அமெரிக்கப் பயணம்

ஒரு நினைவோட்டம்

Image result for USA

என் திருக்குறள் பயணம், உலகப் புகழ் பெற்ற மிகப்பெரிய நாட்டினை நோக்கித் தொடங்க இருந்தது. அமெரிக்க நாட்டைப் பற்றி நான் ஏற்கெனவே அறிந்தவை, படித்தவை எல்லாம் ஒருபுறம் இருக்க, பல புதிய செய்திகளை அறிந்துகொள்ள மனம் துருவியது. அமெரிக்காவில் தொடர்புடைய, அங்கு போய் வந்த அன்பர்களிடமெல்லாம் அவசரத் தொடர்பு கொண்டேன். பயணம் போகும் புது இடத்தைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வதுதானே பயணத்திற்கு உரிய முதல்நிலை ஏற்பாடு?

அமெரிக்கத் தொடர்போடு இங்கு வாழும் அன்பர்களில் பலர் அமெரிக்க மக்களின் வாழ்வுப் போக்கில் தாம் கண்ட சாதாரணக் குறைகளையே பட்டியலிட்டுச் சொன்னார்கள். எதையும் அனுமதித்து ஏற்கும் அச்சமுதாய இயல்புகள் , பழக்கவழக்கங்கள், இன உணர்வுகள், ஊழல்கள், அரசியல் தில்லுமுல்லுகள், மதுவிலக்கு, சூதாட்டம், லாட்டரி விளைவுகள், தன் நாட்டு வளர்ச்சிக்காகப் பிறநாட்டுச் சுரண்டலையே நோக்காகக் கொண்ட தொழில் வர்த்தக நிறுவனங்கள்… இவற்றையெல்லாம் விலா வாரியாகச் சொல்லி அச்சமும் அயர்வும் ஏற்படச் செய்தார்கள். என்றாலும் அந்த அதிசய நாட்டின் ஈடிணையற்ற ஜனநாயக உயிரோட்டத்தையும், ‘இப்படியெல்லாம் அமெரிக்காவில்தான் நடக்கும்’ என்ற அபிமான உணர்வோட்டத்தையும் சுட்டிக் காட்டவும் தவறவில்லை. “ ‘அமெரிக்காவைப் பார்’ என உலகம் சுற்றிய தமிழர் ஏ.கே.செட்டியார் அன்று எழுதிய புத்தகத்தையும் ‘சோமலெ’ எழுதிய பயணக் கட்டுரைகளையும் படித்துவிடுமாறு நண்பர் ஒருவர் சிபாரிசு செய்தார்.

தொழில், வாணிபப் பயணமாகப் போனால் லாபநட்டக் கணக்கோடு நான் ஆயத்தமாக வேண்டியது அவசியம். ஆனால் நான் மேற்கொள்ளப் போவதோ தமிழ்ப் பயணம். அதிலும் குறிப்பாக, திருக்குறள் பயணம். எனக்கு இவ்விரண்டின் நிலைபேறு பற்றிய முன்னறிவு கொஞ்சமாவது வேண்டும் எனக் கருதினேன்.

அமெரிக்காவில் வாழும் தமிழர்களைப் பற்றி ஓரளவு அறிந்திருந்தேன். ஆனால் அமெரிக்காவில் தமிழ் எப்படி வாழுகிறது என அறிவதல்லவா முக்கியம்?

மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையோடு தொடர்பு கொண்டேன். டாக்டர் தமிழண்ணல், பேராசிரியர் சு.குழந்தைநாதன் தொகுத்து எழுதிய ‘உலகத் தமிழ்’ நூல் பற்றிய பல விவரங்களை நான் பெற முடிந்தது… தமிழ் அரிச்சுவடிப் பாடம் கற்பிப்பதைவிட பட்டப்படிப்பு வரை பயில அங்கு அளிக்கப்படும் வசதி வாய்ப்புக்களையும், தமிழ் மன்ற நடவடிக்கைகளையும் புரிந்து கொள்ள முடிந்தது. ஆசிய மொழி, இலக்கியத்துறை எனும் தனிப்பிரிவே அங்கு உள்ளது.

