“ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங்குறளும்
பாயிரத்தினோடு பகர்ந்ததற்பின் & போய் ஒருத்தர்
வாய்க்கேட்க நூலுளவோ…?”
என்று திருக்குறளுக்குப் புகழஞ்சலியாக விளங்கும் திருவள்ளுவ மாலையைத் தொகுத்துள்ள நத்தத்தனார் பாடினார். இப்பாடலைப் படித்த போதெல்லாம் இளமைப் பருவத்திலேயே என் மனத்தில் கேள்வி ஒன்று எழுந்தது. “1330 அருங்குறளையும் மனப்பாடம் போலப் படித்துவிட முடியுமா?” எனும் அக்கேள்விக்கு, “ஏன் முடியாது? முயன்று தான் பார்ப்போமே!” எனும் உறுதி பிறந்தது. நான் வளர்ந்த காரைக்குடிக் கம்பன் கழகமும் திருக்குறள் மன்றமும் தமிழ் உணர்வூட்டிய கல்விச்சூழல் அந்த உறுதிக்கு மேலும் உரம் ஊட்டியது. வாரம் ஓர் அதிகாரம் என எனக்குள் எல்லை கட்டிக்கொண்டு குறள் கருத்துக்களை என் நினைவுத் தவிசில் ஏற்றுக்கொள்ள முயன்றேன். தங்கத்தின் தரத்தை உரை கல்லில் தேய்த்து மாற்றுப் பார்ப்பதைப் போல, வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு எல்லாம் திருக்குறளை உரைகல்லாகக் கொள்ளமுடியும் எனத் தெளிவு பெற்று வந்தேன். யார், எந்தக் கருத்தைச் சொல்லக் கேட்டாலும் இதனை வள்ளுவர் எப்படிச் சொல்லியிருக்கிறார் எனத் தேடி துருவத் தலைப்பட்டேன். குறட்பாக்களின் அருமையும் பெருமையும் ஆழமும் விரிவும் என்னை மேலும் மேலும் கருத்தூன்றிப் படிக்கத் தூண்டின. ஒரு நூலிலாவது நல்ல பயன் தரும் தேர்ச்சி பெற வேண்டும் என்ற என் ஆசைக்கு ஓர் அளவுகோலாகக் குறட்பாக்கள் அமைந்துவந்தன. வாழ்வின் புதிய அனுபவங் களுக்கு உட்பட்ட போதெல்லாம், வற்றாச் சுரங்கமாகவும் வழிகாட்டும் வான் விளக்காகவும் எனக்குக் குறள் நெறிகள் விளங்கத் தொடங்கின. இயன்ற வகையில் எல்லாம், தனிமுறையிலும் பொது வகையிலும் குறள்நெறிச் சீலங்களைப் பரப்பி வாழவேண்டும் எனும் உணர்வினை நாள்தோறும் என்னுள் புதுக்கி வந்தன.
தமிழ் மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் பல்லாண்டுகள் இயங்கி வரும் தமிழ்நாடு திருக்குறள் பேரவையின் (பொதுச் செயலர்) பொறுப்பேற்ற நாள்தொட்டு வாழும் வாழ்க்கைக்கும் காலத்திற்கும் பொருந்தும் வகையில் குறள் நெறிகளைப் பரப்ப வேண்டும் எனும் நோக்கத்தினைச் செயல்படுத்த முற்பட்டோம். ‘செய்க பொருளை’ எனும் சிந்தனைத் தலைப்பில், அறிஞர், அறிவியலாளர், தொழில் அதிபர், இளைஞர் முதலிய பல்வகைச் சமுதாயப் பிரிவினரையும் கருத்தரங்கேறச் செய்தோம். அக்கருத்தரங்கு புதிய புதிய செயல் திட்டங் களுக்கு வருக எனக் கைகாட்டி அழைக்கக் கண்டோம். முன்னோடித் திட்டமாக, ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து, ஒருங்கிணைந்த வள்ளுவர் நெறி வளர்ச்சியை அங்கு நடைமுறையாக்க முற்பட்டோம்.
