திருக்குறள் செம்மல்’ திரு. ந.மணிமொழியன் அவர்களின் 60 ஆம் ஆண்டு மணிவிழாவினை வரும் 25 ஆம் நாளன்று சட்டப் பேரவை முன்னாள் தலைவர் திரு. பி.டி.ஆர் பழனிவேல்ராஜன் அவர்கள் தலைமையில் குழு அமைத்துக் கொண்டாடவிருப்பதை அறிந்தும், சிறப்பு மலர் ஒன்று வெளியிடவிருப்பதை அறிந்தும் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். அய்யன் வள்ளுவரின் திருக்குறள் நெறி போற்றி, மாணவர்களிடையே திருக்குறள் குறித்த தேர்வுகளை நடத்திப் பரிசளித்து ஊக்குவிக்கும் மணிமொழியன் அவர்களின் பணி பாராட்டத்தக்க ஒன்றாகும். அவர் தொண்டினைத் தொடர்ந்து செய்திடவும், மேலும் பல்லாண்டு நல்ல உடல்நலத்தோடு வாழ்ந்திடவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருக்குறள் செம்மலாகத் திகழ்மணி மொழியன் செல்வம்
மருவியகமலா என்னும் வளரறச் செல்வி வாழ்வால்
பெருகுநற்புகழ் படைத்து பெரியோர்தம் உறவால் நாளும்
அருள்நெறித் தந்தை தொண்டர் அறுபத்தாண்டிமேல் வாழி

மணிமொழியனுக்கு நல்லமணி விழா திருக்குறட்கு
அணிசெயும் பணியால்நாட்டில் அறநெறி பேணித்தீமைப்
பிணியகன்று அழுக்காறின்றிப் பெரியாரைத்துணையாகக் கொண்டு
துணிவுடையவர்கள் நட்பால் தொடர்ந்து பல்லாண்டு வாழி

வள்ளுவர் தென்றல் நல்லகுறள் வேளாய் வளமை சேர்த்து
தெள்ளியராகித் தெய்வப்பணி பல செய்து பண்பால்
உள்ளியதனைத்தும் எய்தும் கலைபயில் உயர்வுதந்த
வள்ளலாய் பணிசெய்கின்ற மணிமொழியன் சீர்வாழி

அன்பகத்தில்லா வாழ்வால் அழிபொருள் பண்பில் செல்வம்
துன்பமே பெருக்கி நாட்டில் தொல்லைகள் தருவார் கூட்டம்
தன்னில் சேராமல் நாளும் சான்றோர்கள் துணையே நாடி
நன்மைசெய் மணிமொழியார் நலம் பல பெற்று வாழி

தமிழ்நாட்டில் மும்மணிகளாக விளங்கியவர்கள் மூவர். ரசிகமணி சிந்தம்பர முதலியார், பண்டிதமணி கதிரேசன் செட்டியார், கவிமணி தேசிய வினாயகம் பிள்ளை. நமது மணிமொழியன் அவர்கள் நான்காவது மணி. திருக்குறள் மணி. காலை முதல் மாலை வரை தினமும் திருக்குறளைப் பயன்படுத்தி வருகிறார். இவர் ஒரு திருக்குறள் களஞ்சியம், கொடுப்பது இன்பமா ? வாங்குவது இன்பமா ? திருக்குறளை மணி மொழியன் சொல்வது இன்பம் அதை விட இன்பம் அதனை கேட்பவர்களுக்கு பெரிதாக இருக்கும்.

மணிமொழியன் என்ன ஒரு அருமையான பொருல். எவ்வளவு பொருள் பொதிந்த பெயர். இப்படிப்பட்ட பெயரை ஒரு இளைஞர் தனக்குத் தானே தேர்ந்தெடுத்துக் கொண்டார். இந்த இளைஞருக்கு படிப்பார்வம் தமிழார்வம் மட்டும் இருக்கவில்லை. வரும் பொருள் உரைக்கும் தன்மையும், வரும் பொருள் உணரும் வல்லமையும் இருக்கிறதென்பதை நாம் உணர்கிறோம். எந்தப் பேச்சை எடுத்தாலும் அது சம்பந்தமான ஒரு அழகான விளக்கத்தை திருக்குறளிலிருந்து எடுத்துச் சொல்லுவார்.

மாமனிதர்கள் மணிமொழியன் வாழ்க‌

அன்பிற்கோர் முகவரியாய் மதுரை மண்ணில்
அணி செய்தார் மணி மொழியன் அண்ணன் ! நல்ல‌
பண்பிற்கோர் முகவரியாய்ப் பாண்டி நாட்டில்
பவனிவந்தார் வேள்பாரி மன்னன் ! இன்றோ
என்புருக இதயமெல்லாம் உருக எங்கள்
இயற்றமிழும் இசைத்தமிழும் உருகக் காணும்
கண்ணுருகக் கண்ணீரும் உருகத் தீட்டும்
கவி உருகக் காலமாய் இன்(று) உறைந்து விட்டார்.

பேச்செல்லாம் திருக்குறளை அழைக்கும்;மூன்றாம்
பிறை முகத்தில் புன்னகையாய் வீற்றிருக்கும் !
மூச்செல்லாம் தமிழ் மணக்கும்; தமிழ்த் தொண்டர்க்கு
முன்னோடி உதவ, அவர் மனம் துடிக்கும் !
கூச்சல்களால் தமிழ்வளர்க்க முடியா தென்று
கொள்கை வழி நடைபயின்று தமிழ் வளர்த்தார் !
ஆச்சரிய மாய் இங்கோர் மனிதர் வாழ்ந்தார் !
அவர்புகழைப் போற்றிடுவோம் இன்றும் என்றும்.

மணிமொழியனின் மயக்கும் மந்திரங்கள் தான் எது என்றால் அது நான்காக இருக்கிறது.

1.கொடுக்கும் குணம் 2. திருக்குறள் புலமை 3. நடுவு நிலமை வகிப்பவர் 4. அரவணைக்கும் பண்பு இவை நான்கும் நாம் அவரிடம் கற்றுப் பரப்ப வேண்டிய மந்திரங்கள். திருக்குறளை உலக நடப்போடு பொருந்திச் சொல்வதில் வல்லவர். எதிலும் சாராமல் நடுவு நிலைமையோடு வாழ்ந்தவர்.