அமெரிக்காவில் இப்போது தமிழ், தெலுங்கு எனும் இரு திராவிட மொழிகளில் மட்டுமே பாடங்கள் தொடர்ந்து கற்பிக்கப்பட்டு வருகின்றன. கன்னடமும், மலையாளமும் அவ்வப்போது கற்பிக்கப்படுகின்றன. வாஷிங்டனிலும், சிக்காகோ பல்கலைக்கழகத்திலும் கன்னடம் கற்பிக்கப் படுகின்றது. பென்சில்வேனியாவில் மலையாளம் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. வாஷிங்டன், பென்சில்வேனியா, விஸ்கோன்சின், மிக்ஸிகன், கலிபோர்னியப் பல்கலைக் கழகங்களில் தமிழ் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. டெக்சாஸ் கோர்வல் பல்கலைக்கழகங்களில் வாய்ப்பு நேரும்போது நடக்கின்றன. விஸ்கோன்சின், டெக்சாஸ் பல்கலைக்கழகங்களில் தொடர்ந்தும் பென்சில்வேனியாவில் ஒழுங்காகவும் கற்பிக்கப்படும் மொழிப் பாடங்கள் முழுமையான பாடத் திட்டத்துடன் நடத்தப்படுகின்றன. அதாவது, தெரிந்தெடுத்துக் கொள்ளப்படும் மொழியின் இலக்கியம் அல்லது மொழியியலில்  எம்.ஏ.யும், பி.எச்.டி.யும் பெறும் அளவிற்கு மூன்று அல்லது நான்கு ஆண்டுப் பயிற்சியும் தனித்துறை ஆய்வும் அளிக்கப்படுகின்றன.

பிற கல்வி நிறுவனங்கள் இலக்கிய ஆய்வுகளில் மிகுதியும் ஈடுபட்டு இருப்பதால் பென்சில்வேனியா, வாஷிங்டன் பல்கலைக்கழகங்கள் திராவிட மொழியியலில் சிறப்புப் பயிற்சிகளை அளிக்கின்றன. கோர்வல் டெக்சாஸ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மொழியியலில் மிகுந்த நாட்டம் உண்டு; ஆனால் விஸ்கோன்சின், கலிபோர்னியா கழகத்தவர்களுக்கு இலக்கிய ஆய்வுகளிலேயே ஆர்வம் மிகுதி. சிகாகோவில் இரண்டுக்குமே ஆக்கம் தரப்படுகின்றது.

இயல்பாகப் பாட வகுப்புகளை வழக்கமாக நடத்தி வரும் பல்கலைக்கழகங்களில் தொடக்கநிலை வகுப்புகளில் ஆறு மாணவர்கள் வரை சேருவர். மேல்வகுப்புகளில் இந்த எண்ணிக்கை குறைவது உண்டு. வாஷிங்டன் பல்கலைக்கழகத் தமிழ்ப் பிரிவின் தொடக்க நிலையில், மூன்று மாணவர்களும், இரண்டாம் ஆண்டில் மொழியியல், தொல்பொருள் ஆய்வு முதலிய இதர துறைகளில் மேல்நிலை ஆய்வு செய்யும் பட்ட வகுப்பு மாணவர்களும் உள்ளனர். மொழியியல், இலக்கியம் மட்டுமன்றி, தென்னிந்திய வரலாறு, சமயம், இசை, நுண்கலை, அரசியல், திணையியல் முதலிய இதர துறைகளில் ஆர்வம் உள்ளோரும் வாஷிங்டன் பல்கலைக்கழகத் தமிழ்ப் பிரிவில் சேர்ந்திருப்பர். இவர்கள், தமிழை ஓரளவு கற்ற பின்னர்த் தமக்குப் பிடித்தமான துறையில் பட்டம் பெறத் தகுதியுறுவர்”.

பல்கலைக்கழகங்கள், பள்ளிகளை விட, அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் தன்னார்வத் தமிழ்ச் சங்கங்களும் அமைப்புகளும் ஒன்றுகூடி, தமிழ் இலக்கிய வேள்வி நடத்தி வருகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் சிக்காகோவில் உள்ள தமிழ்நாடு அறக்கட்டளை  17 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழ் இதழ் நடத்தி, தமிழர் உள்ளங்களையும், இல்லங்களையும் ஒரு சரமாக இணைத்து ஒப்பற்ற ஆக்கப்பணி புரிந்து வருகின்றது. சென்னையில் ஒரு கிளையினை நிறுவும் வகையில் உயர்ந்து நிற்கும் தமிழ்த்தொண்டர் அமைப்பு இது. திரு.மோகனன், இளங்கோவன், டாக்டர் ரெஜி ஜான், டாக்டர் சவரிமுத்து, கண்ணப்பன், டாக்டர் பி.ஜி.பெரியசாமி, திருமதி. வெங்கடேஸ்வரி சுப்ரமணியம் முதலிய தமிழ் நெஞ்சங்கள், அமெரிக்க நாட்டில் வாழும் தமிழ்க் குடும்பங்களுக்கும் தாயகத்திற்கும் உறவுப் பாலங்களைக் கட்டி வருகின்றன. அமெரிக்கத் தமிழர்கள் பொங்கல் உள்ளிட்ட தமிழ் விழாக்களையும், தீபாவளி, நவராத்திரி முதலிய பண்டிகைகளையும் கூடிக் கொண்டாடி நமது பண்பாட்டுக் கோலங்களைத் தூவி வருகின்றனர். இக்கோல வடிவங்களையெல்லாம் கண்டு மகிழும் பயணமாக என் திருக்குறள் உலா தொடங்கியது. தமிழ் மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் அருள் ஆசியுடன் அன்பர்கள் அணி திரண்டு நல்கிடும் வழியனுப்புதலுடன் மதுரையிலிருந்து புறப்பட ஆயத்தமானேன்.

