பிரமிக்க வைத்த பிராங்க்பர்ட்!

Image result for frankfurt

 

சென்னையிலிருந்து பம்பாய் சென்று விமானத்தில் ஏறுவதாக இருந்த எங்கள் பயணத் திட்டம் மாறுதலுக்கு உள்ளாயிற்று. தொலைத் தொடர்பு வசதிகள், போக்குவரத்து ஏற்பாடுகள் எல்லாம் விஞ்ஞான பூர்வமாக வளர்ந்து வருகின்றன; என்றாலும், விமானப் பயணம் மட்டும், கடைசி வினாடி வரை ஒற்றையா இரட்டையா போட்டுப் பார்க்கும் பந்தயமாகவே நீடிக்கிறது. சென்னையிலிருந்து நாங்கள் பம்பாய் செல்லவேண்டிய விமானம், எங்கோ பறந்து போய்விட்டது! எங்கள் வருகைக்காக பம்பாய் விமான நிலையத்தில் காத்திருந்த அன்பர்களை ஏமாற்றி விட்டு, நாங்கள் இங்கிருந்தே வேறு திசையில் பறக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சென்னையில் இருந்து கொழும்பு போய்ச் சேர்ந்த நாங்கள் சிறிது நேரம் கூடத் தரை இறங்க அனுமதிக்கப்படவில்லை. எங்கள் விமானம் நேரடியாக நியூயார்க்கிற்குப் போகாதாம். மேற்கு ஜெர்மனியில் உள்ள பிராங்க்பர்ட் சென்று, அங்கு வேறு விமானத்தில் மாறிச் செல்ல வேண்டுமாம்….!

தன் நாட்டிலுள்ள பன்னாட்டு விமானத் தளத்தை நவீன வசதியுடையதாக்கும் முயற்சியில் ஒவ்வொரு நாடும் போட்டியிட்டு வருகிறது. கிழக்கே சிறந்த விமானநிலையம் எனும் பெயர் நிலைத்திட சிங்கப்பூர் அரசு நாள்தோறும் செய்து வரும் புதுமைகளைக் கண்டு அதிசயித்திருந்த எனக்கு, பிராங்க்பர்ட்டைப் பார்க்கும் வாய்ப்பு, இதோ வரப்போகிறது.

அமெரிக்காவின் கென்னடி விமான நிலையம், லண்டனில் ஹீத்ரு ஏர்போர்ட் – இந்த வரிசையில் ஜெர்மனியின் பிராங்க்பர்ட் முதன்மை பெற்று விளங்குகிறது. (புது தில்லி இந்திராகாந்தி விமான நிலையம் இந்த நிலையை எட்டிப் பிடிக்க எத்தனையோ ஆண்டுகள் ஆகக்கூடும்!)

பிராங்க்பர்ட் போய்ச் சேர்ந்தோம். அது கனவுலகம் போலக் காட்சியளித்தது. அந்த விமானத் தளம் தான் எத்தனை அழகு? எத்தனை பெரிது! ஒரே சுறுசுறுப்பும் பரபரப்பும். நம் ஊர்க்காரர்களைப் போல – எதையும் மெதுவாக- சாவதானமாகச் செய்ய அந்த நாட்டுக்காரர்களுக்குத் தெரியவில்லை.

ஆட்கள் மட்டும்தானா? விமானங்களும்தான் அவசரப்படுகின்றன. ஒரே சமயத்தில் பல விமானங்கள் தரை இறங்குகின்றன; பல விமானங்கள் இறக்கை விரிக்கின்றன. வெளி இரைச்சல் உள்ளே கேட்காதபடி பயணியர் தங்குமிடங்களைக் குளிர்பதன வசதியோடு சொகுசு மாளிகையாகச் சமைத்துள்ளார்கள். விமானத்தில் இருப்பதை விட விமான நிலையத்தில் இருப்பது அதிக மகிழ்ச்சி தருகிறது. ஜெர்மானியரின் திறமைக்கெல்லாம் எடுத்துக்காட்டு – பிராங்க்பர்ட் விமானத்தளம். ‘இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால்’ எனத் திருவள்ளுவ மாலை, குறளுக்குச் சூட்டிய புகழாரத்தை அப்படியே இந்த நிலையத்திற்கும் சூட்டிவிடலாம்!