பண்டிதர்கள் மத்தியிலிருந்த திருக்குறள் புத்தகத்தை பாமரர்களிடத்துக்கு இழுத்து வந்து, திருக்குறள் மாநாட்டை தமிழ்நாட்டிலேயே முதன் முதலாக நடத்தியவர் தந்தை பெரியார். பெரியார் அவர்கள் தொடங்கி வைத்த திருக்குறள் பணியை உலகெலாம் தொடர்ந்து செய்திட மணிமொழியன் அவர்கள் தன்னையே அற்பணித்துக் கொண்டவர்.

அன்புள்ள திருமதி மணிமொழியார் அவர்களுக்கு

கிடைத்தற்கரிய தங்கள் கணவர் மணிமொழியார் இயற்கை எய்தினார் என அறிந்து அதிர்ந்து போனேன். எங்களுக்கு அவர் தண்ணீர் தடாகம், அமுதசுரபி, வேடந்தாங்கல். நாங்கள் கையற்ற நிலையில் இனி மதுரைக்கு வந்தால் தவிப்போம். கவிஞர் வைரமுத்து சொன்னது போல, தமிழ்க் கோபுரம் சாய்ந்தது. பொருள் நிறைந்த வாழ்வு வாழ்ந்த அவர் பொருளோடு வாழ்ந்து காட்டினார்.

திருக்குறள் முற்றிலும் அழிந்தாலும் தம் நெஞ்சில் திருக்குறளைப் பதிவு செய்து வைத்திருந்தார். அருவி போல பல திருக்குறள் சிறப்புகளைக் கூறுவார்

திருக்குறளுக்கு மெய்யுறு ஒன்று எழுதுங்கள் என இரண்டு ஆண்டுகளாக வற்புறுத்தி வந்தேன். செய்கிறேன் என்றார். தமிழன்னைக்கு அந்த‌ அணிகலன் கிடைக்கவில்லை என வருந்துகிறேன்.

அன்புக்குரிய நண்பர் உலகத் திருக்குறள் பேரவைத் தலைவர் மணிமொழியனார் அவர்கள் இறந்தார் என்பது ஏற்புடையது அல்ல. அன்னாரின் ஈகை உள்ளமும், தமிழ்த் தொண்டும், திருக்குறளுக்கு அவர் ஆற்றிய ஈடில்லா செயல் தொண்டும், தமிழ் ஆய்ந்த தோய்ந்த அறிஞர் பெருமக்கள் உள்ளங்களில் நீங்கா இடம்பெற்று நிலைத்து நிற்கும். அவர் புகழ் வையகமும், வானகமும், உள்ளளவும் தொடரும்.

நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்தது இவ்வுலகு வித்தகு மணிமொழியாரின் உடல் மண்ணுக்குச் சொந்தம், உயிர் விண்ணுக்குச் சொந்தம், புகழ் கற்றோருக்குச் சொந்தம்.

திருக்குறள் ஓர் அறிவுச் சுரங்கம். அஹைத் தோண்டித் துருவி நினைத்ததும் அந்தச் சூழலுக்கு பொருந்திய குறள் பொன் தகடுகளை எடுத்தளிக்க வல்லவராய் திகழ்கிறார் திருக்குறள் செம்மல் ந. மணிமொழியனார்.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்      நாள்: 29.10.1991

ஆசியுரை

இனிய நண்பர், திருக்குறள் செம்மல் மணிமொழியன் அவர்கள் திருக்குறள் ஆர்வலர்: அவர் கலந்து உரையாடும் பொழுதும் பேசும்பொழுதும் திருக்குறளை இயைபுக்கேற்ப எடுத்தாண்டே பேசுவார். நல்ல திருக்குறள் அறிஞர் : திருக்குறள் சொற்பொழிவாளர். ‘இலக்கியம் பேசி மகிழவோ’ என்ற நூல் ஒன்றினைப் படிக்கும் இனிய வாய்ப்புக் கிடைத்தது. நல்ல அற்புதமான, பலகாலும் படித்துப் பயனடையத்தக்க நூல். நூலின் கருத்தில் நமது உணர்வு அழுத்தமாகப் பதிந்தவுடன் நூலாசிரியரை அறிந்து கொள்ளவிரும்பி நூலின் முகப்பைப் பார்த்தோம்! எல்லையற்ற மகிழ்ச்சி. ஏன்? நமது திரு;க்குறள் செம்மல், திருக்குறள் பேரவை மாநிலப் பொதுச்செயலாளர் மணிமொழியன் அவர்கள் எழுதிய நூல் அறியமுடிந்தது. மணிமொழியன் அவர்கள் பேச்சில், செயலில், தொழிலில் மட்டுமல்ல நல்ல நூலாசிரியரும் கூட என்றறிந்த தில் அளவற்ற பெருமித உணர்வு ஏற்பட்டது. இந்தப் பெருமித உணர்வு தூண்ட, மீண்டும் ஒருமுறை ‘இலக்கியம் பேசி மகிழவோ’ என்ற நூலினைப் படிக்கத் தொடங்கினோம். நல்ல பயன் மிக்கநூல் ஒன்றினைப் படித்த அனுபவம் : மனநிறைவு.

மணிமொழியன் அவர்களிடம் இயல்பாகவே தமிழில் பற்று உண்டு. ஏன், படித்து அனுபவிக்க வேன்டு மென்றா? இல்லை! இலக்கியம் பொதுமக்கள் நாவிலும் அன்றாடம் புழங்கி வருதல் வேண்டும் என்ற தமது குறிக்கோளை அடைய மணிமொழியன் பேசுகிறார் : எழுதுகிறார் : திருக்குறள் பேரவையை நடத்துகிறார். ஆம்! பொதுமக்களின் கலாச்சார வாழ்க்கைத் தரம் உயர்ந்தால் தானே நாடு வளரும்: பண்பாடு வளரும்!.  

