சியுரை ஆற்றிட உந்தியது.
“பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்” (975)
என்பது போல நாடு விட்டு நாடு வந்து நல்லதொரு கலைப்பணியைத் திறம்படச் செய்து தனக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்த்து வரும் நாட்டியப் பள்ளி நிர்வாக அன்பர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வணக்கம்.
நம் பாரத தேசத்தில் தோன்றியது இந்தப் பரதக் கலை; பரத முனிவரால் முதன்முதலாக உலகிற்கு அறிமுகப் படுத்தப்பட்டது என்பது வரலாறு. இந்த நாட்டியக் கலை தென்னிந்தியாவிற்கு உரியது. சிறப்பாக நம் தமிழ் நாட்டிற்கு உரியது. பாவமாகிய உணர்ச்சியுடனும், ராகமாகிய இசையுடனும், தாளம் சேர்த்து ஆடும் நடனம் பரத நாட்டியம் என்பர். அத்தகைய நாட்டியக் கலை மூலம் இளம்கலைஞர்கள் புராணக் கதைகளையும், இலக்கியக் காட்சிகளையும் படம்பிடித்துக் காட்டுவது போல் நவரசம் ததும்ப நடனமாடி மகிழ்வித்தனர். காண்பவர் உள்ளமெல்லாம் கொள்ளை கொண்டது. உங்களிடம் ஒரு வேண்டுகோளாக எனது விருப்பத்தைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன். இச்சிறந்த நாட்டிய நடனத்தில் திருக்குறளையும், அதன் கருத்துக்களையும் அமைத்து ஆடல்கலை மூலம் திருக்குறளை அனைவரும் அறியச் செய்தல் வேண்டும். திருக்குறளில் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழும் பரந்து உள்ளன. அறத்துப்பாலிலும், பொருட்பாலிலும், இன்பத்துப்பாலிலும் மனத்தைத் தொட்டு நெகிழ வைக்கும் காட்சிகள் வாழ்வியலுடன் தொடர்புடைய நல்ல கருத்துக்களைத் தெரிவிக்கும் கருவூலமாக உள்ளன. அவைகளை வடிவமைத்து வளம் சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இத்தகு சிறப்புப் பெற்ற நடனக்கலையின் மூலம் நமது பாரத நாட்டின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பொன்னெனப் போற்றிப் பாதுகாத்து வரும் நாட்டியாலயா கலைமன்ற நிர்வாகி திருமதி.ராகினி ராஜகோபால் அவர்களுக்கும், திரு.புதினம் இராஜ கோபால் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரியப்படுத்திக் கொள்கிறேன். தமிழ்மொழியையும், தமிழ்க் கலைகளையும், தமிழ்ப் பண்பாட்டையும் தமிழர்கள் எங்கிருந்தாலும் போற்றிப் பரவுவார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றி.”
இலண்டன் மாநகரில் நான் கலந்து கொண்ட இரண்டாவது நிகழ்ச்சி, ஈடு இணையற்ற எழில்மிகு நிகழ்ச்சி, உலகத் திருக்குறள் பேரவை மேலை நாடுகளில் வலம் வரத் தன்னைப் பதிவு செய்து கொண்ட நிகழ்ச்சி. மாபெரும் விழா இது என்றால் பொருந்தும்.
“துணைநலம் ஆக்கம் தரூஉம்; வினைநலம்
வேண்டிய எல்லாம் தரும்” (651)
துணை நலமும், வினைநலமும் பெற்று இலண்டன் மாநகரச் சான்றோர் பெருமக்கள் தாய்மொழித் தமிழையும், தமிழ் தந்த வள்ளுவத்தையும் அதன் சீர் இளமைத் திறம் வியந்து செயல் மறந்து போற்றும் வண்ணம் இலண்டன் சைவ நெறிக் கழகத்தினர் திருக்குறள் திருவிழாவாக ஏற்பாடு செய்திருந்தனர்.
முன்வினைப் பயனும், பெற்றோர்தம் நற்செயலும், அறிவிற்சிறந்த மூத்த அறிவுடையோர் வாழ்த்தும், தவமுடையார் தம் அருளும், என் வழியில் நிகழ்ந்திட்ட சிற்சில கொடைப் பயனும் என்னை இப்பெருவிழாவில் பங்கேற்க வைத்துள்ளன. இப்பெரும் புகழும், பெருமையும் உலகப் பொதுமறையாக விளங்கும் திருக்குறளினை வழங்கிட்ட உலகப்பெருங் கவிஞர் திருவள்ளுவருக்குக் கிடைத்திட்ட பெருமையாகக் கருதுகிறேன்.