உலகத் தமிழ் மாநாட்டு நினைவாக, தமிழ்நாட்டின் முதல் மூன்று பல்கலைக்கழகங்களில் திருக்குறள் ஆய்வுக்கான நிதிக்கட்டளை ஒன்று அரசு சார்பில் ஏற்கனவே நிறுவப்பட்டு, திருக்குறள் ஆராய்ச்சித் துறைகள் இயங்கி வந்தன. என்றாலும் உலகளாவிய வண்ணம், பிற நாடுகளில் வாழும் தமிழ் மக்களோடு தொடர்பு கொள்ளும் வகையில் ‘உலகத் திருக்குறள் ஆராய்ச்சி மையம்’ ஒன்றினை, திருக்குறள் அரங்கேறிய சங்கத் தமிழ் மதுரையில் நிறுவ வேண்டும் எனும் தமிழ் மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் கனவினை நனவாக்கும் காலம் கனிந்தது. மதுரையில் பன்னாட்டுத் திருக்குறள் ஆராய்ச்சி மைய அறக் கட்டளையினை நிறுவப் பதிவு செய்தோம். இதனைக் கேள்வியுற்ற அமெரிக்கத் தமிழ் அன்பர்கள், அங்கு சிக்காகோவில் ஆண்டுதோறும் நிகழும் மாநாட்டிற்கு வருமாறு சிக்காகோ திரு.பி.ஜி.எம். நாராயணன், திரு.வெங்கட்ட ராமானுஜம் ஆகியோர் எனக்கு அழைப்பு விடுத்தனர். மதுரையில் திரு.பன்னீர் செல்வம், திருமதி. லதா பன்னீர்செல்வம் (மகாத்மா மாண்டிசோரி) இருவரின் முயற்சியும் தூண்டுதலும் என்னை ஊக்குவித்தன.
தொழில் காரணமாகவும் சுற்றுலா விழைவு காரணமாகவும் ஏற்கனவே பல நாடுகளுக்குச் சென்று வரும் வாய்ப்புகளைப் பெற்றிருந்தேன். எனினும் இந்தத் திருக்குறள் பயண அழைப்பு முற்றிலும் புதுமையாகத் தோன்றியது. நாடு கடந்து வாழும் தமிழர்களின் தாய் நாட்டுப் பற்றையும் மொழி உணர்வையும் நேரில் அறியும் சந்தர்ப்பங்களையும் தருவதாக இது அமைந்தது.
பயணம் செல்வது இனியதொரு வாழ்க்கை அனுபவம். எத்தகைய உணர்வோடும் அறிவு நாட்டத்தோடும் பயணம் புறப்படுகிறோமோ, அவ்வுணர்வையும் நாட்டத்தையும் மேலும் அதிகமாகப் பெற்றுத் திரும்பச் செய்யும் பயன்மிகு முயற்சி; கையில் உள்ள பணத்தைச் செலவிட்டு, மூளைக்குள்ளே புதுப்புதுச் செய்திகளை அடக்கிக் கொண்டு வரும் வாழ்க்கை வாலிபம்; ஒவ்வொரு ரோஜாச் செடியிலும் முள் இருக்கிறது எனத் தெரிந்திருந்தும் அதனூடே மலர்ந்திருக்கும் பூவிலிருந்து தேனை மட்டும் மாந்தி வரும் தேனீயின் உழைப்புப் போன்றதொரு செயல்திறம்; சரக்கு மூட்டைகளை வண்டியில் ஏற்றிச் செல்வது போலப் போய்வராமல், உணர்வாக்கம் கொண்டதொரு பகுத்தறிவோடு ஊர் சுற்றிவரச் செய்யும் கலைத்திறன்; நமது வீடு, நாடு எனும் குறுகிய வரையறைக்குள் இருந்து பழகிப் போனவர்களின் பார்வையினை, ‘பெரிதே உலகம், பேணுநர் பலரே!’ எனும் எல்லைக்கு விரிவுறச் செய்யும் இரசவாதம்; எப்பொருள் எத்தன்மையதாயினும் அப் பொருளை மெய்ப்பொருளாக நேரடியாகக் காணச்செய்யும் அறிவுத் தேட்டம்…
வரலாற்றிலும் இலக்கியத்திலும் பல நாடுகாண் காதைகள் அரங்கேறியுள்ளன; சமய அனுசாரமும், வாணிப ஆதாயமும் பல ஊர்காண் காதைகளை உருவாக்கியுள்ளன. ஒவ்வொரு மனிதனின் தேவைக்கும் உரிய வகையில் பல்வேறு வகையான பயணங்கள் அன்றாட வாழ்வில் நிகழ்ந்தேறியே வருகின்றன.
என் வாழ்வெல்லாம், மனமெல்லாம் ஆட்கொண்ட ஒரே நூலாகத் திகழும் திருக்குறள் வழியாக இப்பயண வாய்ப்பினை வெளிநாட்டுத் தமிழன்பர்கள் எனக்கு அளித்தனர். எனவே ஒரு நாட்டுப் பயணமாக மட்டும் இந்த வாய்ப்பினைக் குறுக்கிக் கொள்ளாமல், பல நாட்டுப் பயணமாக விரித்து அந்த அழைப்பினைத் திட்டமிட்டு அமைத்துக் கொள்ளத் தீர்மானித்தேன். மேற்கு நாடுகள் சிலவற்றில் வாழும் என் இனிய நண்பர்களுக்கு என் வருகை பற்றி, திருக்குறள் பயணம் பற்றி எழுதினேன்.