இன்று மக்கள் மன்றம் போகும் நிலை கருதி, ஆசிரியர் வருந்துகிறார்! மலிவு என்ற பெயரில் நச்சு இலக்கியங்கள் மலிந்தமையால் நல்ல இலக்கியங்களை மக்கள் விரும்பிப் படிப்பதில்லை அதே போழ்வு வாய்ப்பு ஏற்படும் பொழுது “நல்ல இலக்கியங்கள் படிக்கப் படுவதில்லை” என்று கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. இன்று மூளைச் சோம்பல் அதிகம். மூளையில் அறிவுப் புயலை ஏற்படுத்தும் நூல்களை யாரும் படிக்க விரும்பாமல் பொழுது போக்குத் தன்மை யுடைய எளிய வாசிப்பை எளிய வாசிப்பை (Light Reading) விரும்பு கின்றனர். இது ஒரு குறையே. இந்தக்குறையை நிறைவு செய்ய “இலக்கியம் பேசி மகிழவோ” என்ற இந்நூல் துணை செய்யும் என்று நம்புகின்றோம். இனியதமிழ், எளியநடை: செறிவுமிக்க கருத்து: இலக்கிய மேற்கொள்கள்! நூல்கள் ஈர்த்துப்படிக்கத் தூண்டுகின்றவாறு கட்டுரைத் தலைப்புகளில் ஆற்றல்மிக்க வாக்கியங்கள்! இத்தனையும் அழகுற, அமைவுறஉள்ள இந்த நூலைப் பலரும் படிப்பார்கள்! படித்துப்பயன் பெறுவார்கள்! இது உறுதி!

“சுய நலம் என்பது ஒரு சிறு உலகம். ஆதில் ஒரே ஒரு மனிதன் மட்டுமே இருக்கிறார்கள்.” இது எவ்வளவு அற்புதமான எடுப்பு வாசகம்! ஆம்! நம்மையும் இந்தச் சொற்றொடர் சுண்டி இழுத்தது உண்மை! ஆயினும் மணிமொழியன் அவர்கள் இந்த நூலின் ஆசிரியர் மட்டுமல்ல. நமது கெழுதகை நண்பரும் கூட! ஆதலால் ஒரு திருத்தம். “சுயநலத்துடன் உலகம் ஒட்டுமா?” “சுயநலப்பிண்டம்” மனிதன் கணக்கில் வருவானா! “அட்டை என ஒட்டிக் கொண்டால்” கட்டுரை மிகவும் நன்றாக அமைந்திருக்கிறது.

இன்று வளர்ந்து வரும் ஒரு சமூகத் தீமையை ஆசிரியர் இனம் கண்டு கொண்டு எச்சரித்திருப்பது பயனுடைய செய்தி. “கற்றவர்களிடமுள்ள காரணமற்ற அச்சமும் பயமும் நீங்கினால் மக்களிடையே நிலவும் வறுமை நீங்கும்” என்று குறிப்பிடுகிறார். ஆம்! உண்மை! உண்மை! கற்றவர்கள் நல்லவர்களாக, வல்லவர்களாக இல்லாதது இன்றைய சமுதாயத்தின் குறையே.

“சந்தேகம்” ஒரு தீயகுணம், சந்தேகப் படுதல் தீமை. சந்தேகத்தையே அடிப்படையாகக்கொண்டு அதிருப்தியடைதல் மிகவும் தவறு மட்டும் அல்ல: கொடுமை யானது ஆசிரியர் விளக்குவது நல்ல அறிவுரை.

நூலாசிரியர் மணிமொழியன் அவர்கள். நாட்டுப் பற்றுடைய நல்ல அன்பர். நூலாசிரியருடைய நாட்டுப் பற்று “உடல் மண்னுக்கும் உயிர் நாட்டுக்கும்” என்று கட்டுரை புலப்படுத்துகிறது.

“நாட்டுக்காகச் சாவது ஒரு தேவை. நாட்டுக்காக வாழ்வது மற்றும் ஒரு தேவை.” என்ற அடிகள் கவனத்திற்குரியவை. மேலும்’ வ.உ.சி.யின் வீரவாழ்வை தியாகவாழ்வைக் கருதும் நாம் – அவரது நாட்டுப்பற்று, மொழிப்பற்று, தன்னலமற்றதியாகம், அயராஉழைப்பு, காரிய உறுதி ஆகியவற்றையும் கருதிச் செயலாற்ற வேண்டும். என்னும் வரிகள் மூலம் நூலாசிரியரின் நாட்டுப்பற்றினையும், இன்று நாடு போகிற போக்கினைப் பற்றிய அவர் கவலையையும் உணரமுடிகிறது. இது மட்டுமா? நூலாசிரியர்யாதெரு தயக்கமுமின்றித் துணிவுடன் கூறும் உண்மை நாட்டலுள்ள தீயசக்திகள் ஒரு அமைப்பை உருவாக்கிக் கொண்டு அந்த அமைப்பின் வழி இயக்கினால் தப்பித்துக்கொள்கிறார்கள். எவ்வளவு பெரிய உண்மை? இந்த உண்மையை ஊரறிய வேண்டுமே! உலகறிய வேண்டுமே!

“அரசியல் வாதிகள் அடுத்த தேர்தலைப் பற்றிக் கவலைப் படுகிறார்கள். அறிஞர்கள் அடுத்த தலை முறையைப் பற்றிக் கவலைப் படுகிறார்கள்” என்பது எப்பொழுதோ கேட்ட பழமொழி. இது பழமொழி மட்டுமல்ல. அன்றாடம் கண்ணால பார்ப்பதுவும் கேட்பதுவும் கூட! நமது நூலாசிரியர் திருக்குறள் செம்மல் அறிஞரினத்தைச் சேர்ந்தவர் என்பதை “நம் இளைஞர்களை 21ஆம் நூற்றாண்டின் தலைவர்களாக இப்போதே உருவாகக் வேண்டும்” என்ற வரிகளைப் படிக்கும் போது உணர முடிகிறது. ஏன்? திருக்குறள் பேரவைச் செயலாளராகிய இவர் திருக்குறள் பேரவைக்கும் கூட ஒரு இளைஞர் பிரிவை உருவாக்கலாம் அல்லவா? அன்பு, அடக்கம், மெய்யுணர்வு ஆகிய செல்வங்களைப் பெறத் துணை செய்யும் மெய்யுணர்வைப்பற்றிய கட்டுரை மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. துன்பத்தை அறை கூவலாக ஏற்பதே மெய்யுணர்வின் பயன் என்ற தெளிவு ஏற்கத்தக்கது.