“வள்ளுவன் தன்னை உலகினுக்கே & தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”
என்ற மகாகவி பாரதியின் மந்திரச் சொல்லுக்கு இங்குள்ள தமிழர்களாகிய நீங்கள் மகிமை தந்துள்ளீர்கள்.
திருக்குறளை அறியாதவர் யாருமில்லை. திருக்குறளில் இல்லாத கருத்துக்கள் ஏதுமில்லை. மேலும் மேலும் நுணுகி நுணுகி ஆராய்ந்தால் புரியாதவைகள் அனைத்தும் புரியும். நீதியோடும், நேர்மையுடனும், ஒழுக்கத்துடனும், சால்பு தவறாது வாழ்கின்ற தனிமனிதனைத் தெய்வ நிலைக்கு உயர்த்திட வழி காட்டுவது திருக்குறள்.
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்” (50)
என்பார் திருவள்ளுவர். ஆதிமறையாக ஈராயிரம் ஆண்டு களுக்கு முன்பாக, தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை யளிக்கும் வகையில் தமிழர்களை அடையாளம் காட்டிய நூல் திருக்குறள். சாதி, மதம், இனம், நிறம், நாடு, மொழி என்ற வேறுபாடு இல்லாத வாழ்வுக்கு வழி காட்டும் ஒரு வாழ்வியல் நூல் திருக்குறள். உலக மக்கள் அனைவரும் பொது மறை எனப் போற்றுகின்ற நூல் திருக்குறள். இது ஞானச்செறிவு கொண்டது, பழமைச் சிறப்புப் பெற்றது, கற்க கற்கப் புதுமை தர வல்லது என்பதை இலண்டன் மாநகர்த் தமிழர்கள் உணர வல்லவர்கள்.
ஆகையினால் தான் ஞானமளந்த மேன்மைத் தெய்வத் தமிழுக்கு வளம் சேர்க்கும் வண்ணம் கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்குக் கழகம் என்றும், சைவ நெறிக்கழகம் என்றும் உருவாக்கி தமிழையும், தமிழ் புராண இதிகாசங்களையும், இலக்கியங்களையும் போற்றிப் பாதுகாத்து வருகின்றீர்கள். அந்த வரிசையில் தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கும், அவர் வடித்துத் தந்த ஓங்கு ஒலிநீர் ஞாலத்து இருள் அகற்றும் திருக்குறளுக்கும் ஒரு பேரவை அமைத்துச் செயல்படத் தொடங்கியிருப்பது பாராட்டுக்கு உரியது. உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
தமிழுக்குக் கதி ‘கம்பனும் திருவள்ளுவரும்’ என்று சொல்வது போல் கம்பருக்குச் செய்யும் நன்றியினைப் போல் திருவள்ளுவருக்கும் நன்றி செய்தல் வேண்டும் என்பது எனது பேரவா.
“செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது” (101)
உலக மக்கள் செம்மையுற்று, இன்பமுற்று வாழ நமக்கு முன் இருந்த சான்றோர்கள் தமிழுக்குச் செய்து தந்த இலக்கியக் கொடைகளுக்குத் தமிழர்களாகிய நாம் செய்யும் நன்றிக் கடன் இதுவே.
“பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது” (103)
தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு என்ற வகையில் அது சிறப்புப் பெறும்.
“முன்னைப் பழமைக்கும் முன்னைப் பழமையதாய்
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியதாய்”
விளங்கக்கூடியது நமது தமிழ்.
தொன்மைச் சிறப்பும், இலக்கண வளமும், இலக்கிய நயமும் கொண்ட நமது தமிழ் மொழி செம்மொழி என்ற சிறப்புப் பெற்றது. உலகத்திற்கு முதன்முதலில் முழுமையான நாகரிகத்தையும், பண்பாட்டையும், வாழ்க்கை முறைகளையும் வகுத்துக் கொடுத்தவர்கள் தமிழர்கள். ஒன்றுபட்டு உலகம் வாழ்ந்திட
“யாதும் ஊரே யாவரும் கேளிர்”
என்ற ஒரு மந்திரச் சொல்லுக்குள் உலகை மயங்க வைத்தவர்கள்.
