“உங்களுக்கு வேண்டியது கில்லிங் பவரா? அல்லது புல்லிங் பவரா?” எனும் கேள்வியுடன் முடிந்த கட்டுரையை எப்பொழுதோ நான் படித்த நினைவு.
பலபேர் சைவ உணவில் சத்தே இல்லை என்பார்கள். கீரை, காய்கறிகளைவிட மீன், முட்டை, மாமிசம் முதலிய அசைவ வகைகளில்தான் ஆற்றல் நிறையக் கிடைக்கும் என நம்புவார்கள்.
ஆனால் யானை? எவ்வளவு பெரிது! உருவத்தால் மட்டும் இன்றி, வலிமையிலும் பிறவற்றைவிட மேம்பட்டது இல்லையா? குதிரைக்கு எவ்வளவு ஆற்றல்! கொள்ளும் புல்லும் தின்னும் அதன் ஆற்றல் அளவீட்டைக் கொண்டுதானே ‘குதிரை பவர்’ (பிஷீக்ஷீsமீ றிஷீஷ்மீக்ஷீ) இத்தனை என்று மின்அலகு கணக்கிடப் படுகிறது. ஆகவே சைவ உணவே சிறந்தது எனச் சைவ உணவினர் சாதிப்பர்.
இவையெல்லாம் என்னைப் போன்ற சைவ உணவுக் காரர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய செய்திகள் என்றாலும், மேலை நாடுகளுக்குப் பயணம்போகும் போதுதான் சைவச் சாப்பாட்டாளர்களுக்கு சங்கடங்கள் நேருகின்றன. அசைவர்களுக்குச் சிக்கல் இல்லை. எப்படியும் சமாளித்துக் கொள்வார்கள். சுத்த சைவர்கள் சிறுசிறு தியாகங்களுக்குத் தயாராக வேண்டும். எனினும் அமெரிக்காவில் அத்தகைய சங்கடங்கள் இராது என அன்பர்கள் எழுதியது நம்பிக்கை தந்தது.
அமெரிக்க நாட்டில் தண்ணீரையும் உணவையும் வீணாக்குகிறார்கள். அதைப் பார்த்தபோதெல்லாம் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால் அதே சமயம் தண்ணீர் மற்றும் உணவு வகைகளை மிகத் தூய்மையாகப் பாதுகாத்து வழங்குகின்றார்கள்; பயன்படுத்துகின்றார்கள்.
வெளியூர்ப் பயணத்தின்போது ஓட்டலில் தங்கிப் பலவகை உணவுகளை வயிறு புடைக்கச் சாப்பிடும் நம் ஊர்ப்பழக்கமெல்லாம் அங்கே காண முடியாது. பயணவழியில் சாலையோரங்களில் உள்ள சிற்றுண்டிக் கடைகளில் சூடாகத் தயாரிக்கப்பட்ட உணவுகளை விற்கிறார்கள். அவற்றைக் காரில் இருந்தபடியே வாங்கிக் கொண்டு பயணத்தைத் தொடரு கிறார்கள் அல்லது அங்கேயே சாப்பிட்டுச் செல்லவும் வசதிகள் உள்ளன. காலப்போக்கில் நம் ஊர்களிலும் அப்படி வரக்கூடும்.
பாக்கெட்டுகளில் உணவு வகைகள்
பாக்கெட்டுகளில் அடைத்தும் சுத்தமான முறையில் பார்சல் செய்தும் தருகிறார்கள். நேரத்தை வீணாக்காமல் சாப்பாட்டை முடித்துக் கொள்கிறார்கள். எல்லாவித மாமிச உணவுகளும் பாக்கெட்டில் வைத்து விற்கப்படுகின்றன. சைவச் சாப்பாட்டாளர்களுக்கான இத்தாலி நாட்டில் பிரபலமான பீசா (றிமிஞீஞீகி), மாக்டோனால்ட் ஆகிய சைவ உணவுகள் கிடைக்கும். ஆனால் என்ன வெஜிடேரியன் என முதலிலேயே சொல்லிவிட வேண்டும்.