அடுத்து நம் நூலாசிரியர் ஒரு தொழில் மேதை. தாம் சார்ந்துள்ள தொழிலைப் பற்றி ‘வீட்டிற்கு வெளியேயும் ஒரு வீடு’ என்ற கட்டுரை படிக்க வேண்டிய ஒன்று. நாம் கவனமாகப் படித்தோம். அதன் பயன் ஏக்கம்! எதனால் ஏக்கம்? நாம் அவருடைய அழைப்பிருந்தும் கூட அவருடைய “காலேஜ் ஹவு”ஸில் போய்த் தங்கவில்லையே! அந்த விருந்தை, உபசாரத்தைத் துய்த்து மகிழ முடியவில்லையே என்ன ஏக்கத்தை ஏற்படுத்துகிறது. நமது அடுத்த முயற்சி நாம் காலேஜ் ஹவுஸில் விருந்தயர்வதுதான்.

“செய்க சிந்தனை” என்ற கட்டுரையுடன் நூல் முடிவடைகிறது. இந்தக் கட்டுரையில் அடங்கியுள்ள அறிவுரைகள் துன்பத்திற்கு அஞ்சற்க: துன்பங்கள் இன்பமலையேறுதற்குரிய படிகள் எனபனவாகும். துன்பத்தை-துன்பச் சூழலை மாற்றுக: இன்னாதன வாக உள்ள இந்த வையகத்தை இனிதாக மாற்றியமைத்திடுக.

அடுத்து, பேனா எழுதிக் கொண்டே போகிறது. நூலின் அமைப்பு அப்படி: அணிந்துரை நூலின் பக்கங்களை விடக் கூடுதலாகி விடக் கூடாதே என்பதால் பேனாவின் இயக்கத்திற்கு முற்றுப்புள்ளி: ஆனால், இந்த நூல் நமது மூளையில் ஒரு புயலை உருவாக்கியிருக்கிறது. நாம் ஏற்றுச் செய்யவேண்டிய கடமைகள் பல இந்த நூலில் எடுத்துக் கூறப் பெற்றுள்ளன. நாமும் நூலாசிரியர் திருக்குறள் செம்மல் மணிமொழியன் அவர்களும் சேர்ந்து செய்யவேண்டிய பணிகள் பல உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக “இலக்கியம் படித்து மகிழவோ!” என்ற இந்த நூலின் செய்தினைப் பொதுமக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பும் இருக்கிறது. “இலக்கியம் படித்து மகிழவோ!” என்னும் இந்த நூலினைப் படிப்போம்! படிப்பது மட்டுமல்ல வாழ்க்கையை வென்றெடுக்கச் செய்வோம்!

 

இன்ப அன்பு,

அடிகளார்

 

மணிமொழியன் வாய் திறந்தால் குறள் ஒலிக்கும். மற்றவர்கள் வாய் திறந்தால் குரல் ஒலிக்கும்.

இருமினால் தும்மினால்
எல்லாம் குறளாய்
வரும் இவர்க்கு
சொல்கிறேன் வாழ்த்து !

அதிகாரத்துக்கு ஒரு ஆண்டு வீதம் குறள் போல 133 ஆண்டுகள் நலமோடு வாழ்க.

மணி மொழியே கனி மொழியே
மண்புமிகு தமிழ் மொழியே
மங்காத புகழ்பெற்ற‌
செம்மொழியே எம்மொழியே

குறள் நெறியே அருள் நெறியே
குளிர் நிலவே அரும் சுவையே
குன்றாத வளம் பெற்ற‌
குணக் குன்றே மணிமொழியே

இருள் நீக்கும் இன்மொழியே
இகம் போன்றும் தொன்மொழியே
மருள் போக்கும் மணிமொழியே
மங்காத இளம் பிறையே

குறள் வழியில் வாழ்ந்தவரே
குலம் தளைக்கச் செய்தவரே
பிறர் போற்றும் நற்பண்பை
பிறவியிலே பெற்றவரே

இலக்கியமே வாழ்க்கை என்ற‌
இலக்கணத்தில் வாழ்ந்தவரே
இன்முகத்தால் அனைவரையும்
பன்முகத்தில் கவர்ந்தவரே

இயற்கை என்ற விதிமுறைக்கு
இலக்காகி விட்டவரே
இறப்பொன்று இருப்பதையே
மறந்துவிடச் செய்தவரே

காலத்தால் அழியாத‌
கடமைகளைச் செய்தவரே
ஞாலத்தில் நீங்காத‌
புகழ் அனைத்தும் பெற்றவரே

ஏமாற்றி எங்களுக்கு
இறுதிவிட கொடுத்தவரே
எங்களுள்ளம் மறக்காத‌
அன்புவிதை விதைத்தவரே

குறளமுதம் கண்டவரே
குறள் காவியம் தந்தவரே
நிலாமுற்ற நிகழ்ச்சியிலே
நிலைபெற்று நிற்பவரே

காண்பவரைக் கவர்ந்திழுக்கும்
கருணையுள்ளம் கொண்டவரே
காலமெல்லாம் உன்நினைவில்
கண்ணீர் சிந்த வைத்தவரே

மாண்பு மிக்க மணிமொழியே
மனதில் நிற்கும் மணிமொழியே
காண்பதற்கு ஏங்க வைத்து
காலனுடன் சென்றாயே

மங்கல நாணோ மதிகமலா தாயுளத்தில் !
பொங்கரம் பெற்றோரும் கற்றோரும் தங்கத்தமிழ்
சான்றோரும் தமிழந்தார் தக்கரர் மணிமொழியர்
சான்றுகுறள் நூல்வாழ் தமிழ்

அய்யா மணிமொழியை அறிந்தால் அமுதூறும்
மெய்யாய் அவர்பணியைப் புகழ்ந்தே தமிழ்கூறும்

மணிமொழியார் மனத்தினிலே மாண்பொன்றே குடியிருக்கும்
பிணிக்கின்ற சொல்லேதான் பேச்சினிலே நிறைந்திருக்கும்

பனிப்பொழிவாய் பழகுதமிழ் தனித்தொழிலாய் சுவை கூடும்
இனிக்கின்ற திருக்குறளே எப்போதும் நடைபோடும்

இரக்கத்தை விசுவாசம் கொள்கின்ற கிறிஸ்தவராய்
சிறக்கும் ஈகைமிகு ஈமானுள் இஸ்லாமியராய்