தமிழ் மக்கள் உலகின் பல நாடுகளில் உரிமைபெற்ற குடிமக்களாக வாழ்ந்து வருகின்றனர். இந்திய மொழிகளில், உலகெல்லாம் பரவிய சிறப்புக்கு உரியதாகத் தமிழ்மொழி திகழ்கிறது. ஓரிரு நாடுகளில் ஆட்சி மொழியாகவும் பெருமை பெற்று விளங்குகிறது. பல்வேறு நாடுகளில் பன்னெடுங்காலமாகக் குடியேறி வாழும் நம் மக்களைத் தமது சொந்த நாட்டோடும் புராதனப் பண்பாட்டோடும் உறவுக் கயிறு அறுந்து போகாமல் இணைத்து வைக்கும் பாலமாகத் தமிழ் மொழியே விளங்குகிறது.
ஆனால் அண்மைக் காலங்களில் இந்த உறவுக் கயிறு வலுவிழந்தும் இணைப்புப் பாலம் செயல் இழந்தும் போகக்கூடிய அரசியல், மற்றும் சமூக வாழ்க்கை நெருக்கடிகள் ஆங்காங்கு ஏற்பட்டன. எனவேதான், உலகத் தமிழ் மாநாடு கூட்டி உரமேற்றும் முயற்சிகளும் தாய்நாட்டு அன்பர்களைத் தம்மிடத்திற்கு வரவழைத்து உறவேற்கும் மலர்ச்சிகளும் அணிவகுத்து வருகின்றன.
தேமதுரத் தமிழோசையினை உலகின் பல நாடு களிலும் செவிமடுத்துக் கேட்கும் விழாக்கள் அமைக்கப் பட்டு வருகின்றன. உலகப் பொதுமறையாகத் திருக்குறளை நிலைப்படுத்தும் ஆக்கங்களும் அரும்பு கட்டி வருகின்றன.
எப்பாலவரும் ஏற்கும் சிறப்புடையது முப்பாலாக அமைந்த திருக்குறள். அறம் பொருள் இன்பம் எனும் இம்முப்பால் பாகுபாடு, அனைத்து மக்களுக்கும் உரிய அடிப்படை வாழ்க்கைப் படி முறையாக சங்க இலக்கியம் தொட்டே வரன்முறைப்படுத்தப்பட்டு அமைந்தது.
“அந்நில மருங்கின் அறமுத லாகிய
மும்முதற் பொருட்கும் உரிய என்ப”
எனத் தொல்காப்பியமும்,
“அறம் பொருள் இன்பம் என்று அம்மூன்றும்”
எனக் கலித்தொகையும்,
“அறமும் பொருளும் இன்பமும் மூன்றும்
ஆற்றும் பெரும நின் செல்வம்”
எனப் புறநானூறும்,
“அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து
தீதின்றி வந்த பொருள்” (754)
எனத் திருக்குறளும், முப்பால் மரபினை முழுதுலகிற்கும் பொதுவாக அறிவித்துள்ளன.
அறம் பொருள் இன்பம் எனும் முத்துறைகள் பற்றியும் முழுமையான, முதன்மையான அறங்களைச் செவ்வனே வகுத்துச் சொல்லும் ஒரே நூலாக, ஒரே ஆசானால் எழுதப்பட்ட ஈடற்ற சிந்தனை நூலாக, செயல் நூலாகத் திருக்குறள் மட்டுமே போற்றப்படுகிறது. மறு உலக அச்சம் காட்டியோ, ஆசை காட்டியோ ஒழுக்கங்களை வற்புறுத்தாமல், இவ்வுலக வாழ்வின் உண்மை, நன்மை ஆகியவற்றை மட்டுமே கருதி, தனிநபர், சமுதாய நடைமுறைகளை வரன்முறைப்படுத்தும் வாழ்க்கை நூலாகத் திருக்குறள் மட்டுமே நிலைபெற்று விளங்குகிறது. எனவே சுவையான கரும்பு தின்னக் கூலியும் கிடைத்ததைப் போல் கருதி எனக்குக் கிட்டிய திருக்குறள் பயணத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டேன்.
திருவள்ளுவர் தாம் வாழ்ந்த காலத்தில் மட்டுமன்றி நாம் வாழும் காலத்திற்கும் பொருத்தமாகச் சமுதாயச் சிக்கலுக்கு அறவியல் தீர்வு காண்கின்றார்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கும், துன்பம், கவலை நீங்கி இன்பம் இடையறாது பெறுவதற்கும் அமைதியும் முழுமையும் நிறைவும் பெறவும் வள்ளுவம் வழிகாட்டுகிறது.
“யாதானும் நாடாமால் ஊராமால் என்ஒருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.” (397)
எனும் குறட்பா உலகோர் அனைவருக்கும் பொது நிலையறம் புகட்டுகிறது.
8520total visits,7visits today