சைவ விருப்பத்தை விவரமாகச் சொன்னதும் பீசா கோதுமை ரொட்டியில் வெண்ணெய் வெஜிடேபிள் வெங்காயம் போட்டுத் தந்தார்கள். ஆலை இல்லாத ஊரில் இந்த இலுப்பைப்பூ கிடைத்தால் விடலாமா? பசி நேரத்தில் இதுவும் ருசியாகத்தான் இருந்தது. நாளடைவில் பழக்கம் காரணமாக இந்த உணவும் பிடித்துவிட்டது.
இந்த நேரத்தில் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. நான் இத்தாலிக்குச் சென்றிருந்தபோது இந்தச் சைவ ரொட்டியும் கிடைக்காமல் அவதிப்பட்டுப் போனேன். சைவ ரொட்டி என ஆங்கிலத்தில் சொல்லிக் கேட்டேன். அவர்களுக்கு அது புரியாமல், ‘என்ன?’ என்று திருப்பிக் கேட்டார்கள். நான் ஆங்கிலத்தில் விவரமாக ஆனியன் கலந்த விஜிடபிள் பிரட் என்றேன். அவர்கள் தோளைத் தூக்கிக் கொண்டு தெரியவில்லை என்றார்கள். கடைசியில்தான் தெரிந்து கொண்டேன். ஆங்கிலம் இவர்களுக்கும் தெரியாது என்பதை! இவர்களிடம் ஐரோப்பிய மொழிகளில் ஒன்றான அவரவர் தாய்மொழியில் கேட்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன். ஆங்கிலம் பேசும் நாட்டை ஒட்டி வாழ்ந்தாலும் இவர்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்றாலும் தமது தாய்மொழியறிவோடு மற்றொரு ஐரோப்பிய மொழியையும் கற்று விஞ்ஞான வளர்ச்சியில் தங்களை வளர்த்துக் கொண்டுள்ளார்கள். இதைப் போலவே நாமும் தாய்மொழியாம் தமிழைக் கற்று தமிழ்மொழியில் விஞ்ஞான வளர்ச்சிகளைக் காணவேண்டும் எனக் கருதினேன்.
ஒரு கை பார்த்தோம்!
அமெரிக்காவில் வெங்காயம் (கண்ணீர் விடாமலே) கிடைத்தது. பீசா ரொட்டி, பழச்சாறு முதலியன தாரளமாகக் கிடைக்கின்றன. சுவையான தண்ணீர் கலக்காத பால், யோகார்ட் எனும் கெட்டித் தயிர், சாக்லேட், ஐஸ்கிரீம்… போதாதா …? இந்த அருமையான சைவச் சாப்பாட்டை ஒரு கை பார்த்தபடி நாங்கள் பயணத்தைச் சமாளித்தோம் என்றாலும் நம் ஊர்ச் சாப்பாட்டு ஏக்கம் தீரவில்லை! மதுரை திரும்பியதும் எங்களைப் பார்த்த நண்பர்கள், மிகவும் மெலிந்து போனோம் என அங்கலாய்த்தார்கள்.
நாம் உணவுக்கு நம் வருமானத்தில் எத்தனைப் பங்கு செலவிடுகிறோம் என்பதைக் கொண்டே நம் வாழ்க்கை முறையையும் தரத்தையும் அளவிட முடியும் என்பார்கள். அமெரிக்க நாட்டில் உணவுப் பொருள் விலையைக் கேட்டதும் எனக்குத் தூக்கி வாரிப்போட்டாலும் அந்த நாட்டுச் செலாவணிச் சமன்பாட்டில் உணவுவிலை அமெரிக்கர்களுக்கு மலிவுதான். அதனால்தான் விருந்து களிலும் கேளிக்கைகளிலும் உணவை அதிகமாகவே வீணாக்குகிறார்கள்.
அங்கே விருந்துகளில் அமர்ந்து சாப்பிடுவது மிக முக்கியமான நிகழ்வின் போதுதான். பெரும்பாலும் பபே (ஙிuயீயீமீt) எனப்படும் சுய பரிமாறு முறைதான். பொதுவில் வைக்கப்பட்ட உணவில் அவரவர்க்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு, ஓரிடத்திலேயே நிலையாய் இராமல் வந்திருக்கும் பலரோடும் அளவளாவிச் சாப்பிடுவது மிக வசதியான ஒன்று. நம் நாட்டிலும் இந்த விருந்துமுறை வேகமாக அறிமுகமாகி வருகிறது. அமெரிக்கர்கள் இந்த பபே முறையிலேயே வீணாக்கிக் கொட்டும் உணவு அதிகம்தான்.