எவரிடமும் பகைகொள்ளா இயல்பான புத்தநெறி
புவியாளும் ஈசனிடம் சரணடையும் பக்திநெறி

இத்தனையும் சங்கமிக்க வாழுகின்றார் குறள்நெறியார்
வித்தகராய் வீற்றிருக்கும் உயர்வுமிகு மணிமொழியார்க்கோ

நல்லவர் விருது தந்தார் பெருந்தகையார் பிடிஆர்
வல்லவர் எனப் புகழ்ந்தார் அறிவாலர் அறவாணர்

எல்லா நிலைகளிலும் ஏந்தலானார் மணிமொழியன்
வல்லான் சொலல்வல்லான் சோர்விலான் என்றே தான்

திருக்குறள் செம்மலென்று சீர்தந்தார் அடிகளார்
பேரறிவ வாளனெனப் புகந்தார் சண்முகனார்

எல்லோரும் நல்லோராய் ஏற்றம் பெறுவதற்கு
நல்லோன் பின்செல்வோம் என மகிழ்ந்தார் மகாசபையார்

ஊருணிநீர் போன்றிங்கு உதவுகின்ற மணிமொழியார்
பேர்விளங்க நடப்பதுவே மணிமொழியார் வழியேயாகும்
அவர்வழி நடப்பதுவே அவர்வழி சிறப்பேயாகும்

தானும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழவைக்கும் மாமனிதர்கள் சிலர் இருக்கிறார்கள். அதில் சிறப்பிடம் பெறுபவர் திருக்குறள் செம்மல் மணிமொழியனார். மனிதன் இந்த உலகத்துக்கு வரும்போது வெறும் வெள்ளைத் தாளாகத் தான் வருகிறான்.அவன் தான் தன்னைப்பற்றி அதில் எழுதிக் கொள்ள வேண்டும். சிலபேர் கிறுக்கி விடுகிறார்கள். சில பேர் கிழித்து விடுகிறார்கள். சிலபேர் தான் அதில் காவியம் படைக்கிறார்கள். அப்படித் தன் வாழ்க்கையை காவியமாக்கிக் கொண்டவர் மணிமொழியனார்

தனவணிகன் – ஆசிரியர் வி.என்.சிதம்பரம் – 07.12.2008

மதுரை நியூ காலேஜ் ஹவுஸ் அதிபர், திருக்குறள் செம்மல் ந.மணிமொழியன் அவர்களுடன் சந்திப்பு


தங்களின் சொந்த ஊர், பெற்றோர் பற்றிக் கூறுங்களேன்…?

இராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை அருகில் கொட்டகுடி எனது சொந்த ஊர், தந்தை சா.ம.பெரி.நடராஜன் செட்டியார், தாயார் சௌந்தரம்மாள்.

என் மனைவி கமலா தேவி, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும், இந்தியாவிலும் வெற்றிச்செல்வராகவும், பெரும் வணிகராகவும் விளங்கிய வி.கே.கல்யாணசுந்தரனார் – அம்மணி அம்மாள் ஆகியோரின் இரண்டாவது புதல்வி ஆவார்.  எங்களுக்கு கவிதா, டாக்டர் அனுராதா, கார்த்திகேயன், கல்யாணராசன் என நான்கு பிள்ளைகள்.

தங்களின் இளமைக்காலம் பற்றி…?

ஆரம்பக் கல்வியை என் தந்தையார் தொடங்கிய பள்ளியில் படித்தேன்.  பின்னர் காரைக்குடி வள்ளல் அழகப்பர் கலைக்கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றேன்.

மணிமொழியன் என அழைக்கப்படும் உங்களின் இயற்பெயர் என்ன…?

எனக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்போது இலக்கியக் கூட்டங்களுக்குச் செல்வது உண்டு.  அப்போது நண்பர்களின் விருப்பப்படி என் பெயரை மணிமொழியன் என்று மாற்றிக் கொண்டேன்.  அந்தப்பெயரே நிலைத்து விட்டது.

தமிழிலக்கியங்கள் மீது குறிப்பாக திருக்குறள் மீது ஈர்ப்பு ஏற்படக் காரணமென்ன?

எங்கள் குடும்பப் பாரம்பரியம் தான் முதன்மையான காரணம் என்பேன்.

கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே தமிழின் மீதும் இலக்கியத்தின் மீதும் எனக்கு விருப்பம் அதிகம்.  நான் பொருளாதாரம் படித்திருந்தாலும் திருக்குறள் மீது பற்றும், திருவள்ளுவர் மீது பக்கியும் கொண்டிருந்தேன்.  கல்லூரியில் மாணவர் தலைவனாக இருந்தபோது இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராட்டம் நடத்தியிருக்கிறோம்.  தினம் ஒரு திருக்குறளை மனப்பாடம் செய்யத் திட்டமிட்டேன்.  அதன்படி 1330 திருக்குறளும் எனக்கு மனனம் ஆகிவிட்டது.  பள்ளி விழாக்களில் திருக்குறள் பற்றிப் பேசி தலைமையாசிரியரின் பாராட்டையும் பரிசையும் பெற்றுள்ளேன்.

உ.கே. அவர்களின் துணையோடு பயணியர் விடுதிகள், மலையகத் தோட்டத் தொழில்கள், ரியல் எஸ்டேட், நிதியகங்கள், கல்விக்கூடங்கள் போன்ற பல்துறைத தொழில்களை நிர்வகித்து வந்தேன்.  இதில் மதுரை நியூகாலேஜ் ஹவுஸ் விடுதியின் நிர்வாக இயக்குநராக இருந்து வருகின்றேன்.

சொந்தத் தொழில் தொடங்குவது பற்றி உங்களின் அறிவுரை…?

ஒரு தொழிலைத் தொடங்குவதற்குமுன், அந்தத்; தொழிலைப் பற்றிய முழு அறிவும், அனுபவமும் பெற்றிருக்கவேண்டும்.  அந்தத் தொழிலைச் சிறப்பாகச் செய்து வருபவர்களிடம் பணிபுரிந்திருக்க வேண்டும்.  அந்த அனுபவம்தான், தெரழிலில் ஏற்படும் இடையூறுகளை, லாப–நட்டங்களை அறிந்து, அதனை வெற்றி வெற்றி பெறக்கூடிய வழிமுறைகளைத் தெரிந்து  செயல்படவைக்கும்.