பிராங்க்பர்ட்டிலிருந்து நியூயார்க்கிற்குத் தொடர் பயணமாகப் புறப்பட வேண்டிய இணைப்பு விமானம் அங்கு வந்து சேரவில்லை. மறுநாள் தான் புறப்பட முடியும் எனச் சொல்லிவிட்டார்கள். பயணிகளை பிராங்க்பர்ட் நகரின் அழகிய பெரிய விடுதியில் தங்கவைத்தார்கள். டாக்சியில் நகரைச் சுற்றிப்பார்க்க ஏற்பாடு செய்திருந்தார்கள். தவிர்க்கவியலாத சில தாமதங்களால் வாழ்வில் நேரிடும் எதிர்பாராத நன்மைகளும் உண்டு என்பார்கள். ஜெர்மனியைச் சுற்றி ஒரு நாள் கண்ணோட்டம் விட எங்களுக்கும் அப்படி ஒரு நல்ல வாய்ப்பு ஏற்பட்டது.

சென்ற உலகப்போரின் தொடக்கத்தில் கையோங்கி நின்று முடிவில் தளர்ந்து தோற்ற நாடுகள் ஜெர்மனியும் ஜப்பானும். இவ்விரண்டும் மீண்டும் தலைதூக்கி வல்லரசு நாடுகள் ஆகிவிடா வகையில், போரில் வெற்றிபெற்ற நேச நாடுகள் பலவகையிலும் இவற்றை அமுக்கி வைத்தன. ஹிரோஷிமா, நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டுகளும், அதனைத் தொடர்ந்த அழிவுகளும் ஜப்பானை நிர்மூலமாக்கி விட்டன. மேற்கு-கிழக்கு ஜெர்மனி என நாட்டைக் கூறு போட்டதோடு விடாமல், தலைநகர் பெர்லினுக்கு நடுவிலும் குறுக்குச் சுவர் எழுப்பி, இடைவிடாக் கண்காணிப்பின் மூலம் ஜெர்மனி மீண்டும் எழுந்து விடாமல் அடக்குமுறைகள் ஏவப்பட்டன. இவ்வாறு முற்றிலும் முடமாக்கப்பட்ட போதிலும் இந்த இரு நாடுகளும் விரைவில் புத்துயிர் பெற்று மீண்டும் விசுவரூபம் எடுக்கத் தொடங்கிவிட்டன. ஜெர்மனியை மறுபடியும் ஒரே நாடாக இணைத்துக் காணவும் பிளவுபடுத்திய பெர்லின் சுவரைத் தகர்த்துத் தள்ளவும் மக்கள் ஒருமனப்பட்டுப் போராடத் தொடங்கினர். சீனத்து நெடுஞ்சுவர் அந்த நாட்டின் புராதனப் பெருமை பேசுவது போல, எருசலேம் அமைதிச் சுவர் இஸ்ரேலிய மக்களின் செயலுறுதிக்கு ஊக்கம் தருவது போல, இடிபட வேண்டிய பெர்லின் சுவர் ஜெர்மானிய மக்களின் தங்கு தடையற்ற எதிர்கால வளத்திற்குக் கட்டியம் கூறிவந்தது.

அது பிராங்க்பர்ட் நகரின் வளர்ச்சியை, வளமான கட்டமைப்பைப் பார்க்கும்போதே நொடியில் புலனாயிற்று. மேற்கு ஜெர்மனிக்குப் பெருமைத் திலகமாக விளங்கும் பிராங்க்பர்ட், ஐரோப்பாவிலேயே பெரிய விமான நிலையம் எனப் பிரசித்தமாகி இருந்தது.

டாக்சியில் ஊரைச் சுற்றிவந்த ஒரு நாள் பொழுதிற்குள் நாங்கள் அறிந்த வியத்தகு விவரங்கள் இவை:-

எந்தப் பொருளின் விலைவாசியும் உயராத இடம் அது. நம்நாட்டில் அடிக்கடி உயரும் பெட்ரோல் கூட அங்கு அப்படி விலை உயர்வதில்லையாம்! பிராங்க்பர்ட்- கனரகத் தொழில் கேந்திரம் மட்டுமின்றி வங்கித் தொழில் மையமாகவும் விளங்குகிறது.

சர்வ தேச வங்கிகள் வரிசையாக அழைக்கும் ஒரு பெரிய வீதி. அதில் மூன்று நான்கு பர்லாங்கு தூரத்தை நடைபாதைக்காகவே ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். அந்தப் பகுதியில் கார் முதலிய வாகனங்கள் செல்ல அனுமதிக்கப் படுவதில்லை. மேலும் டிரைவர்கள் என ஒரு தனிவகைத் தொழிலாளர் அங்கு இருப்பதாகத் தெரியவில்லை. அவரவர் கார்களை அவரவரே ஓட்டிக் கொள்கிறார்கள். வெளியூர்ப் பயணிகளுக்காகக் காரை ஓட்ட அமர்த்தப்பட்டுள்ள டிரைவர்கள் பழகும் விதம் நம் நெஞ்சைத் தொடுகிறது. உழைப்பும் கண்ணியமும் ஒன்று சேர்ந்துவிட்டால் ஒரு நாடு உயர்ந்தே தீரும் என்பதற்கு ஜெர்மனியில் நாங்கள் கண்ட ஒரு நாள் தரிசனமே போதுமானது!