பயணப் பரபரப்பு

பயணம் போவதென்றால் யாருக்கும் ஒருவகை பரபரப்பு உணர்வு ஏற்பட்டே தீரும். பள்ளிப் பருவத்துக் கல்விப் பயணமானாலும் சரி, பிள்ளைப் பருவத்து இன்பச் சுற்றுலா ஆயினும் சரி, பின்னைப் பருவத்துக் குடும்ப சமூக நிகழ்ச்சிப் பயணம் ஆயினும் சரி – வெளியூர் போவதென்றாலே மனமும் பொழுதும் வேகமாக ஓடத் தொடங்கிவிடும். சொந்த வாகன வசதி இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, போக வேண்டிய பயணம் பற்றிய சிந்தனை மனதை அரிக்கத் தொடங்கிவிடும். அதிலும் தொலை தூரப் பயணம் என்றால் கேட்கவே வேண்டாம். பலமுறை போய்வந்த நாடாக இருந்தாலும் கூட, பரபரப்பையும் மீறியதொரு பதைபதைப்பையும் உண்டாக்கியே தீரும்.

எனக்கும் அப்படித்தான்! பல வெளிநாடுகளுக்கு முன்னர் போய்வந்த அனுபவம் இருந்தும் இந்தத் திருக்குறள் பயணம் நெடிய எதிர்பார்ப்புகளை என்னுள் உருவாக்குவது போன்ற பிரமை ஏற்பட்டுவிட்டது. “அவை, பயணங்கள் அல்ல; பல்கலைக்கழகங்கள்” என எங்கேயோ படித்த வாசகம் – எனக்குள்ளே வலம் வந்து – இந்தப் பயணத்தைப் பல்கலைக்கழகமாக்கத் திட்டமிடும் தீர்மானத்தை முன்மொழிந்து கொண்டிருந்தது. அமெரிக்கா, கனடா முதலிய நாடுகளைப் பற்றிய விவரங்களைப் போதுமான அளவுக்கு திரட்டிக் கொள்ளத் தூண்டிவிட்டது. நண்பர்கள், அன்பர்களின் பெயர்ப் பட்டியலை, முகவரியை எல்லாம் தேடி எடுத்துக்கொள்ள நேரம் போதவில்லை எனும் நெருக்கடி ஏற்பட்டது.

Image result for bharathiyar

 

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே & தந்து

     வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”

என மகாகவி அன்றே பாடினான். தமிழ்நாடு வான்புகழ் பெற்றிட வையகத்துக்கு எல்லாம் வள்ளுவச் செல்வத்தை வழங்கினாலே போதும் என்பது அவனது கணிப்பு. உலகினுக்கு வள்ளுவத்தை நல்கும் பணியில் தமிழ்நாட்டு மக்கள் ஊன்றி நின்றிருக்க வேண்டும். விழா எடுக்கும் போது மட்டும் ஊர்கூட்டி முழக்கமிட்டுவிட்டு, அப்புறம் அயர்ந்து போய்விடுவதுதான் நம் வழக்கம். ஆனால், அயல்நாடுகளில் வாழும் தமிழ் அன்பர்கள் தாமும் அயர்வதில்லை. நம்மையும் அயரவிடுவதில்லை! அதிலும், அமெரிக்கத் தமிழர்களின் ஆர்வம் – அங்குள்ள ‘எம்பயர் கட்டிடம்’ போல் உயர்ந்தது; இங்குள்ள இமயம் போல் ஓங்கி நிற்பது.