தொழிலைப் பற்றி தெரிந்து கொண்டபிறகு தம் கையில் உள்ள மூலதனம், தனது வலிமை, போட்டியாளர்களின் வலிமை, தொழிலின் எதிர்கால நிலைமை இவற்றையெல்லாம் ஆராய்ந்து பார்த்த பின்பே தொழில் தொடங்க வேண்டும்.  கடன் வாங்கி தொழில் செய்வதாக இருந்தால் திருப்பிக் கொடுக்கக்கூடியஅணவிற்கே கடன் வாங்க வேண்டும்.  உறங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களிலெல்லாம் செய்யும் தொழிலைப் பற்றிய சிந்தனையிருக்கவேண்டும்.  சிக்கனம், நாணயம், கடின உழைப்பு, நேர்மை, விடாமுயற்சி, தொழில் பற்றிய சிந்தனை, இடைவிடாத கண்காணிப்பு இவை ஒரு தொழிலில் வெற்றியடைய, நாம் மேற்கொள்ள வேண்டிய அம்சங்களாகும். ஒரு சிலருக்கு இவற்றோடு இறையருளால் அதிர்~;ட வாய்ப்புகளும் கிடைத்தது பெரிய அளவில் உயர்ந்து விடுவதுமுண்டு.

உங்கள் வாழ்வில் திருப்புமுனை என எதைச் சொல்வீர்கள்?

திருமணம் எனது வாழ்வின் திருப்புமுனை. வெற்றிச்செல்வர் திரு.வி.கே.கே.அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் தொழில் துறையில் நேரடி அனுபவமும், வெற்றியும் அடைந்து வருகிறேன். அவரின் சிறந்த குணம், கடின உழைப்பு, விரைவிலும் விரைவு, துணிவு இவற்றோடு, நாளைக்குத்தான் முடிக்கவேண்டும் என்ற காரியத்தை இன்றல்ல நேற்ற முடித்திருக்க வேண்டும் என்றே அவரின் செயல்திறன்களை நான் பின்பற்றி வருவதே எனது வெற்றிக்குக் காரணம்.

தாங்கள் பெற்றுள்ள பட்டங்கள் பதவிகள் பற்றி..?

குன்றக்குடி அடிகளார் தலைமையில் தொடங்கப்பெற்ற உலகத் திருக்குறள் பேரவையின் பொதுச்செயலாளராக இரந்து வருகிறேன்.

ஆகில உலகத் திருக்குறள் ஆராய்ச்சிக் கழகத்தில் நிர்வாக அறங்காவலர். 

தமிழ்நாடு ஆயிர வைசியர் சங்கத்தில் சுமார் 25 ஆண்டுகால மாநிலத் தலைவர் பதவி. 

பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் மதுரை மாவட்டத்தலைவர்.

2002-2003 மேற்கு நோட்டரி சங்கத்தலைவர்.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் வழங்கி சிறப்பித்த திருக்குறள்.செம்மல்.

காஞ்சிப்பெரியவர் வழங்கிய இறைப்பணி மாமணி. 

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வழங்கிச் சிறப்பித்த தமிழ்ச்செம்மல் விருது. 

அமெரிக்கப் பல்கலைக்கழகம் வழங்கிய மதிப்புறு முனைவர் பட்டம்.

மதுரை தமிழ்ச்சங்கத்தின் Áற்றாண்டு விழாவில் தமிழ்ச்சங்கச் சான்றோர் விருதும், பொற்கிழியும் மற்றும் பல விருதுகளும் பெற்றுள்ளேன்.

உலகத் திருக்குறள் பேரவையின் பொதுச்செயலாளாராகயிருந்து திருக்குறள் மேன்மைக்கும், வளர்ச்சிக்கும் உதவி வருகிறேன். மாதம் ஒருமுறை கடைசி சனிக்கிழமை திருக்குறள் நெறி பற்றிய கருத்தரங்கம், Áல்கள் வெளியீடு, சொல்லரங்கம், கவியரங்கம் நடத்தி வருகிறேன். மதுரையில் உலகத் திருக்குறள் மாநாட்டை இருமுறை நடத்தியிருக்கிறேன். இவ்வாறு திருக்குறளின் பெருமைகளைப் பறைசாற்றி வருகிறேன்.

தங்களின் ஆன்மிகப் பணிகள் பற்றி..?

மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலய திருப்பணிக்கு மேற்கு கோபுரம் புதுப்பிக்க பல லட்சம் வழங்கியதும், அழகர்கோவில், நவ திருப்பதி ஆலயங்களின் திருப்பணிக்கு குழுவிலிருந்து கொண்டு சேவைகள் செய்யும் வாய்ப்பையும் பெற்றுள்ளேன்.

தங்கள் சமூகப் பணிகள் பற்றி..?

மதுரை நோட்டரி சங்கத்தில் நான் தலைவராக இருந்த போது அகில இந்திய புத்தகக் கண்காட்சி நடத்தியுள்ளேன். போலியோ பற்றிய விழிப்புணர்வு மருத்துவ முகாம்கள், நலிவுற்றோர் மறுவாழ்வுத் திட்டங்கள் என்று பல நல உதவிகள் செய்துள்ளேன். குறிப்பாக மடீட்சியா அரங்கில் பத்;து நாட்கள் 52 பதிப்பாளர்களை பங்கேற்க வைத்து கருத்தரங்கம், கவியரங்கம், மாணவ, மாணவியர் புத்தகம் வாசிக்கவும், திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் பயிற்சிப் பட்டறை நடத்திப் பயன் பெறச் செய்துள்ளேன். அதன் பலனாக உலக அமைதிக்காக 3000 பேர் பங்கேற்;ற வழிபாடு உலக ஒற்றுமைக்கே வழிகாட்டுதலாக இருந்தது. 

இன்றைய இளைஞர்களுக்கு தாங்கள் கூற விரும்புவது…?

வாழ்க்கையிலும் சரி, தொழிலிலும் சரி முன்னேற வேண்டுமென்றால் கடின உழைப்பும், விடாமுயற்சியும் அவசியம் தேவை. அறிவோடு கூடிய புத்திசாலித்தணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இன்றைய அறிவியல் வளர்ச்சி, இளைஞர்களுக்கு உலகளாகிய நுண்ணறிவைப் பெறக்கூடிய வாய்ப்பையும், வசதிகளையும் பெற்றுத் தந்துள்ளது. அதனை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நல்லவர்களோடும், அறிவு நுட்பமுள்ளவர்களுடைய துணையோடும் ஆலோசனைகளைத் தேடிச் செல்லவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக தம் பெற்றோர்களையும், பெரியோர்களையும் மதித்து அவர்களின் ஆசிகளைப் பெறவேண்டும் எந்நன்றி கொண்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு என்ற வள்ளுவரின் வாக்குபடி செய்நன்றி மறவாது வாழவேண்டும்.