“தீதும் நன்றும் பிறர் தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன”
உலகில் எல்லோரும் ஒன்று தான். ஒருவருக்கொருவர் உறவுடையோர். மக்களிடயே வேறுபாடில்லை. தீமையும், நன்மையும், வருந்துதலும், மகிழ்தலும் பிறர் உண்டாக்கி நம்மை அடைவன அல்ல, நமக்கு நாமே உண்டாக்கிக் கொள்வன என்பதை எடுத்துக் காட்டி வாழ்க்கை என்பது நம்பிக்கையில் தான் இருக்கிறது, அதுவும் உன் கையில் தான் இருக்கிறது என்பதை உலகிற்கு உணர்த்திக் காட்டியவன் தமிழன். வேறுபாடு இல்லாமல் எல்லோரும் சமம் என்பதை ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற குறளின் மூலம் உலகில் தோன்றும் எல்லா உயிர்களும் ஒன்று என்பதை உணர்த்திக் காட்டியவர் திருவள்ளுவர். இது போன்ற வரலாற்றுத் தடங்களும், இலக்கியப் பெருமைகளும் நமக்கு இருந்தாலும், அவைகளைக் கட்டிக்காக்கும் பண்புடையவர் களாகப் போற்றிப் பாதுகாத்து, பயன் கருதாது பாடுபடக் கூடியவர்களாக உலகம் முழுவதும் வாழுகின்ற தமிழர் களாகிய நீங்கள் இருப்பதால்தான் இன்னும் தமிழ் காக்கப்பட்டு வருகிறது.
“பண்புஉடையார்ப் பட்டுஉண்டு உலகம்; அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்” (996)
தமிழகத்தில் ஆலமரமாய் வளர்ந்து வரும் தமிழ்த் தருவிற்கு அதன் கிளைகளாகச் செழித்து உலகம் முழுவதும் பரந்து பரவியிருக்கும் தமிழர்களாகிய நீங்கள் தான் அதன் வேருக்கு நீரூற்றி வளர்க்கக் கூடியவர்களாக இருக்கின்றீர்கள். பல சூழ்நிலைகளில் நாடு, நகரம் இழந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் உலகம் முழுவதும் வாழ்ந்து வருகிறார்கள். குறிப்பாக, இலண்டன், பாரீஸ் போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும் கண்ணெனப் போற்றிப் பாதுகாத்து வருகிறார்கள் என்று சொல்லலாம்.
‘கேட்டினும் உண்டு ஓர் உறுதி’ போல் அமைதியான வாழ்வில் காலக் கொடுமையினால் கேடுகள் பல சூழ்ந்த போதும் அதில் ஒரு நன்மையாக உலகம் முழுவதும் தமிழர்கள் சென்று வாழும் சூழல் உருவாகிவிட்டது. வெங்கொடுமைச் சாக்காட்டில் போராடி தாங்கொண்ணாத் துயரத்துள்ளும் தமிழர்கள் தங்களின் கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும் உயர்ந்து வருகின்றனர். அந்தச் சூழ்நிலையிலும் தமிழ்ப் பண்பாட்டையும், மொழி உணர்வையும் விட்டு விடாது போற்றிப் பாதுகாத்து வருகின்றீர்கள். வேறு பல மொழிகளைக் கற்றிருந்தாலும், தாய்மொழியாம் தமிழைப் புறக்கணித்துவிடாது மதித்து தாய்ப்பால் போல் அதனை அனுபவித்தும், பேசியும், எழுதியும், தம் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுத்தும், பயிற்றுவித்தும் வருகின்றீர்கள் என்பதைக் காணும் போது எனது உள்ளம் உவகையுடன் பெருமிதமும் கொள்கிறது. உங்கள் உள்ள உறுதியும் உயர்வான வாழ்க்கை முறையும், நீங்கள் காட்டும் அன்பும், பாசமும், பயன்கருதாப் பணிவிடையும், தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் கொண்டுள்ள பற்றும் தான் எங்களைப் போன்றவர்கள் மேலை நாடுகளுக்கு வருகை தந்து சிறப்புப் பெறுகின்ற வாய்ப்புகளை உருவாக்கி யுள்ளன. உங்களைச் சந்தித்த பின்பு தமிழ் மொழியும், பண்பாடும் தமிழர் நாகரிகமும் நிலைத்து நின்று புகழ் மணக்கும் என்ற நம்பிக்கை என் மனதில் சிம்மாசனம் போட்டுக் கொண்டது. உங்கள் அனைவருக்கும் எனது சார்பாகவும், உலகத் திருக்குறள் பேரவை சார்பாகவும் நன்றியினையும், வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”
இலண்டனிலும், பாரீஸிலும் நான் கலந்து கொண்ட முத்தாய்ப்பான மூன்று நிகழ்ச்சிகளில் மூன்றாவது நிகழ்ச்சி பாரீஸ் நகரில் உலகத் திருக்குறள் பேரவையைத் தொடங்கி வைத்த நிகழ்ச்சி. தமிழன்னை அணிந்திருக்கும் மகுடத்தில் ஒளிரும் மாணிக்கம் போல் பாரீஸ் நகரில் திருக்குறள் ஒளிர்ந்து மிளிர்ந்தது எனச் சொல்லலாம்.