மதிக்கப்படும் தனி நபர் உரிமை
எங்கும் தூய்மையாக உணவைப் பாதுகாத்துப் பயன்படுத்துகிறார்கள் என்றேன். கடையிலும், விருந்திலும் மிகக் கவனமாக உணவு வழங்கப்படுகிறது. சுகாதார முறைகளை நாம் அங்குதான் கற்கவேண்டும். ஒரு ஓட்டலின் சாப்பாடு சரியில்லை என்று யாராவது புகார் செய்தால் போதும், உடனே அது கவனிக்கப்படும், அல்லது அந்த ஓட்டல் மூடப்படும் அளவுக்குப் பொதுமக்கள் புறக்கணிப்பும், நடவடிக்கையும் தொடரும். அதிலும் குறிப்பாக குழந்தைகள் உணவுப் பொருள்களில் மிக விழிப்பாக இருக்கிறார்கள். தனி நபர் பாதுகாப்பும் உரிமையும் அந்த அளவுக்கு அங்கே மதிக்கப்படுகின்றன.
கலிபோர்னியா திராட்சைப் பழங்களுக்குப் புகழ்பெற்ற இடம் அவற்றில் பூசான நோய் ஏற்பட்டிருப்பதைக் கண்டவுடன், கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அத்தனை திராட்சைக் கூடைகளையும் அப்புறப்படுத்திக் குப்பையில் கொட்டி விட்டார்கள். நம் ஊரைப் போல தடையை மீறி எவராவது தரக்குறைவான பண்டத்தை விற்பனை செய்தால் லைசன்சை ரத்து செய்து விடுவார்களாம். தண்டனையும் அதிகம்.
சிக்கனம்
அமெரிக்காவில் உணவை வீணாக்குவதைப் போல நான் ஐரோப்பிய நாடுகளில் பார்க்கவில்லை. இந்த வகையில் அவர்களிடம் அதிகச் சிக்கனம் கண்டேன்.
அமெரிக்காவில் இத்தனை மைல்கள் காரில் வந்தோமே எங்காவது குப்பைகூளம் கண்ணில் பட வேண்டுமே? ஊஹும்! கழிப்பறை, குளியலறை எல்லாம் மிகவும் தூய்மையாகவும் அழகாகவும் இருக்கும். அனைத்தும் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டிருக்கும். அறிவியல் முன்னேற்றத்தால் ஏற்பட்ட நவீன வசதிகள் நிறைந்திருக்கும்.
சுற்றுப்புறத் தூய்மை, பொது வாழ்வில் தூய்மை, ஒழுங்குக் கட்டுப்பாடு பேணும் உணர்வு இவை அங்கு நன்கு புலப்பட்டன. நம் நாட்டில் வருடத்திற்கு ஒரு முறை இவற்றை விழாக் கொண்டாடிவிட்டுத் தொடர்ந்து பேணிப் பாதுகாக்காமல் அனைத்தையும் குப்பையில் போட்டுவிடுகிறோம். மதுரையில் சுற்றுப்புறத் தூய்மை காக்க நாமும் இயக்கம் நடத்தினோம். என்ன ஆயிற்று? போன ஆண்டு ஓரிடத்தில் கொட்டிய குப்பையெல்லாம் வேறு இடத்துக்கு வந்துவிட்டது. வெளிநாடுகளில் எப்போதும் செயல் இயக்கம்… நம் நாட்டில் எப்போதும் பேச்சு இயக்கம். என்று இந்த நிலை மாறுமோ என்ற ஏக்கம்!