வட அமெரிக்காவில் உள்ள டெய்டன் – ஆகாய விமானம் கட்டும் தொழில் சிறந்த பெரும் நகரம். விமான வடிவமைப்பு, கட்டுமானம், கணிப்பொறி நுட்பம் ஆகிய துறைகளில் நம் நாட்டவர்கள் பலர் அங்கு பொறுப்பேற்றுள்ளமை நமக்குப் பெருமை தரும் விஷயம். அவர்களில் கணிசமான அளவு தமிழ்நாட்டவர்களும் உள்ளனர்.

மேல்நாட்டுத் தமிழர்கள் ஓரிடத்தில் ஒன்றுகூடிட உறவுப்பாலம் அமைப்பன தமிழ்… தமிழ்ப் பண்பாடு, தமிழ் இலக்கியம், தமிழ்க் கலைகள்… – இந்நான்கையும் சால்புடைய தூண்களாக்கிக் கொண்டு, அமெரிக்கத் தமிழன்பர்கள் அறக்கட்டளையே அங்கு நிறுவிவிட்டனர்.

தமிழ்நாடு(ம்) அறக்கட்டளை

 

‘தமிழ்நாடு அறக்கட்டளை’ எனும் கூட்டமைப்பு அமெரிக்கத் தமிழ் அன்பர்களின் சேவைத் திறத்திற்கு எடுத்துக்காட்டானதொரு மணிமகுடம். அமெரிக்கப் பெருநாட்டின் கிழக்கு மேற்குக் கரையோர நகரங்களிலும் உள்நாட்டுப் பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கில் பாரதத் திருநாட்டினர் பரவி வாழ்கின்றனர். இவர்களுள் தமிழ்நாட்டவர் அங்கும் இங்குமாகச் சிதறி இருக்கின்றனர். இவர்களையெல்லாம் ஒரு சரமாக இணைத்துக் காணும்- இசைவித்துப் பேணும் முயற்சிகள் ஆண்டாண்டுகளாக அரும்பு கட்டி வந்துள்ளன.

1974-இல் தொடங்கப்பட்ட ‘தமிழ்நாடு அறக்கட்டளை’ நல்ல அடித்தளத்தோடும், நயந்தரு ஆக்கத்திட்டத்தோடும் பணியாற்றி வருகிறது. சிக்காகோ முதலிய நகர்களில் தமிழ்ச் சங்கங்கள் உண்டு என்றாலும் அனைத்தையும் ஒருங்கே இணைத்துப் பார்க்க ஏற்றதொரு பொது அமைப்பு தேவைப்பட்டது. அந்த நெடிய தேவையை நிறைவு செய்ய ஊன்றப்பட்ட தமிழ்நாடு அறக்கட்டளைக்கு முக்கியமான நகரங்களில் எல்லாம் கிளைகள் உண்டு. சர்வதேசச் சுழற்கழகம், அரிமா சங்கம் என்பன போல, அன்புத் தோழமையும், மனித நேயத் தொண்டையும் இரு கால்கள் எனக் கொண்டு தமிழ்நாடு அறக்கட்டளையும் நடைபோட்டு வந்தது.

தமிழ்நாடு அறக்கட்டளையின் முதன்மை நோக்கம் அமெரிக்காவில் வாழும் தமிழர்களிடையே நெருக்கமான உறவினை ஏற்படுத்துவது; இந்த உறவினை வலுப்படுத்தும் புத்தாண்டு, பொங்கல், நவராத்திரி, தீபாவளி, கிறிஸ்துமஸ் விழாக்களை நடத்தி விருந்தயர்வது; அனைத்துச் சமயத்தவர்க்கும் பொது வீடாக – நல்லிணக்க மன்றமாக- அறக்கட்டளையை நிர்வகிப்பது; பல குடும்பங்களை ஒன்றாகக் கூட்டிக்கொண்டு சிறு சுற்றுலாப் போவது; நிலா விருந்து பரிமாறிக்கொள்வது; போட்டிப் பந்தயங்கள் நடத்துவது; நமது கலாச்சாரத்தைப் பிறர் புரிந்து பாராட்ட வாழ்ந்து காட்டுவது.

“அயல்நாடு எதுவாயினும் அங்கு வாழும் வெளிநாட்டவர்கள் தமக்குள்ளே ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு வகைச் சுயநலம் சார்ந்த தற்காப்பு சங்க(ம)ம்தான் இது! இதில் என்ன புதுமை இருக்கிறது?” என்று கேட்க அமெரிக்க நாட்டுத் தமிழ் அறக்கட்டளையினர் வாய்ப்பு அளிக்கவில்லை.