ஆசிரியர் வி-என்-சிடி- அவர்ளைப் பற்றி?

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்  

பின்நீர பேதையார் நட்பு 

என்ற திருக்குறளுக்கு எடுத்துக்காட்டாக திகழ்பவர் அய்யா வி.என்.சி.டி. நல்ல நட்பு என்பது வளர்பிறைபோல் வளர்ந்து நிறைந்து நிற்கும். வி.என்.சிடி. அவர்களின் கள்ளம் கபடமற்ற பேச்சும், நகைச்சுவையுணர்வும் எல்லோரையும் கவரும்படி இருக்கும். போது இடங்களில் என்னையும், எனது துணைவியாரையும் பார்த்துவிட்டால் சக்தியையும் சிவத்தையும் ஒன்றாகக் காண்கிறேன் என்று பாராட்டி மகிழ்வார். பொதுநலம் பேணக்கூடியவர். சமூக ஒற்றுமைக்கு பாடுபடக்கூடியவர். அடக்கம் உடையவர். அனைத்துச் செட்டியார் சமூகங்களை ஒன்றுபடுத்த அவர் ஏற்படுத்திய அமைப்பில் அவர் தலைவராகவும், நான் துணைத்தலைவராகவும் இருந்து வருகிறோம். எங்கள்  இல்ல விழாக்களில் தவறாது கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார். அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவர். மீனாட்சிமைந்தன் என்ற பெயருக்கு முழுத் தகுதி உடையவர். அவரது ஆன்மிகப் பணிகளைக் கண்டு வியந்திருக்கிறேன். அவரின் தனவணிகன் இதழில் என்னைப் பேட்டி கண்டமைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

                                                                                                                                                               தொகுப்பு : திருநாகேஷ

தனவணிகன் – ஆசிரியர் வி.என்.சிதம்பரம் – 07.12.2008

குறள் நெறி வாழும் மனிதநேயச்செம்மல் மணிமொழியன்


திருக்குறள்செம்மல் ந.மணிமொழியன் அவர்கள் நல்ல மனிதர். சிரித்த முகமும். முகத்தில் எந்நேரமும் இறையருள் ஒளிரும் தோற்றமும் கொண்டவர். கலகலப்பாகப் பேசி எல்லோரையும் கவரும் தன்மை மிக்கவர்.திருக்குறள்செம்மல் ந.மணிமொழியன் அவர்கள் நல்ல மனிதர். சிரித்த முகமும். முகத்தில் எந்நேரமும் இறையருள் ஒளிரும் தோற்றமும் கொண்டவர். கலகலப்பாகப் பேசி எல்லோரையும் கவரும் தன்மை மிக்கவர்.

குறள்நெறி பிறழாது வாழ்ந்து வரும் அரிய மனிதர். 1330 திருக்குறளையும். அதற்கான விளக்கங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும் இவரின் தமிழாற்றலும். ஆர்வமும் விசாலமானது. பிரமிக்கத்தக்கது. எந்த நேரத்தில் எந்த அதிகாரத்தில் சந்தேகம் ஏற்பட்டாலும் நிச்சயமாக மணிமொழியனை அழைக்கலாம். இவர் ஒரு நடமாடும் திருக்குறள் கணினி!

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன். மணிமொழியன் அவர்களைப் பற்றி வியந்து பாராட்டியுள்ளார் அதாவது திருவள்ளுவர் எழுதியதோ 1330 குறள்தான். ஆனால் மணிமொழியன் அவர்களோ 3330 குறள்களைச் சொல்லுவார் என்பார். திருக்குறளின் மீதும், திருவள்ளுவர் மீதும் முழு ஈடுபாடும், பக்தியும் கொண்டவர்.

செட்டிநாட்டில், திருவாடானைக்கு அருகில் கொட்டகுடி என்ற குக்கிராமம்தான் இந்த மாமனிதரைப் பெற்றெடுத்துள்ளது. சில நல்லோர்களால் மட்டுமே தன்னை ஈன்ற பெற்றோர்க்கும். வளந்த ஊருக்கும் பெருமை ஏறபடும். கொட்டகுடி அந்தப் பெருமையைப் பெற்றிருக்கிறது. இவரது முன்னோரைப் பற்றி நான் கேள்விப்பட்டதுண்டு.

இவரது பாட்டனார் பெரியண்ணன் செட்டியாரும் ஒரு புலவர். அதாவது ஆசுகவி. (நினைத்தவுடனேயோ. பார்த்தவுடனேயோ அந்தக் கணத்தில் கவியாற்றும் திறன் கொண்டோரை ஆசுகவி என்பர். அதுவும்  மரபிலக்கணம் மீறாமல் கவியாற்றுதல் என்பது ஆசுகவியால் மட்டுமே பாடமுடியும் என்பர்) இவரது தந்தை நடராஜன் செட்டியாரும் தமிழில் புலமை பெற்றவர். வள்ளலாரின் சமரச சன்மார்க் தொண்டராக விளங்கியவர். இவர் ஏராளமான பக்திப் பாடல்களையும். சமய இலக்கியங்களையும் படைத்த படைப்பாளி. இவர் எழுதிய அரிய Áல்களே அதற்கான சான்றுகளாகத் திகழ்கின்றன. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பார்கள். ஆனால் மணிமொழியன் முப்பத்திரெண்டடி பாயும் திறன் கொண்டவர். 

தமிழ்ப்புலமையின் வழி வந்த மணிமொழியன் திருவள்ளுவர் இன்றைக்குப் பார்த்தால் இவரைத் தன் மகனாகத் தத்தெடுத்து. இவரின் காலேஜ் ஹவுஸிலேயே தங்கியிருப்பார். அதற்கான முழுத்தகுதியும் உடையவர் மணிமொழியன்.