Image result for frankfurt tamil

 

பிராங்க்பர்ட்டிற்குப் பிரியா விடை

பிராங்க்பர்ட்டைவிட்டுப் பிரிய மனமில்லாமலேயே மறுநாள் விமானத்தில் புறப்பட்டோம். அந்த விமானத்தில் லண்டன் சேர்ந்து அங்கிருந்த வேறொரு விமானத்தில் நியூயார்க்கிற்குப் போக வேண்டும்.

அது புகழ்பெற்ற பானம் (றிகிழிகிவி) விமானம். ராஜாளிப் பறவையைப் போன்ற எடுப்பான தோற்றத்தோடு இறக்கை விரித்து நிற்கும் அந்த விமானத்தைப் பார்ப்பதே ஆச்சரியமான ஓர் அழகு. அந்தச் சொகுசு விமானத்தில் ஏறியமர்ந்தவுடன் அமெரிக்க நாட்டைப் பற்றிய சிறு கையேட்டை ஒவ்வொரு பயணியின் இருக்கைப் பையிலும் வைத்திருந்தது கண்ணில் பட்டது; கருத்தை ஈர்த்தது.

உலகச் சுற்றுப் பயணம் என்பதை உல்லாசச் சுற்றுலாவாகக் கருதும் மனோபாவத்திலிருந்து விடுபட்டு, அதை அனுபவ ரீதியான அறிவு வளர்ச்சி தரும் கல்வியாக்கிட இத்தகைய துண்டுப் பிரசுரம் மிகவும் உதவுகிறது. பெரிய தொழில் நிறுவனங்களின் விளம்பர உதவியோடு வெளியிடப்பெறும் இப் பிரசுரங்கள், சென்று  சேரும் நாட்டைப் பற்றியதொரு சிறு செய்திக் களஞ்சியமாகவே விளங்குகின்றன.

அமெரிக்கா! இன்று எந்நாட்டவராயினும் அமெரிக்காவைப் பற்றிச் சிறிதளவேனும் கேள்விப்படாமல் இருக்கவே முடியாது. மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் புதிய உலகமாகக் கண்டறியப்பட்ட இது. இன்று உலகையே ஆட்கொள்ளும் (ஆட்டி வைக்கும்!) அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது. இவ்வளர்ச்சிக்குப் பெரிதும் காரணம் எல்லையற்ற அதன் நிலப்பரப்பே ஆகும்; பொருளாதாரச் செழிப்பே ஆகும்.

“கிடக்கும் பெரிய கடல் கண்டாய் & இதன்

     கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா…”

என்று நம் பாரதிக் கவிஞன் நம் நாட்டு எல்லையைப் பாடியது ஒருவகையில் அப்படியே அமெரிக்காவுக்கும் பொருந்தும். நமது கிழக்கிலும் மேற்கிலும் பெரிய கடல்கள், அமெரிக்காவின் கிழக்கேயும் மேற்கேயும் மாபெரும் (பசிபிக் அட்லாண்டிக்) சமுத்திரங்கள்.

அமெரிக்கா எனும் மிகப்பெரிய கண்டத்தில் ஒரு பகுதிதான் அமெரிக்க ஐக்கிய நாடுகள். இதன் 50 மாநிலங்களில் தூரத்தே உள்ள ஹவாய்த் தீவுகளும், தொலைவில் உள்ள அலாஸ்க்கா பனிப்பிரதேசமும் அடங்கும். வடக்கே கனடா, தெற்கே மத்திய அமெரிக்க நாடுகள். 25 கோடி மக்கள் வாழும் இந்நாட்டவர் – பல்வேறு இன, மொழிக் கலப்பினர்கள். குடியேற்ற நாடாகத் தொடங்கிய அதைப் புகழ்க் கொடி வீசும் வல்லரசாக ஆக்கிய ஜார்ஜ் வாஷிங்டன், ஆபிரகாம் லிங்கன், உட்ரோ வில்சன், ரூஸ்வெல்ட், ஐசன் ஹோவர். கென்னடி முதலிய அரசியல் மேதைகள், ஆட்சிப் பொறுப்பேற்று அகிலச் செல்வாக்குப் பெற்றதைக் கண்டு பெருமை கொண்டவர்கள்.