பிரான்சு கம்பன் கழகம் ஏற்பாடு செய்திருந்த உலகத் திருக்குறள் பேரவை தொடக்க விழாவிற்குக் கம்பன் கழகத் தலைவர் கவிஞர் கி.பாரதிதாசன் அவர்கள் தலைமை ஏற்றார். அவர் தமது தலைமை உரையில், “உலகத் திருக்குறள் பேரவையின் பொதுச் செயலாளரும், மதுரைக் கம்பன் கழகத்தின் துணைத் தலைவருமான திருக்குறள் செம்மல் திருமிகு.ந.மணிமொழியனார் அவர்கள் தமது அருமைத் துணைவியாருடனும், அன்பிற்கினிய மகள்களோடும் (டாக்டர் அனுராதா கணேசன், கவிதா ரெங்கநாதன்), சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, பிரான்சு உலகத் திருக்குறள் பேரவை பலகையைத் தம் பொற்கரங்களால் திறந்து வைத்து எனக்கும், செயலாளர் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ அவர்களுக்கும், பொருளாளர் திருமிகு.தணிகாசலம் அவர்களுக்கும், மகளிரணித் தலைவி கவிஞர் சிமோன் இராசேசுவரி அவர்களுக்கும், இளையோர் அணிச் செயலாளர் செல்வின் கி.தணிகைவேல் அவர்களுக்கும் பொன்னாடை அணிவித்து மகிழ்ந்ததைப் பெருமையாகக் கொள்கிறோம்.
திரு.மணிமொழியனார் அவர்கள் மிகச்சிறந்த கல்வியாளர், நூலாசிரியர், தொழிலதிபர். எல்லாவற்றுக்கும் மேலாக திருவள்ளுவர் காட்டும் வாழ்வியல் நெறிகளின் படி தமது வாழ்க்கையை நடத்திச் செல்லும் தூய்மையான, உயரிய பண்பாளர். உலக நாடுகள் பலவற்றுக்கும் சுற்றுப்பயணம் செய்து திருக்குறளின் பெருமைகளையும், சிறப்புக்களையும் மக்களிடையே பரப்புவதற்குப் பாடுபட்டு வருபவர். காட்சிக்கு எளியராகித் தம் இயல்பான உரையாடலில் கூட குறட்பாக்களையே எடுத்துக் காட்டிப் பேசும் தகைமையாளர். யார் தம்மிடம் எந்த சந்தேகங்களை எழுப்பினாலும், வள்ளுவரின் வழி நின்றே சரியான பதிலைக் கனிவாகக் கூறுபவர். இத்தகைய பெரும்பேறுடைய பெருமகனார் பிரான்சு கம்பன் கழகம் ஏற்பாடு செய்த விழாவில் கலந்து கொண்டு குறளரங்க நிகழ்வுக்குத் தலைமையேற்று சிறப்பித்த பெருந்தன்மைக்குப் பெரிதும் கடப்பாடுடையோம். அவர்களுக்கு பிரான்சு கம்பன் கழகத்தின் சார்பாகவும், குறளரங்கம் அமைத்துத் தந்த மகளிரணி சார்பாகவும் இனிய நல்வாழ்த்துக்களையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
திருக்குறள் செம்மல் அவர்களின் வருகையினாலும், அவரோடு கலந்துரையாடி மகிழ்ந்த அனுபவத்தினாலும் ஒரு நல்ல பயனாக பிரான்சு நாட்டில் பன்னாட்டுத் தமிழறிஞர்களை அழைத்து உலகத் திருக்குறள் மாநாட்டை நடத்திட வேண்டும் என்ற ஆர்வம் எழுந்துள்ளது. திருக்குறள் செம்மல் திரு.ந.மணிமொழியனார் அவர்களின் மேற்பார்வையில் அவரது ஆலோசனைகளைப் பெற்று, மாநாடு வரும் 2013 ஜூன், ஜூலை மாதங்களில் நடத்துவது எனவும் தீர்மானித்துள்ளோம் என்பதைத் தெரியப்படுத்திக் கெண்டு திருக்குறள் செம்மல் திரு.ந.மணிமொழியனார் அவர்களைப் பேருரையாற்றும்படி கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டார்.