அறக்கட்டளையின் விழுமிய நோக்கம் தாயகத்துத் தமிழ் மக்களுக்குத் தன்னால் ஆன உயர் கொடைகளை நல்க முற்படுவது. அமெரிக்கத் தமிழர்களிடையே நிதி திரட்டி, அதனைக் கொண்டு தமிழ்நாட்டில் விழுமிய சேவைத் திட்டத்தைச் செயலாக்குவதே அதன் புறவடிவம். அங்கு நிதி தொகுக்கவும் இங்கு அது குடை கவிக்கவும் போதிய ஆக்கம் தரக்கூடிய சான்றோர்கள், அறங்காவலர் களாகப் பொறுப்பேற்றனர். டாக்டர் ஜி.பழனிபெரிய சாமி, டாக்டர் இளங்கோவன், சி.கே.மோகனன், டாக்டர் சவரிமுத்து, டாக்டர் ஜானகிராமன், டாக்டர் கோவிந்தன், டாக்டர் நல்லதம்பி, திரு.துக்காராம், டாக்டர் பி.அமரன், திருமதி வெங்டேசுவரி, திரு.ரவிசங்கர், திரு.ஏ.எம்.ராஜேந்திரன், திரு டி.சிவசைலம், டாக்டர் சி.எஸ்.சுந்தரம், டாக்டர் ஆனந்தகிருஷ்ணன், டாக்டர் பொன்னப்பன் என நாள்தோறும் திரண்டுவரும் தொண்டர் அணியினர் அமெரிக்காவில் அறம் வளர்க்கும் நாயகர்களாக விளங்கு கின்றார்கள்.

தமிழ்நாட்டில் ஆயிரம்ஆயிரம் பேர் பயன்பெற விழுதூன்றப் போகும் ஆலமரக் கன்றுகளைப் பேணும் பொறுப்பேற்க உவந்து இசைந்த சான்றோர் வரிசையும் பெரிது; அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம்  நீதியரசர் வேணுகோபால், அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் எம்.அனந்தகிருஷ்ணன், திரு.சந்திரன்… அமெரிக்கத் தமிழன்பர்களது அறக்கட்டளைகள் பல வகை; சிறிதும் பெரிதுமாக எண்ணற்றவை; தனி நபர் உதவியாகவும் பலர் சேர்ந்து வழங்கும் கொடையாகவும் நூற்றுக் கணக்கானவை. பாரதியார், பாரதிதாசன், நாமக்கல்லார் பெயரால் பரிசுக் கட்டளைகள், தமிழ்நாட்டில் பள்ளிக் கட்டிட நிதிகள், ஆன்மீக, ஆசிரம தர்மங்கள், மருத்துவ மனைக் கொடைகள், ஈழத் தமிழர் வாழ்வு நலன்கள் என்றெல்லாம் வாரி வழங்கி வருபவை.

Image result for thirukural manimozhian

ஆனால் தமிழ்நாடு அறக்கட்டளை இந்த எல்லைகளையும் தாண்டியது. என்றும் பயன்தரும் வேலைத் திட்டங்களை தமிழ்நாட்டில் செயலாக்கும் கருத்துடையது. அவற்றுள் முக்கியமானது; சென்னையில் பல லட்சம் டாலர் செலவீட்டில் உருவாகிவரும் தொழில் நுட்பக் கேந்திரம் எனும் தொழில் நுட்பப் பரிமாற்றப் பயிற்சி மையத்தைச் சென்னையில் நிறுவுவது. இது தமிழ்நாட்டு இளைஞர்கள் அமெரிக்காவில் நாள்தோறும் வளர்ந்துவரும் புதுப்புதுத் தொழில் நுட்பங்களை எல்லாம் அறிந்து கொள்ள வாயில்களைத் திறந்து வைக்கும். நிகரான அறிவியல் சிந்தனைகள் இங்கும் சமகாலச் சாதனையாகப் பாத்தி கட்டும். இது எளிய காரியம் இல்லை. பலரது மகத்தான கூட்டு முயற்சியால் மட்டுமே இதனைச் சாதிக்க முடியும்.

சாதனைப் பாதையில் அடியெடுத்து வைத்துள்ள பேரமைப்பினர் விடுத்துள்ள அழைப்பினை ஏற்பது எத்தகைய பெருமை? அந்தப் பெருமையை எனக்குத் திருக்குறள் அல்லவா பெற்றுத் தந்துவிட்டது!

1660total visits,1visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>