இவரது மாமனார் வி.கே.கல்யாணசுந்தரம் பெரும் வணிகச் செல்வந்தர். சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும், இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் சிறந்து விளங்கும் பெரும் வணிகர். அவரது புதல்வி கமலாதேவி மணிமொழியன் துணைவியார். நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்பார்களே. அதுபோல மகன்-மருமகள், மகள் – மருமகன் என இவரது குடும்பம் (காலேஜ் ஹவுஸ் போன்று) கலகலப்பானது.

இவரின் மாமனார் பெரும் தனவந்தர் என்றாலும் கூட இவர் தனது சொந்த உழைப்பால் உயர்ந்து வரும் தன்னம்பிக்கைவாதி. மாமனாரின் சொத்துக்கள் மீது மட்டுமே குறியாகத் திரியும் மருமகன்கள் வாழும் சமுதாயத்தில் மாமனாரின் பெருமைக்கும், பேரன்புக்கும் மட்டுமே உரியராகத் திகழும் பெருமகன் என மணிமொழியனைப் போற்றுகிறேன். பலருக்கு இவர் உதாரணமாகத் திகழ்கிறார். 

தமிழ்க்கவிஞர்கள், புலவர்கள் யாவரையும் ஆதரிக்கும் தமிழ் இல்லமாக காலேஜ் ஹவுஸ் விளங்குகிறது. மணிமொழியின் அதில் தமிழ்ப்புரவலராக இருந்து வருகிறார்.

பெரும் அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், ஆளும் கட்சி. எதிர்கட்சி ஆகியோரின் ஒருமித்த அன்பைப் பெற்றவர் மணிமொழியன்.

மணியான தமிழை மொழியும் இவரின் வாழ்க்கை நிகழ்வுகள் ஒவ்வொன்றும் ஓர் அனுபவம். தனவணிகன் வாசகர்களுக்கு இவரின் பேட்டியை வழங்குவதில் பெருமை கொள்கிறேன். 

பி.டி.ஆர்.பழனிவேல் ராசன்        நாள்: 30.10.1991

அணிந்துரை

அருமை நண்பர் திருக்குறட் செல்வர் திரு.ந.மணிமொழியன் அவர்களின் ‘இலக்கியம் பேசி மகிழவோ’ என்ற கட்டுரை விருந்தினைப் படித்துச் சுவைத்தேன். ‘இலக்கியம் பேசி மகிழவோ’ என்ற கட்டுரை தொடங்கி 20 கட்டுரைகளில் ஆசிரியர் தம் கருத்துக்களை எளிய தமிழில் அழகாக வடித்துத் தந்திருக்கின்றார். ஓவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும் திருக்குறள் அல்லது ஒரு சிறந்த கருத்து கட்டுரையைத் தொடர்ந்து படிக்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளமை. கட்டுரையின் மையக்கருத்தைச் சொல்லும் வகையில் அமைந்து சிறப்பூட்டுகின்றன.

அறம் செய்தலின் இன்றியமையாமை, இலக்கியத்தைச் சுவைக்கத் தொலைக்காட்சி போண்ற தொடர்பியல் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டியதன் தேவை, தமிழிசையின் சிறப்பு, அதனைப் பரப்பவேண்டிய தேவை போன்ற பல்வேறு நல்ல கருத்துக்கள் இக்கட்டுரைகளில் வலியுறுத்தப்பெற்றுள்ளன. என் சிறய தகப்பனார் ஆயிரம் பிறைகண்ட அளகேசனார் பற்றியும் இராமேசுவரம் பற்றியும் கட்டுரைகள் அமைந்து பல்சுவை விருந்தாக அமைந்துள்ளன.

தமிழ் மக்கள் இக்கட்டுரை விருந்தினைச் சுவைத்து மகிந்து பாராட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை, திரு.மணிமொழியனின் நல்ல சிந்தனைகள் நமக்கு வழிகாட்டியாய் அமைவன. அவருக்கு என வாழ்த்துக்கள்.

வளர்க அவர்தம் தமிழ்த்தொண்டு.

அன்பன்,

பி.டி.ஆர். பழனிவேல்ராசன்

ந.மணிமொழியன் அவர்கள் தனது 71 வது வயதில் நவம்பர் 13ம், 2016ல் சென்னையில் காலமானார். மதுரை சொக்கி குளம் புலபாய் தேசாய் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இறுதிச் சடங்கு 2016, நவம்பர் 14ல் நடந்தது.
” உலகத் திருக்குறள் பேரவையின் பொதுச்செயலர் ந.மணிமொழியனார் மறைவு திருக்குறள் அறிஞர்களுக்கும், தொண்டர்களுக்கும், மாணவர்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். நடமாடும் திருக்குறள் பேரவையாக விளங்கிய அந்த பெருந்தகையின் மறைவு தமிழ்கூறும் நல்லுலகிற்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்பு. அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம் ” என குன்னக்குடி பொன்னம்பல தேசிகர் இரங்கல் செய்தி வெளியிட்டார்.
“திருக்குறள் மணிமொழியன் காலமானார் என்ற செய்தி அறிந்து கலங்கிப் போனேன். மதுரை மாநகரின் மாமனிதர் மறைந்து போனார். புலவர்க்குப் புலவராகவும், புரவலர்க்குப் புரவலராகவும் திகழ்ந்த ஒரு தமிழ்க் கொடையாளரை இழந்துவிட்டோமே என இலக்கிய இதயம் சிதறி நிற்கிறது. குறளுக்கு பொருள் தந்தார், தான் ஈட்டிய பொருள் தந்தும் குறள் வளர்த்தார். அவர் குறளைக் கற்றவர் மட்டும் அல்லர். கற்றபின் அதற்குத் தக நின்றவரும் அவரேதான். எங்கள் தமிழ் உலகம் தோள்கொடுக்கும் ஒரு தோழமையை இழந்துவிட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நான்கு கோபுரங்கள். ஆனால், மதுரையில் திருக்குறளுக்கு ஒரே ஒரு கோபுரம்தான். அது மணிமொழியன் தான். அதுவும் சாய்ந்து விட்டதே என்று ஓய்ந்து நிற்கிறோம். அவரை இழந்து வாடும் பண்பாடுமிக்க அவர்தம் குடும்பத்தார்க்கும், நிறுவன ஊழியர்களுக்கும், தமிழ் அன்பர்களுக்கும், இலக்கிய அமைப்புகளுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என கவிப்பேரரசு வைரமுத்து தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டார்.

3545total visits,7visits today