நமக்கும் அவர்களுக்கும் வரலாற்று ரீதியான இன்னொரு ஒற்றுமையும் உண்டு., கொலம்பசால் கண்டுபிடிக்கப்பட்ட இப்பெரிய நிலப்பரப்பில் இங்கிலாந்து நாட்டவரும் இதர ஐரோப்பிய நாட்டவரும் நாளடைவில் குடியேறினர். அப்படிக் குடியேறியவர்கள் ‘ஐக்கிய நாடுகள்’ எனும் பெயரில் 13 இராச்சியங்களை இங்கிலாந்து ஆட்சிக்கு உட்பட்டதாக அமைத்துக் கொண்டார்கள். வாஸ்கோட காமா ‘கண்டுபிடித்தபின்’ இங்கு வந்து வாணிப ஆட்சி புரிந்து, நயவஞ்சகத்தால் நம்மை அடிமைகொண்ட ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நாம் சுதந்திரப் போரை நடத்துவதற்கு இருநூற்றாண்டுகளுக்கு முன்னரே இங்கிலாந்து ஆட்சிக்கு எதிராகச் சுதந்திரப் போர் நடத்தி வாகை சூடினர். ஐக்கிய நாடுகள், சுதந்திர அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆயின; ஜார்ஜ் வாஷிங்டன் முதல் ஜனாதிபதி ஆனார். அங்கு மீண்டும் ஓர் உள்நாட்டுச் சுதந்திரப் போர் உருவாயிற்று. நாட்டின் விவசாய, தொழில் வளர்ச்சிக்கெல்லாம் முதுகெலும்பாய் இருந்த நீக்ரோக்களை அடிமைகளாக நடத்திய மடமையை எதிர்த்துப் போர் மூண்டது. கடும் எதிர்ப்புகளை வென்று, ஆபிரகாம் லிங்கன், கருப்பர்களுக்கு விடுதலை வழங்கினார். அது போல, நம் நாட்டில் ஆண்டாண்டு களாய் ஒடுக்கி, ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த மக்கள் சமூகச் சம நீதி கோரி இரண்டாம் உரிமைப் போர் நடத்துகின்றனர்.

“பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா

     செய்தொழில் வேற்றுமை யான்”      (972)

என்ற ஆயிரமாண்டுக்கு முற்பட்ட சிந்தனையை நாம் இப்போதுதான் சட்ட முறைப்படி நடைமுறைப்படுத்த முற்பட்டுள்ளோம்.

ஆயிரக்கணக்கான மைல்தூரம் கடல் சூழ்ந்து தனித்திருந்த இப்பெரிய நிலப்பரப்பை ஐநூறு ஆண்டு களுக்கு முன் கண்டுபிடித்த கொலம்பஸ்தான் இந்தியாவையே கண்டுபிடித்து விட்டதாகக் கருதினார். அமெரிக்கோ வெஸ்ப்பூசியஸ் எனும் இத்தாலிய நாட்டாய்வாளர், இதைப் ‘புது உலகம்’ எனப் பின்னர் கண்டு அறிவித்தார். அவரது பெயரே அமெரிக்கா எனச் சூட்டப்பட்டது. அது முதல் அமெரிக்கா புது உலகம் மட்டுமாக அல்லாது – உலகிற்கு ஒரு புதிர் உலகமாகவும் விளங்குகிறது.

வேளாண்மைச் செழிப்பும் தொழில் மேம்பாடும் இந்நாட்டை என்றென்றும் புதுமை உலகாகப் பேணிவருவது ஒரு புறம் இருக்க, அந்நாட்டவரின் தொழில் நுட்பஅறிவும், தொய்வில்லாத கடின உழைப்பும் பிறநாடுகளுக்குச் சவால்விடும் புதிர் நாடாக மறுபுறத்தே நிலைநிறுத்தி வருகின்றன.

“பிறப்பால் அனைவரும் சமம். எத்தொழில் செய்தாலும் செருப்புத் தொழிலானாலும், சிகரெட் தொழிலானாலும் – தொழிலில் சிறுமை பெருமையில்லை. செப்பமாகவும் நுட்பமாகவும் லாபம் தரும் வகையிலும் பெரிதாகவும் விரிவாகவும் செய்யும் திறமையால் வேறுபாடு உண்டு. தொழிலில் பெரிய முயற்சியைத் திறமையுடன் செய்பவர் பெரியவர் ஆகிறார். சிறிய முயற்சிகூடச் செய்யாது திறமையற்றிருப்பவர் சிறியவர் ஆகிறார். உழைப்பும் திறமையும் வலிமையும் வாழ்வில் வளமை சேர்க்கும் என்பதே அமெரிக்க வாழ்க்கை.