சிக்காகோவில் – அன்பர்களின் வீடுகளில் – இருவகை விருந்துகள் உண்டு! வயிற்றுக்கும் செவிக்கும்! அங்கே உணவுப் பரிமாற்றத்தைவிடத் திருக்குறள் கருத்துப் பரிமாற்றமே மிகவும் ருசித்தது. நம் நாட்டில் – திருக்குறளைப் பற்றிப் பெரும்பாலும் தமிழறிந்த புலவர்களே மேடை கட்டிப் பேசக் கேட்கிறோம். ஆனால் இங்கு பிறதுறை அலுவல்களில் உள்ளவர்களில் பலர், திருக்குறளில் வாழ்க்கைத் தேவைக்கு ஏற்ற அளவு நல்ல தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரு குறள் இன்ன அதிகாரத்தில் உள்ளது என எடுத்துச் சொல்லும் அளவுக்கு ஈடுபாட்டை வளர்த்து வாழ்கின்றனர். அவர்களோடு அமர்ந்து அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்லும் திருக்குறளை ஆராய்ந்தோம்.
சிக்காகோவில் ஒரு சொற்பொழிவுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதென்றால் சனிக்கிழமை வரை தங்குவதை நீடிக்க வேண்டியிருக்கும். எனவே கலந்துரையாடல் கூட்டங்களை வைத்துக் கொண்டோம். பேசுவோர், கேட்போர் ஆகிய இரு தரப்பாரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் சுவையான கருத்தரங்குகளாக இவை நடந்தன.
திரு.இளங்கோவன் திருக்குறட்பா வடிவில் அதே நடையில் நெஞ்சு தொடும் வரவேற்புப் பாமாலையை யாத்தளித்தார். நம் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பேரறிஞர் தெ.பொ.மீ. அவர்களின் மருகர் பேராசிரியர் டாக்டர் ஆர்.சண்முகம் அவர்கள் வாங்கித் தந்திருந்த, நம் துணைவேந்தர் அறிமுகக் கடிதத்துடன், நம் அஞ்சல் வழிக்கல்வித் துறையினர் என்னிடம் கொடுத்தனுப்பியிருந்த ஆத்திசூடி – கொன்றைவேந்தன் முதலிய தமிழிலக்கிய ஒலி நாடாக்களைப் பல்கலைக்கழகத் தூதனாக அங்கு நல்கினேன்.
சிக்காகோவில் நண்பர்கள் இவற்றைப் பொன்னே போல் போற்றி வாங்கிக்கொண்டனர். தம் பிள்ளைகளுக்குப் பயன்தரும் இத்தகைய நன்கொடைகளைத் தொடர்ந்து அனுப்புமாறும் கேட்டுக் கொண்டனர். மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் உலகத் திருக்குறள் ஆராய்ச்சி மையமும் இத்துறையில் இனி மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகளை நினைத்து மலைத்தேன்.
நண்பர்கள் எனது மேற்பயணத்திற்கான விசாவினைப் பெறும் முயற்சிகளில் ஓடி அலைந்தனர். சிலர் ஆரம்ப ஏற்பாடுகளைச் சரியாக செய்து கொள்ளாததால் அங்கே போய் அவதிப்பட நேர்ந்தது. பிரெஞ்சுப் புரட்சியின் 200-ஆவது ஆண்டு விழாக் கொண்டாடப்பட்டமையால் அந்த நாட்டுக்கு உடனே விசா பெறுவது சிரமமாய் இருந்தது. விசா முன் ஏற்பாடு செய்யாததாலே அவ்விழாவில் கலந்துகொள்ளும் அரிய வாய்ப்பும் கைநழுவியது. எனவே, புறப்படும் சமயத்தில் சரியான டிராவல் ஏஜண்ட் மூலம் விசாப் பெற்று உரிய ஏற்பாட்டுடன் புறப்பட வேண்டும் எனத் தீர்மானித்துக் கொண்டேன். இப்போதெல்லாம் 140 நாட்களுக்கு முன்னதாகவே விண்ணப்பிக்க வேண்டும் என்றார்கள்!
சிக்காகோ தமிழன்பர்களான நாராயணன், வெங்கடராமானுஜம் ஆகியோரை விட்டுப் பிரிய மனம் இல்லாமலேயே அமெரிக்காவை அவசரக் கோலத்தில் சுற்றிப் பார்த்து விட்டுக் கிளம்ப வேண்டியதாயிற்று!
1835total visits,3visits today