பிரான்சு கம்பன் கழகத்தின் உலகத் திருக்குறள் பேரவைக் கிளையைத் தொடங்கி வைக்கின்ற இத்தகு எழுச்சி மிகு விழாவில் உரையாற்றுகின்ற வாய்ப்பினை வழங்கிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி சொல்லி எனது உரையினைத் தொடங்கினேன். “வேற்று மொழியில் பேசும் ஒரு நாட்டில் இருந்து கொண்டு நம் தாய்மொழியாகிய தமிழை மறவாமல் பாரீஸ் நகரின் பல்வேறு பகுதியிலிருந்து தமது வேலை, காலநிலை போன்றவற்றைப் பொருட்படுத்தாமல் ஆண்களும், பெண்களும், குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளீர்கள். இது போன்ற நிகழ்வுகளைப் பார்க்கும் போது என்னை அறியாமலே எனக்குள் ஒரு வியப்பும், பெருமிதமும் உண்டாகின்றன. ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் இலக்கணத்தோடு மரபு கவிதை புனையும் ஆற்றலைப் பெற்றிருக்கும் அறிவார்ந்த இந்த பிரான்சு கம்பன் கழகத்தினர் உலகத் திருக்குறள் பேரவையையும் உருவாக்கி இருப்பது முற்றிலும் பொருத்தமுடையதே. இந்த விழாவில் கலந்து கொண்டு உலகத் திருக்குறள் பேரவையின் பெயர்ப் பலகையினைத் திறந்து வைத்தது உள்ளபடியே எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சியைத் தருகிறது. அதற்கு மேலாக மாநகர்க்குக் கோபுரம் போல் இந்த விழாவிற்கு முத்தாய்ப்பாக அமைந்த திருக்குறள் அரங்கத்தில் உங்களுடன் பங்கேற்று குறள் நுட்பங்களைப் பரிமாறிக் கொண்டதை மறக்க முடியாத நிகழ்வாகக் கருதுகிறேன்.
மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும் எல்லாக் காலங்களிலும், எல்லா நிலைகளிலும், எல்லா விதங்களிலும் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை உணர்த்திடும் வழிகாட்டியாகத் திகழ்வது திருக்குறள்.
“கற்க கசடறக் கற்பவை; கற்றபின்
நிற்க அதற்குத் தக” (391)
என்பதற்கு ஏற்ப திருக்குறளை நன்கு கற்று, கற்றதற்குத் தகுந்தாற் போல நடந்தாலே போதும், நம் வாழ்க்கை இன்னல்கள் இன்றிச் செம்மையடையும். அதனால் தமிழர் களாகிய நாம் உலகப் பொதுமறையாக விளங்கக்கூடிய திருக்குறளை நன்கு கற்பதோடு ஓதி உணர்ந்து பிறர்க்கு உரைத்து உலகமெங்கும் பரப்பி உலக மாந்தர் அனைவரும் பயனுறப் பாடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். ஏற்றமிகு செயலை எதிர்காலத் தலைமுறையினருக்கு வழிகாட்டும் வண்ணம் செயல்படுத்திக் காட்டிய உங்கள் அனைவருக்கும் எனது நன்றி கலந்த வணக்கத்தையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனது உரையினை நிறைவு செய்த பின் நடைபெற்ற பாராட்டும், புகழுரையும், பரிசளிப்பும் தமிழர் பண்பாட்டைப் பறைசாற்றின. கூடியிருந்தோர் ஆனந்தக் களிப்பு எய்தினர். கரவொலியால் அரங்கமே அதிர்ந்தது. இத்தனை பெருமையும், புகழும் திருவள்ளுவருக்கே!”
* இலண்டன் மற்றும் பாரீஸ் நாடுகளில் உலகத் திருக்குறள் பேரவையின் கிளைகளைத் தொடங்கி வைத்துத் திருக்குறள் செம்மல் ந.மணிமொழியன் ஆற்றிய சிறப்புரை.
6581total visits,1visits today