இது அமெரிக்காவுக்கு மட்டுமே கிட்டியுள்ள அற்புத வரமா? அப்படியும் சொல்லிவிட முடியாது. வையத் தலைமை பெற்றே தீர வேண்டும் என்ற அந்நாட்டவரின் மனோபாவமும் அதற்கேற்ற அறிவியல் பூர்வமான அணுகுமுறையும்தான் என நண்பர்கள் ஏற்கெனவே எழுதியிருந்தார்கள். அதை நேரில் பார்க்க நியூயார்க் நகரை இதோ… நெருங்கிவிட்டோம்!

அமெரிக்காவிலேயே மிகப்பெரிய நகரான நியூயார்க் விமானத்தளத்தின் தரையைத் தொடும் முன்னர், நகர முகப்பில் நின்ற சுதந்திரச் சிலை எங்கள் கவனத்தை ஈர்த்தது. 305 அடி உயரமுள்ள இச்சுதந்திரச் சிலையை நிறுவியதன் மூலம், தம் நாட்டின் விழுமிய இலட்சியத்தை வருவோர்க்கெல்லாம் சொல்லாமல் சொல்லும் உத்தி புலனாயிற்று. நகரின் நடுவே உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடம் (102 மாடிகளாம், 1250 அடி உயரமாம்!) தாழப்பறக்கும் போது தலையை உயர்த்திப் பார்க்கும் வகையில் நிமிர்ந்து நிற்கிறது. இவற்றைப் போலவே நம்நாட்டின் தெற்கே வாழும் குமரிக் கடலில் விவேகானந்தர் மண்டபத்தை எழுப்பியதும், வான்புகழ் வள்ளுவர்க்கு விண்தொடும் சிலையை நிறுவத் திட்டமிட்டிருப்பதும் என் நினைவில் இணைகோடுகளாயின; புதிதாக வருவோர்க்குத் தன் நாட்டின் பண்புத் திறத்தை எடுத்துக் காட்டும் கலைப்படைப்புக்கள் வேண்டும் என்ற கருத்தை நிலைப்படுத்தின.

26.5.89 அன்றே, பயணத்திட்டப்படி நாங்கள் நியூயார்க் போய்ச் சேர்ந்திருக்க வேண்டும். பிராங்க்பர்ட்டில் ஏற்பட்ட தாமதம் தொடர்கதையானதால் நாங்கள் 27.5.89 காலையில்தான் வந்து சேர இயலும் என்று பிராங்க்பர்ட்டி லிருந்தே நண்பர் சுலைமான் இல்லத்திற்குத் தகவல் அனுப்பினோம். ஆனால் நண்பர் அதற்கு முன்னரே எங்களை வரவேற்க விமான நிலையம் போய்விட்டார். அங்கே காத்திருந்துவிட்டு வெறுமனே திரும்பியிருக்கிறார்.

மறுநாள் காலையில் கென்னடி ஏர்போர்ட்டில் நாங்கள் இறங்கிய சேதி அறிந்து நண்பர்கள் அங்கு திரளாக வந்துவிட்டனர். நண்பர்களை உற்சாகத்துடன் அறிமுகம் செய்துகொள்ள முடியாத அதிர்ச்சிச் செய்தி ஒன்று அப்போது வந்தது. எங்களுடன் வரவேண்டிய உடைமைகள் நாங்கள் பயணம் செய்த அதே விமானத்தில் ஏற்றப்படவில்லையாம். பெட்டிகளை இன்னொரு விமானத்தில் ஏற்றிவிட்டார்களாம். “அவை உங்கள் விலாசத்திற்குப் பத்திரமாக வந்து சேரும்… கவலைப் படாமல் போங்கள்…” என்று விமான நிலைய அதிகாரிகள் பல தடவை கூறிய போதிலும்…. எங்களுக்குக் கால்கள் நகரவில்லை…. அவநம்பிக்கையோடு. அணிந்திருந்த ஒரே உடுப்போடு, நியூயார்க்கின் மற்றொரு விமான நிலையம் ‘லகாடியா’ சென்று மறுபயணம் ஆனோம்!

டெய்ட்டன் போய்ச் சேர்ந்தால் போதும் போதும் என்றாகிவிட்டது!

3154total visits,1visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>